கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்…” என்று கட்டளை கொடுத்தார் என்பதை மத்.28:18,19 வசனங்களில் பார்க்கலாம். இது இயேசுவின் பிரதான கட்டளை. இயேசுவுக்கு சீஷர் என்றால் என்ன? சீஷத்துவம் என்றால் என்ன? என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும். சீஷத்துவம் என்பது நிபந்தனை இல்லாமல் உத்தமமாய் அவரைப் பின்பற்றி வரவேண்டும். சதுசேயர், பரிசேயர் அன்று மக்களை தங்கள் மார்க்கத்தாராக மாற்ற மிகவும் பிரயாசப்பட்டனர். இன்றும் கிறிஸ்தவனாக மார்க்கத்தில் சேர்க்கிற ஊழியம் பணத்தாலும், பொருளாலும் நடைபெறுகிறது. இது மிகவும் சுலபமான காரியம். ஆனால் தேவனுக்கு சீஷனாக அர்ப்பணிக்கப்பட்டவனாக ஒரு மனிதனை மாற்றுவதே நமது பிரதான வேலை. யார் உண்மையான சீஷன்? என்று பார்ப்போம்.
முதலாவதாக – சீஷன் என்பவன் கற்றுக்கொள்பவன்
சீஷன் ஆயுள் முழுவதும் ஆண்டவர் பாதத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மத்.11:28,29 வசனங்களில் வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார். நுகத்தை ஏற்றுக்கொண்ட பின்பே கற்றுக்கொள்ள முடியும். நுகம் என்பது தேவனுடைய ஆளுகையை ஏற்பதைக் குறிக்கிறது. பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உண்மையாக கற்றுக்கொள்ள விரும்பினால் நுகத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இரண்டாவதாக – சீஷன் என்பவன் பின்செல்பவன்
ஆண்டவருக்குப் பின்செல்வது கடினமே. 3 வித ஆட்கள் பின் செல்ல விரும்புகிறார்கள். சுகபோகமாய் பின் செல்ல விரும்புகிறார்கள்.
நன்றாக உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறவன், தேவன் எதிர்பார்ப்பது ஆண்டவருக்காக பாடுபடும் கூட்டம் எங்கே போனாலும் பின் செல்பவனே சீஷன். ஆடம்பரத்தையும், சுகபோகத்தையும் விரும்புகிறவன் உண்மையான சீஷனாக இருக்க முடியாது. இயேசு கூறினார், நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. ஆனால் மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை. தேவனுக்குப் பின்செல்ல விரும்புபவன் சொத்து, வீடு, ஆஸ்தி, அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
தன் குடும்பத்துக்கும், தன் உறவினருக்கும் முதலிடம் கொடுப்பவன், மாம்சத்தை பிரியப்படுத்த விரும்புபவன், முன்பு போய் தாய் தந்தையரை அடக்கம் பண்ண போய்விட்டு பின்பு பின் செல்வேன் என்றவன், முதலிடம் முன்னுரிமை தேவனுக்குக் கொடுப்பவனே உண்மை சீஷன். முதலாவது தேவன் கூறியதைச் செய்பவனே உண்மையான சீஷன். மாம்சத்துடனும் இரத்தத்துடனும் ஆலோசனை செய்யாமல் பவுலைப் போல தேவனுக்குப் பின்செல்பவனே உண்மை சீஷன்.
தேவனுக்கு முன்னுரிமை கொடாதவர்கள், தேவனுக்கு கீழ்ப்படிவதில் முன் உரிமை கொடாதவர்கள். தாமதமாக சுறுசுறுப்பு இல்லாமல், அலட்சியமாக செய்பவர்கள் ‘குடும்பத்தில் போய் வழியனுப்பி விட்டு வந்து பின்செல்கிறேன் என்பவன், தேவனுக்கு உடனே கீழ்ப்படிபவனே சீஷனாக முடியும். தேவன் சுறுசுறுப்புள்ளவனையே அழைக்கிறார். தேவனுக்கு முன் உரிமை கொடுத்து செயல்படுகிறவர்களையே தேவன் அழைக்கிறார்.
