கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும்போது சில சிறப்பான தீர்மானங்களை எடுக்க வாஞ்சிக்கிறோம். இந்த தீர்மா னங்களையே பிரதிஷ்டை எனக் கூறுகிறார்கள். இத்தீர்மானங்களை நிறைவேற்ற சிறந்த சமர்ப்பணமும் கிரயம் செலுத்துதலும் தேவைப்படும். எனவே பிரதிஷ்டை என்ற சொல் மிகவும் பொருத்தமானதுதான். “பிரதிஷ்டை யுள்ளவர்கள்” என்று தங்களைக்குறித்து மேன்மை பாராட்டுகிறவர்களும் உண்டு. தங்கள் பிரதிஷ்டையின் காரணமாக ஒருவிதப் பெருமை இவர்களுக்குள் ஏற்படுகிறது. இது வருந்தத் தக்கது, இவர்களைப் பார்த்து சிலர் பிரதிஷ்டை என்பதே கிடையாது. அதற்கு அவசியமுமில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் ஒன்று நிச்சயம் “வளரும் கிறிஸ்தவன் சிறப்பான தீர்மா னங்களை எடுக்கிறவனாகவும் இருக்கிறான்”. கர்த்தருடைய கிருபையினால் அதில் நிலை நிற்கவும் செய்கிறான். மிகவும் தாழ்மையுள்ளவனாகவும் இருக்கிறான். தான் எடுத்த தீர்மானங்களைக் குறித்து ஒருநாளும் பெருமையடித்துக்கொள்ள மாட்டான். இந்த சிறப்பான தீர்மானங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம், ஒருவர் எடுத்த சிறப்பான தீர்மானங்களை இன்னொருவர் மீது திணிக்கக்கூடாது. நாம் கிறிஸ்துவுக்குள் எடுக்கும் நல்ல தீர்மானங்கள் நாம் வளர்வதில் நமக்கு மிகவும் உறுதுணையாய் இருக்கும்.
1) சிறப்பான தீர்மானங்கள் நம்மை காக்க உதவுகிறது
மிகவும் முரட்டு மனிதர்களின் நடுவில் ஒரு அழகிய பெண் மிஷனெரி வேலை செய்தாள். அவள் மற்றவர் களைக் கவர்ச்சிக்கக் கூடிய ஆடைகள் அணியாமல் மிகவும் எளிமையாக உடுத்தி வந்தாள். அவள் கூறுவது, “ஒரு பெண் ஒரு விசுவாசிக்குரிய நிலையில் உடுத்துவாளானால் எந்த ஆண் மகனும் கெட்ட நோக்கத்தோடு அவளை உற்றுப் பார்க்க மாட்டான்”. இந்த மிஷனெரி எடுத்த அந்த உடையைக் குறித்த தீர்மானம் எந்தப் பொல்லாப்பையும் துணிந்து செய்யக் கூடிய மனிதர் நடுவில் மிகவும் பிரயோஜனமாய் இருந்தது.
2) சிறப்பான தீர்மானங்கள் மூலம் பரிசுத்தமடைகிறோம்
எபிரேய வாலிபர்கள் அரசனின் உணவை வேண்டாமென்று மரக்கறி உணவைத் தெரிந்தெடுக்கத் தீர்மானித்தது, அந்த இடத்தில் அவர்கள் கறைபடாதபடி காக்க உதவினது. தங்களைத் தீட்டுப்படாது காத்துக்கொள்ள அவசியமாகவுமிருந்தது. சில சமயங்களில் சில சூழ்நிலைகளில் நாமும் இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுப்பதின் மூலம் நம்மை உத்தமர்களாக விளங்கப் பண்ண முடியும். தேவன் நம்மேல் எந்தத் தீர்மானத்தையும் திணிப்பதில்லை. ஆனால் சில சமயங்களில் நாம் சிறப்பான தீர்மானங்களை எடுக்க ஆவியில் உந்தப்படலாம். இந்த தீர்மானங்கள் எடுத்தால்தான் பரலோகம் போகமுடியும் என்றல்ல. பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்ற வசனத்தின்படி இன்னும் பரிசுத்தமடைய இவை உதவுகிறது.
