நீ தெய்வீக சுகம் பெற வேண்டுமா?

Written by Pr Thomas Walker

March 22, 2011


கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இந்த கடைசி காலங்களில் மனிதனுடைய சரீரத்தை பலவிதமான புதிய நோய்கள் தாக்குகின்றன. சரீரத்தில் மட்டுமல்ல, ஆத்துமாவையும் பல நோய்கள் தாக்குகின்றன. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். “…வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். …உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்” என்று வாக்குத்தத்தம் செய்தவர் (யாத்.23:25,26) மாறாதவர். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் சீஷர்களை அனுப்பினார் (லூக்.9:2). தேவன் நோய் வராமலே நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறார். கர்த்தர் நோய் வந்தபின்பும் குணமாக்குகிறார். தேவனின் செட்டைகளின் கீழ் வந்த எந்த மனிதனுக்கும் ஆரோக்கியம் உண்டு. தேவன் மனிதன் சுகமாக, சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

1. தெய்வீக சுகத்தைப் பெற்று அனுபவிக்க நாம் என்ன செய்யவேண்டும்?
தேவன் எசேக்கியாவின் வாழ்க்கையில் அவனுக்கு வந்த வியாதியை எவ்வாறு குணமாக்கினார் என்று பார்ப்போம். இந்த சம்பவத்தை ஏசாயா 38ஆம் அதிகாரத்திலும் 2நாளா.32ஆம் அதிகாரத்திலும் பார்க்கலாம்.

 முதலாவதுதேவனை நோக்கி ஜெபம் செய்தான்
2நாளா.32:24 வசனத்தில், “…எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.” தேவனுடைய பிள்ளையே நீ கர்த்தரை நோக்கி, வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜெபித்தால் தேவன் அற்புதத்தைக் கட்டளையிடுவார்.

 இரண்டாவதாகவீட்டுக் காரியத்தை ஒழுங்கு படுத்தினான்
ஏசா.38:1 வசனத்தில், “…எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று கூறியதும், தன் வாழ்க்கையை சரிப்படுத்த தேவன் எச்சரித்ததாக கருதி தேவனை நோக்கி மன்றாடினான். நம் வாழ்க்கையை தேவனோடும், மனிதரோடும் சமாதானமுள்ளதாக ஒழுங்குபடுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கடன் இருக்கக்கூடாது.

 மூன்றாவதாகதனிமையில் அந்தரங்கத்தில் தேவனை நோக்கி ஜெபித்தான்
ஏசா.38:2,3 வசனங்களில், “…சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.” யாக்கோபு கூட தனித்திருந்து ஆற்றங்கரையில் இராமுழுவதும் போராடி ஜெபித்து வெற்றி கண்டான்.

 நான்காவதுதேவ நீதியின்படி, கிருபையினால் அற்புதம் என்று விசுவாசிக்க வேண்டும்
மத்.8:17 வசனத்தில், “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்…” அவருடைய தழும்புகளால் நாம் சுகமாகிறோம்.

 ஐந்தாவதுகண்ணீரோடு ஜெபிக்க வேண்டும்
எபி.5:7 வசனத்தில், “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” சுய பரிதாபம் இருக்கக் கூடாது.

 ஆறாவதாககசப்பு இருக்கக் கூடாது
எபி.12:14,15 வசனங்களில், “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும், யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்…எச்சரிக்கையாயிருங்கள்” யார் மீதும் கசப்பு இருக்கக் கூடாது.

2. தெய்வீக சுகம் பெற தடையாக இருப்பது எது?

) தன்னை நீதிமான் என்று சொல்லக்கூடாது
யோபு 1:1 வசனத்தில், “…அந்த மனுஷன்(யோபு) உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” யோபு தன்னை நீதிமான் என்று சொன்னான். அதாவது யோபு 6:29; 9:17; 10:7 வசனங்களில், “…என் நீதி அதிலே விளங்கும்” என்றும், “அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.” மேலும் யோபு 10:7 வசனத்தில், “நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை” என்கிறார். யோபு சுயநீதியுள்ளவராக காணப்பட்டார். யோபு 29:14; 33:9 வசனங்களில், “நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.” மேலும் யோபு 33:9,10 வசனங்களில், “நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை. இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.”

) பயம் இருக்கக் கூடாது (யோபு 3:25,26)
“நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.”

) தேவனே தன்னை சோதித்தார் என்றான், தேவனை குற்றப்படுத்துவது நாம் சுகம் பெற தடையை ஏற்படுத்துகிறது
யோபு 1:21 வசனத்தில் “…கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.” ஆனால் யோபுவை சோதித்தது சாத்தான். யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

) அவிசுவாசம் பெரிய தடை
சாத்தான் தீமை செய்தாலும் தேவன் நன்மையாக முடியப்பண்ணுவார் என்று விசுவாசிக்க வேண்டும். ரோம.8:28 வசனத்தில், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” யோபு 19:25, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்று விசுவாசித்தார்.

3. தடை எப்படி நீங்கும்?

) நண்பர்களுக்காக ஜெபித்தால் தடை நீங்கும்
யோபு 42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.” வியாதி ஒரு சிறையிருப்பைப் போன்றது. தேவன் தான் வியாதியிலிருந்து நமக்கு விடுதலை தர முடியும்.


இதை வாசிக்கும் அன்பு நண்பரே! நாம் தெய்வீக சுகத்தைப் பெற்று அனுபவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். யாக்.5:16 வசனத்தில், “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என்கிறார். தேவன் பேரில் விசுவாசத்துடன் நமது சுயநீதிகளையெல்லாம் அறிக்கை செய்து, தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடி கண்ணீருடன் ஜெபித்தால், நாம் தெய்வீக சுகத்தைப் பெற்று அனுபவிக்கலாம். நீங்கள் தாயின் வயிற்றிலிருக்கும்போதே உங்களுடைய கருவைக் கண்டவர் (சங்.139:16). அவரே ஒவ்வொரு அவயவங்களையும் சிருஷ்டித்தார் (உபா.4:32). உங்களை சிருஷ்டித்த அவருக்கு உங்களை குணமாக்குவது எளிதான காரியம்!
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This