ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசிகள் சந்திக்கும் ஆபத்தான இடங்களும் எச்சரிப்புகளும்

Written by Pr Thomas Walker

October 21, 2008

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


சபைகளில் அநேக விசுவாசிகள் ஆபத்தான நிலைமையில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு மோசம் போகிறார்கள். ஆரம்பத்தில் ஆவிக்குரியவர்களாக நன்றாக ஓடினவர்கள், நாளடைவில் மாம்சத்துக்குரியவர்களாக, உலக சிந்தையாலும், பொருளாசையாலும், பெருமையாலும் வஞ்சிக்கப்பட்டு நஷ்டப்படுகின்றனர். நீதிமொழிகள் 1:23-25 வசனங்களில் “என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்” என்று வாசிக்கிறோம். விசுவாசிகள் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுவது இல்லை. மனம் திரும்புவதுமில்லை. மாறாக, போதகரை விட்டு விலகுவதும், சபையை விட்டு விலகி வேறு சபைகளுக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்வில் ஆபத்தான இடங்களில் இருக்கிறார்கள். சாத்தான் எந்த நேரமும் அவர்களை கண்ணிகளில் சிக்க வைத்து விழத் தள்ளுவது உறுதி. நீயோ தேவ பிள்ளையே! பிசாசின் தந்திரங்களை புரிந்துகொண்டு எச்சரிக்கையாயிரு என்று கர்த்தர் சபையை எச்சரிக்கிறார். ஆவிக்குரிய சபைகளில் மற்றவர்களுக்கு போதிக்கக்கூடிய அளவில் வளர்ந்த விசுவாசிகள் தங்களை யாராவது குற்றப்படுத்தினால் விரும்புவதில்லை. வெறுக்கிறார்கள். தேவன் அவர்களில் பிரியமாயிருப்பதில்லை.

 முதலாவதாககடிந்து கொள்ளுதலை வெறுக்காதே
தாவீது அரசன் “நீதிமான் என்னை குட்டட்டும் அது எண்ணெயைப் போலிருக்கும்” அதை நான் அசட்டை செய்வது இல்லை என்கிறார். மேலும் நீதி.3:11,12 வசனங்களில் “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” நீ கடிந்துகொள்ளுவதை விரும்பவில்லை என்றால் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளாய் என்பதை உணர்ந்துகொள். தேவன் கடந்துகொள்ளும் போது, வசனத்தின்மூலம் பேசும்போது சோர்ந்து போகாதே. நீதி.12:1 வசனத்தில், “புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.” மேலும் நீதி.29:1 வசனத்தில், “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்” என்று வேதம் கூறுகிறது.

 இரண்டாவதாகபொருளாசை கொள்ளாதே!
நீதி.1:18,19 வசனங்களில் பொருளாசைக்காரரைப் பற்றி தெளிவாக ஞானி கூறுகிறார். “இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்”. மேலும் இயேசு மலைப் பிரசங்கத்தில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று கூறுகிறார். இயேசுவையும், பிசாசையும் ஒரே மனிதனால் பிரியப்படுத்தி வாழ முடியாது. தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் சேவை செய்ய முடியாது. மத்.6:24 வசனத்தில், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” என்கிறார். மேலும் 1தீமோ.6:10 வசனத்தில், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்”. ஆனால் தேவனுடைய மனிதன் பொருளாசையில் சிக்கக் கூடாது. அவைகளை விட்டு ஓட வேண்டும். தேவனுடைய பிள்ளை விசுவாசத்திற்காக நல்ல போராட்டத்தை போராட வேண்டும். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஓட வேண்டும். நீதிமொழிகள் 15:27 வசனத்தில் “பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்;” என்றும் ஆதி.14:19-23 வசனங்களில், ஆபிரகாம் சோதோமின் ராஜாவைப் பார்த்து, “ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்” என்கிறார். ‘போதும்’ என்ற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். பொருளாசைக்காரன் தன் உயிரையே இழந்து விடுகிறான்.

 
மூன்றாவதாகநன்மை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே!
நீதி.3:27 வசனத்தில், “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” நாம் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மேலும், நீதி.11:24-27 வசனங்களில் “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்” என்று பார்க்கிறோம்.

 நான்காவதுபொறாமைப்படாதே
பொறாமை அநேக விசுவாசிகளை மோசம் போக்குகிறது. சவுல் வாழ்க்கையிலும் அவன் தாவீதின் மேல் கொண்ட பொறாமையால் அழிக்கப்பட்டான். பொறாமை ஒரு எலும்பு உருக்கி நோயைப் போன்றது. நீதி.3:31 வசனத்தில் “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே” மேலும் சங்.37:1 வசனத்தில், “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே”. சபையிலும் விசுவாசிகள் ஒருவரை ஒருவர் கிறிஸ்துவின் அன்பில் வளரவிடாது, அவர்களை ஒருவர் மேல் மற்றவர் பொறாமைப்பட சாத்தான் தூண்டி அவர்களை மோசம் போக்குவதால் விழிப்புடன் பொறாமையை வேரோடு அழிக்க வேண்டும்.

