கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்று அநேக கிறிஸ்தவர்கள் பாடுகள், நெருக்கங்கள், பிரச்சனைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விடுதலையை விரும்பி தவிக்கிறார்கள். யார் தங்களை விடுவிப்பார்? எப்படி விடுதலை கிடைக்கும் என்று அறியாமல் கஷ்டங்களின் மத்தியில் சோர்ந்து போகிறார்கள். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் நம் ஒவ்வொருவரையும் பார்த்து சொல்லுகிறார். “நீ என் மேல் வாஞ்சையாயிருக்கிறபடியால் உன்னை விடுவிப்பேன்”. ஏன் தேவனுடைய பிள்ளைகள் சாத்தானால் நெருக்கப்படுகிறார்கள்? ஏன் கண்ணீர், கவலை, கடன், வியாதி, பண நெருக்கடி, நிந்தை, விபத்து, அவமானம்? – தேவனுடைய பிள்ளைகள் தேவன் மேல் பற்றுதலாக இராமல், உலகத்தின் மேலும், பாவத்தின் மேலும் வாஞ்சையாக இருப்பதனால் தான். இரட்சிக்கப்பட்டும் பாவ வாஞ்சை மாறவில்லை. மனப்பான்மையில் மாற வேண்டும். பழைய மனிதனின் செய்கைகளை களைந்துபோட வேண்டும். பழைய பாவ பழக்க வழக்கங்கள், பழைய தவறான உறவுகளை விட வேண்டும். தேவனை நம்புங்கள். எல்லா இக்கட்டினின்றும் விடுவிக்கப் படுவீர்கள்.
நம் பாடுகளிலிருந்தும் இக்கட்டுகளிலிருந்தும் இன்னல்களிலிருந்தும் விடுதலையாக தேவன் இவ்வாறு கூறுகிறார். “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்” (சங்.91:14) கர்த்தரிடத்தில் வாஞ்சையாயிருந்தால் நாம் நிச்சயம் பெரிய விடுதலையை இந்த புதிய ஆண்டில் பெற்று அனுபவிக்கலாம்.
தேவனிடத்தில் வாஞ்சையாயிருப்பது என்பது தேவனிடத்தில் அன்பு கூர்ந்து, அவரையே பற்றிக் கொண்டு அவர் மீது நாம் காட்டும் பேராவல். இதைத்தான் வேதம் வாஞ்சை என்று கூறுகிறது.
முதலாவதாக – தேவனிடத்தில் வாஞ்சை என்பது அவர் நாமத்தின் மேல், அவர் மேல் விருப்பம்
சங்.42:1,2 வசனங்களில், “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவ சந்நிதிக்கு போய் நிற்பேன். எப்பொழுது ஆலயத்துக்கு போவேன் என்ற வாஞ்சை. தேவனை ஆராதிப்பதில் விருப்பம். மேலும் சங்.63:1 “தேவனே, ….அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” என்கிறார் தாவீது.
ஏசா.26:8,9 வசனங்களில், உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது. எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன். தாவீது தேவனை தேடினார். தேவன் அவரை விடுவித்து சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தினார்.
இரண்டாவதாக – தேவனிடத்தில் வாஞ்சை என்பது திருவசனத்தின் மேல் வாஞ்சை
“நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்”
தேவன் மேல் வாஞ்சையாக அவரைத் தேடுவது மட்டுமல்லாது அவருடைய களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பாலின் மேலும் வாஞ்சை நமக்குத் தேவை. வசனமே நம்மை தேவனுக்குள் வாழும்படி வழிநடத்துகிறது.
சங்.119:20,40,131 வசனங்களில் பார்த்தோமானால் “உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது” என்றும், “இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்” என்றும் “உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்” என்கிறார். களங்கமில்லாத வேதத்தை வாஞ்சையோடு வாசிக்கவும், கைக்கொள்ளவும் செய்தால் கர்த்தர் இந்த புதிய ஆண்டில் உங்களை எல்லா இக்கட்டினின்றும் விடுவிப்பது மிகவும் உறுதி. “வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை”. எனவே கர்த்தருடைய வார்த்தையின் மேல் வாஞ்சையாயிருங்கள்.
மூன்றாவதாக – தேவனிடத்தில் வாஞ்சை என்பது ஆலயத்தின் மேல் வாஞ்சை
தேவன் மேலும், அவரின் வார்த்தையின் மேலும் வாஞ்சை. வாஞ்சையாயிருந்தால் மட்டும் போதாது. தேவனுடைய ஆலயத்தின்மேல் நமக்கு வாஞ்சை தேவை. “அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்” என்கிறார். சங்.26:8, “கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்” என்கிறார் தாவீது. கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பரிசுத்த ஆலயத்தில் வந்து அவரை தொழுது கொள்ளுகிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார். ஜெபத்தைக் கேட்கிறவர் அதிசயங்களைச் செய்வார். கட்டுகளிலிருந்து வடுதலையைத் தருவார். 1நாளா.29:3 “இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்” என்றார் தாவீது. தேவனுக்கு கட்டும் அரண்மனை என்று சொல்லி மிகுதியான பொன்னையும் தன் செல்வம் அனைத்தையும் தன் தேவனுடைய ஆலயத்தின் மேல் வைத்திருக்கிற வாஞ்சையினால் கொடுத்தார். அவரது மகன் சாலமோன் கர்த்தருக்காக பெரிய ஆலயத்தைக் கட்டினார். நாமும் தேவனுடைய ஆலயத்தை நேசித்து தாவீதைப் போல கர்த்தருக்கென்று கொடுக்கும்போது நிறைவான பலனைப் பெற முடியும். தாவீதைப் போல கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஊழியங்களிலும், ஆராதனைகளிலும் கலந்துகொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை நிறைவாய் இந்த வருடம் பெற்று அனுபவியுங்கள்.