3) சிறப்பான தீர்மானங்கள் தேவனுக்குப் பிரியமானது
தானியேல் எனக்கு மிகவும் பிரியமானவன் என்று தேவனே அவனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். அவன் தன் ஆவிக்குரிய நல் வாழ்க்கையையும் யூதருடைய வாழ்க்கையையும் கருதியே சிறப்பான தீர்மானங்களை எடுத்திருந்தான். ஜெபிப்பதில், தேவனை ஆராதிப்பதில் நல்ல தீர்மானங்களைத் தானியேல் எடுத்துக் கொண்டான். தாவீதுகூட இருதயத்திற்கு ஏற்றவன் என்று தேவனால் கூறப்பட்டான். அவன் தனது வாயை வீணாகத் திறவாதிருக்கத் தீர்மானம் எடுத்திருந்தான் என்று பார்க்கிறோம். தனது தீர்மானத்தைக் காக்க, “ஆண்டவரே என் உதடுகளுக்குக் காவல் வையும்” என்று ஜெபிக்கிறான். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கத் தீர்மானித்திருந்தான். அவர் துதி எப்போதும் அவன் வாயில் இருந்தது. எனவே துதியின் மத்தியில் வாசம் செய்யும் தேவன் அவனை இதயத்திற்கேற்றவன் என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. தேவாலயத்தைக் கட்டுவதில் சிறப்பான தீர்மானங்களை உடையவனாயுமிருந்தான். இது எல்லாருக்கும் உரிய தீர்மானங்களாக இருந்தாலும் இதில் சில சிறப்புத் தன்மைகள் காணப்படுகின்றன.
4) சிறப்பான தீர்மானங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நேராக நடத்துகிறது
கிறிஸ்துவுக்குள் வளர வளர அநேக பரிசுத்தவான்கள் நல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியத்தைத் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறார்கள். இந்தத் தீர்மானங்கள் அவர்களை நல்ல வளர்ச்சிக்குள் கொண்டு போயிருக்கிறது. ஹட்சன் டெய்லர் இவ்விதம் கூறுகிறார், “சீனாவில் சூரியன் உதித்தபோதெல்லாம் அது அவரை முழங்காலில் நிற்பதைக் காணத் தவறியதில்லை”. இந்தப் பரிசுத்தவான் மற்றவர்கள் எழும்பும் முன் எழும்பித் தன் தேவ னோடே செலவிட வேண்டிய நேரத்தை எடுக்கத் தீர்மானித்துக் கடைப்பிடித்தார். அதுமட்டுமல்ல சீனர்களைப் போல் உண்ணவும் உடுத்தவும் தீர்மா னித்துக்கொண்டார். மற்ற அநேக மிஷனெரிகள் அவரைக் கேலியும் கிண்டலும் செய்தனர். அவர் தீர்மானத்தில் உறுதியாக இருந்ததின் காரணமாக அநேகமாயிரம் சீனர்களின் உள்ளங்களைக் கவர்ந்து ஆண்டவர்பால் திருப்பக்கூடிய வல்லமையுள்ள ஆயுதமாகக் காணப்பட்டார். “நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்” என்று ரோமர் 14:22ல் கூறப்பட்டுள்ளது. இவரது சிறப்பான தீர்மானங்கள் இவரை சிறப்பான மிஷனெரிகளின் வரிசையில் நிறுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.
5) சிறப்பான தீர்மானங்கள் மாதிரி புருஷர்களை உருவாக்குகிறது
பின்பற்றக் கூடியவர்களென்று கருதப்படக்கூடியவர்கள் யாவரும் சிறப்பான தீர்மானங்களை எடுத்தவர்களாகவே இருக்கிறார்கள். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் தன்னை ஒரு பரதேசி என்று கருதி அதற்கேற்றாற் போல் ஜீவித்ததால், மிகுந்த ஐசுவரியம் இருந்தபோதிலும் அதினால் பாதிக்கப்படாதிருந்தான். ஈசாக்கோடும் யாக்கோ போடும் கூடாரங்களில் குடியிருந்தான். தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். மோசே தேவனுடைய பிள்ளைகளோடு பாடனுபவிக்க எடுத்த தீர்மானம் அவனையும் ஒரு மாதிரி புருஷனாக மாற்றிற்று. ரேகாபியர்கள் திராட்சரசம் குடிக்கக்கூடாது; கூடாரங்களில்தான் வாழவேண்டும் என்று எடுத்த தீர்மானங்கள் அவர்கள் குடும்பத்தை இஸ்ரவேலிலே ஒரு மாதிரிக் குடும்பமாக நிறுத்தியுள்ளது.
6) சிறப்பான தீர்மானங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது
வெளி உலகத்திலும் கூட சில தீர்மானங்களை எடுத்து அதின்படி ஜீவிக்கிறவர்கள் தாங்கள் விரும்பும் நிலையை அடைகிறார்கள். இலக்குகளை அடைய தீர்மானங்கள் அவசியமென்று கூறுகிறார்கள். ஆவிக்குரிய குடும்பங் களில் அநேகர் சிறப்பான தீர்மானங்களை எடுத்திருப்பார்க ளானால் பொருளாதார நெருக்கடிக்கு நேராக தள்ளப்பட்டி ருக்கமாட்டார்கள். ஆவிக்குரிய ஜீவியத்திலும் நிறைவேற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்றுவதிலும், இலக்கு களை அடைவதிலும் ஜெயம் பெறுபவர்கள் சிறப்பான தீர்மானங்களை எடுத்தவர்களே. சிறப்பான தீர்மானங்கள் எடுத்த ஊழியர்களின் ஊழியங்களும் வளர்கின்றன. நமது இலக்கை அடைய நம்மை அடக்கி, ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும். பவுல் இவ்விதம் தான் இலக்கை அடைந்தார். தீர்மானங்கள் எடுப்பவர்களைப் பரிகசிப்பது நல்லதல்ல. அவர்கள் தேவ ராஜ்ஜியத்தினிமித்தமாகவே தங்களை இந்நிலைக்குள்ளாக்கி இருக்கிறார்கள். சுய விளம்பரத்துக் காக அதாவது மனிதருடைய கனத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படும் தீர்மானங்கள் போலி பிரதிஷ்டைகள் ஆகும்.
