அமெரிக்க ஐக்கிய தேசத்தில் நடந்த மனதை நெகிழ வைக்கும் ஒரு உண்மைச் சம்பவம் இது.
நான்கு வயது குழந்தைக்கு தகப்பனாகிய ஒரு மனிதன் தான் புதிதாக வாங்கிய அழகிய காரைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார். ஒரு சுத்தியலை வைத்து அந்தக் காரில் கீறலை உண்டுபண்ணிக் கொண்டிருந்த மகனைக் கண்டபோது அவர் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். நேராகத் தன் மகனிடம் சென்ற அந்த மனிதர் அவனுக்குத் தண்டனை கொடுக்க எண்ணி கோபத்தில் சுத்தியலை வைத்து அவனது விரல்களில் ஒரு அடி அடித்தார். அந்தோ பரிதாபம். அவனது கைவிரல்கள் நொறுங்கிப்போனது.
அவர் அமைதியானபோது தன் மகனுக்கு தான் ஏற்படுத்திய தீங்குக்காக வருத்தப்பட்டார். விரைவாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவனது நொறுங்கிய விரல் எலும்புகளை மீண்டும் பொருத்த முடியவில்லை. இறுதியாக அவனது கைவிரல்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள் அவனது கை விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்த பின்பு, மகன் தன் தகப்பனைப் பார்த்து, “உங்கள் காரில் கீறலை உண்டுபண்ணினபடியால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான். தகப்பனின் இருதயம் நொறுங்கியது. சிறிது நேர அமைதிக்குப் பின்பு மீண்டும் தன் தகப்பனைப் பார்த்து, “என் கை விரல்கள் திரும்பவும் எப்பொழுது வளரும்” என்றான். அவனது வார்த்தைகள் அவனது தகப்பனுடைய உள்ளத்தை உடைத்தது. நேராக வீட்டிற்குச் சென்ற அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டார்.
இதை வாசிக்கும் அன்பர்களே, உடைந்த காரை சரிபார்த்து விடலாம். ஆனால் உடைக்கப்பட்ட உள்ளங்களை, நொறுக்கப்பட்ட விரல்களை சரிசெய்வது கடினம். மன்னிக்கும் சுபாவம் பழிவாங்கும் எண்ணத்தைத் தடுக்கிறது. உங்களுக்கு துரோகம் செய்த அல்லது உங்களைக் கோபப்படுத்திய ஒரு மனிதனை பழிவாங்கத் துடிக்கும்போது இந்த சம்பவத்தை உங்கள் மனக்கண்முன் கொண்டு வாருங்கள். பொறுமை இழக்கும் சூழ்நிலைகள் வரும்போது ஒரு நிமிடம் நாம் செய்யப்போகும் காரியம் சரிதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள். நன்றியறியாதவர்களையும், துரோகிகளையும் இயேசு மன்னித்தாரே. எனவே பொறுமையாயிருங்கள். செய்த தவறுகளை மன்னித்துவிடுங்கள், பின்பு மறந்துவிடுங்கள்.
“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ் தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபே.4:26)