மூன்றாவதாக – சீஷன் என்பவன் பயிற்சி பெறுபவன்
ஆவியானவர் வேத பாடங்களைப் போதிக்கிறார், பயிற்சியளிக்கிறார். ஆண்டவர் பாதத்தில் அமர்ந்திருக்க வேண்டும். எந்த தொழிலைச் செய்யவும் பயிற்சி தேவை. ஜெபிக்கவோ, தியானிக்கவோ நன்கு பயிற்சி பெற்று தேறினவனாக மாற வேண்டும்.
சீஷத்துவத்தில் சில நிபந்தனைகள் உண்டு
இயேசு தம் சீஷர்கள் முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். சீஷன் அவர் கட்டளைகளுக்கு நிபந்தனையின்றி உடனே கீழ்ப்படிய வேண்டும். சீஷன் ஒரு நல்ல போர் வீரனைப் போல தம் வாழ்க்கையை முற்றிலுமாக தன் தேசத்திற்காக ஒப்புக்கொடுப்பது போல தன்னை முழுவதும் ஆண்டவரின் பணியில் தியாகமாக, அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்த வேண்டும். சில மணி நேரம் கொடுப்பதோ அல்லது வாரத்தின் கடைசி நாட்களை கொடுப்பதோ அல்ல. தேவனுக்காக முழுவதும் கொடுப்பது அவசியம்.
நிபந்தனைகள்
முதலாவது – தேவனை நேசிக்க வேண்டும்
லூக்.14:26 வசனத்தில், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” இதன் உட்கருத்து (உபா.6ஆம் அதிகாரம்) கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றைக் காட்டிலும் தேவனிடம் அதிகமாக அன்புகூறுவது அவசியம். ஆண்டவர் மேல் உன்னதமான அன்பு காட்டுவது, எபேசு சபையைப் பற்றி 9 பாராட்டுகளை தேவன் புகழ்ந்து சொல்லியும், ஆதி அன்பு இல்லை என்பதே பெரிய குறை. ஆண்டவரிடம் அன்பு கூறும் ஆட்களையே தேவன் தேடுகிறார்.
அன்பு மற்றவற்றின் மேல் சிதறக்கூடாது. அன்பு தேவன் மேலேயே அதிகமாக இருக்க வேண்டும். ஆழமானதாய், நிலைத்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக – சீஷன் சுயத்தை வெறுக்க வேண்டும்
தன்னைத் தான் வெறுக்க வேண்டும். சுய வெறுப்பு மனிதரால் எளிதாக செய்யக்கூடும். ஆனால் சுயமறுப்பு என்பது கடினமான ஒன்றாகும். கொடுப்பது சுலபம், இது சுய வெறுப்பு ஆகும். 1கொரி.13:1,2,3 வசனங்களில், எல்லாவற்றையும் அன்னதானம் பண்ணுவது, சரீரத்தைச் சுட்டெரிக்கப்பட கொடுப்பது – இவையெல்லாம் சுயவெறுப்பு ஆகும்.
ஆனால் சுயமறுப்பு என்பது எல்லா – உரிமையையும் தேவனுக்கு கொடுப்பது, மரியாதை கௌரவம் தேடாமல் தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடுப்பது ஆகும். எளிய உடை, உணவு, சுயவெறுப்பு ஆகும். சுயமறுப்பு என்பது கௌரவம், மரியாதை பாதிக்கப்படுவதாகும். சுயத்துக்கு சாவதுதான் இது.
மூன்றாவதாக – சீஷன் சிலுவையை எடுக்க வேண்டும்
சிலுவை என்பது கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடு, நிந்தை, கஷ்டங்களைச் சகிப்பது சிலுவை. ஆண்டவருக்காக ஜீவிப்பதால் வரும் கஷ்டங்களே சிலுவையாகும். மனப்பூர்வமாக சிலுவையை சுமக்க வேண்டும். மதிப்பற்ற நிந்தை நிறைந்த பாதையே சிலுவை ஆகும்.