 ஐந்தாவதாகமற்றவர்கள் செய்யும் தவறுக்கு உடன்படாதே
நீதி.11:15 வசனத்தில், “அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்” அந்நிய நுகத்தில் அவிசுவாசியுடன் பிணைக்கப்படக் கூடாது. திருமண விஷயமானாலும் சரி, வியாபாரம் மற்றும் உடன்படிக்கை போன்ற காரியங்களில் விசுவாசி கவனமாக இருக்க வேண்டும். சிலர் அந்நியருக்கு கடன் வாங்கி கொடுத்தல், வீடு, நிலம் வாங்கி தருவதில் அவிசுவாசிகளால் மோசம் போகிறார்கள். மேலும் சிலர் பிறர் செய்யும் தவறுக்கு உடன்படுகிறார்கள். திருடு, கொலை, குற்றங்களில் சிக்கி மிகவும் அவதியுறுகின்றனர்.

 ஆறாவதாககவலைப்படாதே
விசுவாசிகளைத் தாக்கும் சாத்தானின் பெரிய ஆயுதம் கவலை. என்னத்தை உண்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சரீரத்துக்காக கவலைப்படக்கூடாது. நாளைய தினத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. நீதி.12:25 “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்”. நாம் கவலைப்படுவதால் நம் சரீர அளவோடு ஒரு முழத்தையும் கூட்ட முடியாது.
கென்யாவில் தேவ மனிதர் ஒருவர், எவ்வாறு தேவ ஒத்தாசையால் காக்கப்பட்டார் என்பதை பார்ப்போம். Trade Union Leader ஒருவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய விரும்பினார். மக்கள் அதை அனுமதிக்கவில்லை. 10 நாட்கள் அவருக்கு அவகாசம் கொடுத்தனர். பின்னர் அவர் வீட்டை தீக்கொளுத்த ஆயத்தப்பட்டபோது, இவர் ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஜெபித்ததால் தேவன் வானத்திலிருந்து இடியுடன் பலத்த மழையை அனுப்பினார். அந்தப் பெரும் மழையால் 50 பேர் மரித்தனர். மற்ற பகைவர்கள் பயந்து ஓடிவிட்டனர். அதனால் எதைக் குறித்தும் கவலைப்படக் கூடாது.

 ஏழாவதாகதேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு கீழ்ப்படி, கீழ்ப்படியாமல் இராதே!
சபைகளில் சாத்தான் விசுவாசிகளை வசனத்துக்கு கீழ்ப்படியவிடாமல் மோசம் போக்குகிறான். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு வசனத்துக்கு நடுங்குகிறவனையே தேவன் நோக்கிப் பார்ப்பார். நீதி.13:13 வசனங்களில் “திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்”. யோனாவே திமிங்கலத்தை விழுங்கியதாக வேதத்தில் எழுதப்பட்டால் நான் நம்புவேன் என்கிறார் ஒரு பரிசுத்தவான். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஒழிந்துபோகாது. எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் தம்முடைய வார்த்தையை கனப்படுத்துகிறார். சமாரியாவிலே கோதுமை விலை மலிவாக விற்கப்படும் என்றார் எலிசா தீர்க்கதரிசி (2இராஜா.7:1,2)ல் “அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” ஆனால் ராஜாவின் பிரதானி ஒருவன் எலிசாவுக்கு மாறுத்தரமாக “…கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா…” என்றான். அதற்கு எலிசா, “உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய்” என்றான். தேவனுடைய வார்த்தையை அவமதித்தால் அழிவுதான் வரும்.
கலிபோர்னியாவில் பூகம்பம் வரும் என்று எச்சரிக்கப்பட்டதால் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கீழ்ப்படிந்த மக்கள் அந்த எல்லைப் பகுதியை விட்டு வெளியேறினர். அவர்கள் காப்பாற்றப்பட்டனர். கூடாரங்கள் அழிந்துபோயிற்று.

Ivory Coast-என்ற இடத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சிறிய சபை அதில் 30 பேர் மட்டும் ஆராதித்து வந்தனர். அந்நிய பாஷை பேசி ஒருவர் தீர்க்கதரிசனமாக Pastor வீட்டுக்குப் பின்னால் கிணறு தோண்டும்படி கூறினார். தோண்டினர். பாறைகளாகவே முதலில் வந்தது. கடைசியில் பெரிய பாறையை உடைத்தெடுத்தனர். நல்ல ருசியான தண்ணீர் கிடைத்தது. மக்களின் தண்ணீர் கஷ்டம் ஒழிந்தது. தற்போது அந்த சபையில் 9000 பேர் அங்கத்தினராக உள்ளனர்.

 
எட்டாவதாகபாவங்களை மறைக்காதே
பாவங்களை மறைக்காமல் தேவனிடம் அறிக்கை செய்து விட்டுவிடு. நீதி.28:13 வசனத்தில் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” பாவங்களை மறைத்து வைத்தால் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! நீங்களும் நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொண்டு சாத்தானை எதிர்த்து முன்னேறுங்கள். ஆபத்தான படுகுழிகளில் வேகமாக நிதானம் இழந்து சென்று மாட்டிக்கொள்ளாதேயுங்கள். எச்சரிக்கை தூண்களாக வேதத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாத்திரங்களை கவனித்து பார்த்து நமக்கு நியமித்த ஓட்டத்தில் பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்! ஜெயங்கொள்கிறவன் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலுக்கு தப்புவான். தேவன் வருகிறார்! மாரநாதா!






Author

You May Also Like…

Share This