நான்காவதாக – தேவனுடைய பாதத்தில் (ஜெபத்தில்) உட்கார வாஞ்சை
தேவனுடைய பாதத்தில் அமர்ந்து நம் மன பாரங்களையும், கவலைகளையும், அன்னாளைப் போல ஊற்றிவிடும் போது கண்ணீர்கள் மாறிவிடும். பெரிய விடுதலையையும் சமாதானத்தையும் அடையலாம். சங்.91:15 வசனத்தில் “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்” என்கிறார். மேலும் சங்.91:1-8 வசனங்களில் பார்க்கும்போது, உன்னதமானவரின் நிழலில் தங்குபவனுக்கு தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம். வேடனாகிய பிசாசின் கண்ணிக்கு தப்ப வேண்டுமானால், தேவனுடைய நிழலில் தங்கும் மனிதனாக காணப்பட வேண்டும். மேலும் உன்.2:3 வசனத்தில் பார்க்கும்போது “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்…” கிச்சிலி மரம் – இயேசுவைக் குறிக்கிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருந்தால் பாதுகாப்பு உண்டு. ஆபத்து இல்லை. கனி இன்பமானது. மதுரமானது. அவர் பெரியவர். தீய சக்திகளிலிருந்து விடுதலை தருவார். மனதின் காயங்களைக் கட்டுவார். அவர் சமூகம் நமக்கு மிகுந்த இளைப்பாறுதலையும், ஆறுதலையும் தரும்.
ஐந்தாவதாக – தேவனிடத்தில் வாஞ்சை என்பது தேவபிள்ளைகளின் மேல் வாஞ்சையாக இருப்பது
நாம் தேவனிடத்தில் வாஞ்சையாயிருந்தால் அவர் இரத்தத்தால் மீட்கப்பட்ட அவருடைய பிள்ளைகள் மேலும் வாஞ்சையாக இருப்போம். சகோதர அன்பில் நிலைத்திருப்போம். பிலி.1:8 வசனத்தில், “இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி” என்கிறார் பவுலடிகளார். காண்கிற சகோதரரிடத்தில் அன்பு கூராதவன் காணாத தேவனிடம் எப்படி அன்பு கூருவான். மேலும் 1தெச.2:7,8 வசனங்களில், “உங்களிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” சுவிசேஷ ஊழியம் செய்து நாம் ஜனங்களை தேவன்பக்கம் திருப்ப வேண்டும். அவர்களிடம் பட்சமாய் நடந்து, நற்கிரியைச் செய்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஆறாவதாக – தேவனிடத்தில் வாஞ்சை என்பது நித்திய வீடாகிய பரலோகத்தின் மேல் வாஞ்சை
2கொரி.5:1,2 “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்”. நமக்கு நித்திய வீட்டின்மேல் வாஞ்சை வேண்டும். கைவேலையில்லாத வீடு மேல் வாஞ்சையாயிருப்பது தான் பரலோக சிந்தை. ரோமாபுரியில் உள்ள கலோசியம் என்ற அரங்கத்தில் கிறிஸ்தவர்களை தேவனை மறுதலிக்கும்படி கூறி ரோமப் பேரரசர்கள் வற்புறுத்திக் கொடுமைப் படுத்தினர். மறுதலியாமல் வைராக்கியமாக வாழ்ந்தவர்களை பசியுடன் உள்ள சிங்கங்களுக்கு இரையாகப் போடுவார்கள். தேவனுடைய ராஜ்ஜியத்தின் மேன்மைக்காக இக்காலத்துப் பாடுகளை ஆதித் திருச்சபையினர் சந்தோஷமாகக் கருதினர்.
ஏழாவதாக – என் கண்களால் தேவனைக் காணவேண்டும் என்ற வாஞ்சை
யோபு 19:25,26 “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்”
யோபு பாடுகள், உபத்திரவம், நிந்தை, பிள்ளைகளை இழந்தது, செல்வத்தை இழந்தது, வியாதி – போராட்டம் மத்தியிலும், தேவனை உறுதியாக நம்பினார். என் தேவன் என்னை விசாரிப்பார், என்னை விடுவித்து சத்துருக்கள் மத்தியில் என்னை மேன்மைப்படுத்துவார் என்று விசுவாசித்தான். எல்லாப் பாடுகளையும் பொறுமையுடன் சகித்தான். தேவனைக் கண்டான், அவர் அவன் முன்னிலமையைவிட, பின் நிலைமையை இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! நாம் தேவன்மேல் வாஞ்சையாயிருந்தால் தேவன் நம்மை விடுவிப்பார். நாம் தாவீதைப் போல தேவனுடைய நாமத்தின் மேலும், அவருடைய வசனத்தின் மேலும், அவருடைய ஆலயத்தின் மேலும் வாஞ்சையாயிருந்தால், சத்துருக்களை அவர் முறியடிப்பார். தீங்கு நாட்களில் அவருடைய கூடாரத்தின் மறைவில் வைத்து நம்மைக் காப்பார். அவர் நம் கால்களை உறுதிப்படுத்தி, உயர்ந்த ஸ்தானத்தில் நம்மை நிறுத்தி மகிழ்ச்சியாக்குவார். இந்தப் புதிய வருடத்தில் தேவன் உங்களை சகல இக்கட்டுகளிலிருந்து விடுவித்து உங்கள் பெயரை பெருமைப் படுத்துவாராக! ஆமென்.