உலகத்தோடு ஒத்துப்போனால் சிலுவையே இல்லை. பிரச்சனையே இல்லை. (ஒரு பொய், ஒரு எதிர்ப்பு, சண்டை). நெகேமியா கூறுவது நான் இறங்கி வரமுடியாது என்பதே. உன்னதமான நிலையே சீஷனின் நிலை இறங்க கூடாது. உலகத்துக்கு ஒத்துப்போகக் கூடாது.
தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிவது என்பது நாம் நம்மை செலவுபண்ணும்படியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
நான்காவதாக – தன் சிலுவையை எடுத்துக்கொண்டு பின் செல்ல வேண்டும்
முற்றிலும் ஒப்புக்கொடுத்த ஜீவியம். இயேசுவின் அடிச்சுவடுகளில் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். யோவான் 10:10 வசனத்தில், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”.
ஆடுகள் மேய்ப்பனின் பின்செல்ல வேண்டும். யூதேயா மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு முன்னே தான் செல்வார்கள். ஆடுகள் பின் செல்லும்.
பரிசுத்த ஆவியின் பெலனால் மட்டுமே பின்செல்ல முடியும். பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் தன்னலம் கருதாமல், பிறருக்கான காரியங்களையும் கவனிப்பது. தேவ சாயலாக மாறி தேவனைப் போல ஆக வேண்டும். குருவைப் போல மாறவேண்டும் என்று விரும்ப வேண்டும்.
ஐந்தாவதாக – ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்
யோவான் 13:35 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றார். இந்த பதம் 15 தடவைக்கு மேல் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. ஒருவரிலொருவர் அன்பு கூறுவது வார்த்தையினால் அல்ல. கிரியையினாலேயே அன்பு கூறுவது அவசியம்.
அன்பு என்பது மற்றவர்களை மதிக்க வேண்டும். இது மிக முக்கியம். நம்மைவிட மேலானவர்களாக எண்ணி மதிக்க வேண்டும். சகலத்தையும் சகிக்கும், சகலத்தையும் தாங்கும்.
ஆறாவதாக – வசனத்தின்படி ஜீவிப்பது
அடிமை – காதில் துவாரம் போட்ட அடிமை – சுயாதீனனல்ல – நிரந்தரமான அடிமை – அன்பின் அடிமை. அன்புகூறும்போது எதுவும் பாரமாக இராது. கடமைக்காக செய்வது அல்ல. அன்புகூர்ந்து செய்வதே தேவன் எதிர்பார்ப்பதாகும். வசனத்தைக் கைக்கொள்வது அன்பு கூருவதால் மட்டுமே சுலபமாகிறது.
ஏழாவதாக – உடமைகள் எல்லாவற்றையும் கொடுப்பது
லூக்.11:33 வசனத்தில், விளக்கை தண்டின் மேல் வைக்க வேண்டும். நமது நற்கிரியைகள் மூலம் அநேகர் கிறிஸ்துவண்டை வர வேண்டும்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! உண்மையான சீஷனின் பணிகளையும், நிபந்தனைகளையும் அறிந்துகொண்டு நாம் உண்மையும், உத்தமமுமான சீடர்களை உருவாக்க வேண்டும். நிபந்தனையில்லாமல் முழு மனத்துடன் உத்தமமாய் அவரை உண்மை சீஷனாகப் பின்பற்றிவர ஆயத்தமா? அப்பொழுது தேவன் உங்களை இந்த உலகத்திற்கு வெளிச்சமாகவும், உப்பாகவும் பயன்படுத்துவார். பவுல் சீஷத்துவத்துக்கான முழு கிரயத்தையும் செலுத்தியதால் அநேக சீஷர்கள் அவர் பணியின் மூலம் உருவானார்கள். உண்மை சீஷர்களை உருவாக்குவோம்.
அல்லேலூயா!




