தேவன் தானியேல் தீர்க்கதரிசிக்குக் காண்பித்தபடியே மேசியாவாகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையிலே மரித்தார். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஏழை தச்சனின் மகனாக வந்ததை இஸ்ரவேலரால் கிரகிக்க முடியவில்லை. இயேசு கிறிஸ்து மனிதர்களை மீட்கவும், அவர்களுக்காக ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. தேவன் தமது அன்பினால் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. மேசியாவாக இயேசு கிறிஸ்து தாழ்மையுள்ளவராய், ஜீவனைக் கொடுப்பவராய் வந்ததை அவர்கள் முற்றிலுமாய் புறக்கணித்தனர். அவர்கள் மேசியாவை ஒரு ராஜாவாய், இஸ்ரவேலுக்கு தாவீதைப் போல ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறவராய் வருவார் என எதிர்பார்த்தனர். தீர்க்கதரிசிகளின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றிய வசனங்கள் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. தேவனை தங்கள் சுய ஞானத் தினால் அறிந்துவிட முயற்சித்தார்கள். அவர்களால் தேவனை, தங்களுக்காக வந்த மேசியாவை அறியமுடியாமல் போயிற்று. தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தி, பரிசுத்த ஆவியானவரின் உதவியோடுதான் நாம் தேவனைக் குறித்து, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து, தேவனுடைய காரியங்களைக் குறித்து அறிய முடியும்.
அந்தோ! அன்பின் கர்த்தராம் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்து, சிலுவையில் அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தார்கள். தேவனின் அன்பை, தங்கள் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை உதாசீனம் செய்தார்கள். எனவே, அவர்களைக் காத்த தேவகரம் வேதனையோடு அவர்களை விட்டு விலகியது. அவர்கள் சத்துருக் களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். எருசலேமும் தேவாலயமும் கி.பி.70ஆம் ஆண்டில் ரோமர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டது. இவைகளை முன்னறிந்த இயேசு எருசலேமைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
“அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்ற வைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது” (லூக்கா 19:41,42)
இயேசு கிறிஸ்து கடைசி நேரத்திலாவது, எருசலேமின் குடிகள் மனந்திரும்ப வேண்டும். தன்னைப் புரிந்துகொள்வார்கள் என ஆதங்கப்பட்டார். ஆனால் அவர்கள் தங்களை சந்திக்க வந்த மேசியாவின் ஆதங்கத்தை அறியவுமில்லை, மனஸ்தாபப் படவுமில்லை. எனவே சத்துருக்களால் சிறைபிடிக்கப்பட்டு, தேசமெங்கும் சிறைபட்டுப் போனார்கள். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்தார்கள். கர்த்தர் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை நினைத்தருளினார்.
வாக்குத்தத்தம் நிறைவேறுதலும் வருகையும்
இஸ்ரவேல் ஜனங்கள் உலகமெங்கும் சிதறிப் போனார்கள். அதுமட்டுமல்ல, மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்தார்கள். குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது மிகுந்த பாடு அனுபவித்தார்கள். உபத்திரவத்தின் மத்தியில் இருக்கும் யூத தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளைப் பார்த்து; மேசியா எப்படியும் நமக்கு ஒரு சொந்த தேசத்தைத் தருவார் என்று மரணத் தருவாயிலும் கூறுவார் களாம். கர்த்தர் தான் ஆபிரகாமிற்கு பண்ணின வாக்கை நினைத்தருளினார். கர்த்தர் எகிப்தியரின் கையில் இஸ்ரவேல் அனுபவித்த உபத்திரவத்தைப் பார்த்து, பார்வோன் கையிலிருந்து விடுவித்தது போல, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்தபின்பு உபத்திரவங்களிலிருந்து விடுதலையாகி இஸ்ரவேல் தேசம் அத்திமரம் துளிர்விடுவது போல துளிர்த்தது. இஸ்ரவேலுக்குச் சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேறியது. பல நூற்றாண்டுகள் கழித்து தேவ வாக்குத்தத்தம் நிறைவேறியது. இஸ்ரவேல் ஜனங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேசத்திற்கு வந்தது வருகையின் அடையாளமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் தேசம் அத்திமரத்தைப் போல துளிர்க்கும் போது கர்த்தரின் வருகை சமீபம் என கூறியுள்ளார்.
“அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” (மத்.24:32)
இன்று இஸ்ரேல் செழித்து வளருகிறது. 1967ஆம் ஆண்டு எருசலேம் இஸ்ரேலின் கையில் வந்தது. எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறது. இவைகள் யாவும், இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபம் என்பதற்கு ஒரு தெளிவான அடையாளமாகும். எனவே, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுவோம். ஆம்! இயேசு கிறிஸ்து மெய்யாகவே சீக்கிரம் வருகிறார்!