7) சிறப்பான தீர்மானங்கள் தேவ சித்தம் செய்யப் பழக்குவிக்கிறது
தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகத் தங்களை ஒடுக்கிக் கொண்டவர்களுக்கு தேவ சித்தம் செய்வது கடினமல்ல, இவர்கள் எதையும் செய்ய ஆயத்தமாய் இருப்பார்கள். “வாழ்ந்திருக்கவும் தெரியும், தாழ்ந்திருக்கவும் தெரியும். எந்த நிலையிலும் மன ரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டேன்” என்று பவுலைப் போல் துணிந்து கூறுகிற வர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட உணவுமுறை, உடை அணிவது, பழக்கவழக்கங்கள், தூங்குவது இவைகளில் சிறந்த தீர்மானங்களுடன் கட்டுப்பாடாக வாழ்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவ சித்தம் செய்யவும், இலக்கை அடையவும் முடிகிறது. திடீரென்று ஒருநாள் நம்மை மாற்றிக்கொள்ள முடியாது. காலா காலங்களில் நாம் எடுத்த சிறந்த தீர்மானங்களே நம்மை ஆயத்தம் செய்கிறது.
சிறப்பு தீர்மானங்கள் (பிரதிஷ்டைகள்) சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் தேவராஜ்ஜிய முன்னேற்றத்தையும் கருதியே எடுக்கப்படுகிறது. தனி நபர்களாக எடுக்கிற சிறப்பு தீர்மானங்களும் உண்டு. குடும்பமாக எடுக்கிற சிறப்பான தீர்மானங்க ளுமுண்டு. எல்லா கிறிஸ்தவர்களும் எடுக்கவேண்டிய பொதுவான தீர்மானங்களு முண்டு. அவைகளை எடுத்தே ஆக வேண்டும்.(எ.க) கர்த்தரையே சேவிப்போம் என்ற தீர்மானம் இதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் எடுத்தே ஆகவேண்டும். திருமண காலங்களில் தங்கள் பிள்ளைகளை அவிசுவாசமுள்ள கிறிஸ்துவை சேவிக்காத புற ஜாதியினருக்குக் கொடுக்கமாட்டோம் என்பதும் பொதுவான தீர்மானம். எல்லாருக்கும் உரியது, இன்னும் தசம பாகம் கொடுப்பது, ஆலய ஆராதனையில் ஒழுங்காகப் பங்குபெறுவது போன்றவைகள். பொதுவான தீர்மானங்களிலிருந்து வேறுபட்ட சிறப்புத் தீர்மானங்களாகும். பொதுவான தீர்மானங்கள் நாம் தேவ பிள்ளைகளாக வாழ வழிவகுக்கிறது. சிறப்பான தீர்மானங்கள் நம்மை தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழச் செய்கிறது.
இங்கு வற்புறுத்திக் கூற விரும்புவது சிறப்பான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும் என்பதே. ரேகாபியர் குடும்பமாக பிரதிஷ்டை எடுத்திருந்தார்கள். அது அவர்களை உயர்த்தியது. கனடாவிலுள்ள “டோரண்டோ” நகரிலுள்ள சபை மக்கள் சபையாக சிறப்பான தீர்மானங்கள் எடுத்தார்கள். சபைக்கு ஏராளமான நிதி வசதிகள் இருந்தும் ஆராதிக்கப் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டிப் பணத்தை செலவழிக்கா மல் ஜனங்கள் தேவனை ஆராதிக்க குறைந்த வசதிகள் உள்ள ஆலயத்தைக் கட்டி, தேவ ராஜ்ஜியத்தைக் கட்ட சிறப்பான தீர்மானங்களை எடுத்ததினால் 450 மிஷனெரிகளை உலகமெங்கும் அனுப்பும்படி செய்தார்கள். மக்கதொனியா நாட்டு சபையார் சிறப்பான தீர்மானங்களை எடுத்ததினால்தான் கொடிய தரித்திரத்திலும் திராணிக்கு மிஞ்சிக் கொடுத்தார்கள்.
இந்தக் கடைசி காலங்களில் தேவனுக்காக வல்லமையான ஊழியம் செய்யும் நம்மைக் காத்துக்கொள்ளவும் சிறப்பான தீர்மானங்களை எடுப்பது மிக மிக அவசியம்.