சிலுவையின் மேன்மை

Written by Pr Thomas Walker

March 4, 2021

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன் இன்னுயிரை சிலுவையில் ஈந்து நமது பாவங்களை சாபங்களை ரோகங்களை பரிகரித்த இயேசு கிறிஸ்துவை தியானம் செய்யும் நாட்கள் இவை. இயேசு வாழ்ந்த நாட்களில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றைக் குறித்தும் மேன்மைபாராட்டல் இல்லை என்று பவுல் குறிப்பிடுகிறார். ஒரு கிறிஸ்தவனிடமிருந்து சிலுவையை அதன் பாடுகளைப் பிரிக்கவே முடியாது. நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை சுமக்க வேண்டும். “தேவன் கொடுத்த சிலுவையை நீ மனப்பூர்வமாய் சுமப்பாயானால் அது உன்னை சுமக்கும்” என்று தாமஸ் என்ற பக்தன் கூறுகிறார்.

இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரைக் காட்டிக்கொடுத்தான்; சிலர் தூரத்தில் பின் சென்றார்கள்; ஒருவன் அவரை மறுதலித்தான்; ஒருவனே அவரது அருகில் இருந்தான். அவனே அவரது மார்பில் சாய்ந்து அவரது இதயத்துடிப்பை அறிந்த சீஷனாகிய யோவான். அவரது பாடுகளில் சீஷராகிய நாம் அவரோடு ஐக்கியம் கொள்ள வேண்டும். கிறிஸ்துவைப் பற்றிய உபதேசம் நமக்கு தேவ பெலனாயிருக்க வேண்டும் (1கொரி.1:18). “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்று இயேசு குறிப்பிடுகிறார். முறுமுறுப்போடு தங்கள் சிலுவையை சுமக்கிறவர்கள் வாழ்க்கையைக் கசப்பாக்கி விடுகிறார்கள். தங்களுக்கு தேவன் கொடுக்கும் சிலுவையை சுமக்கப் பிரியமற்று மற்றவர்களது சிலுவையை நாடுகிறவர்கள், தங்கள் வாழ்க்கையைக் கோரமாக்கிக் கொள்கிறார்கள். நமது சிலுவையை விசுவாசத்துடன் சுமக்க அதற்குக் கிரயம் செலுத்த வேண்டும்.

சிலுவை நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும் சின்னமாயிருக்கிறது. தேவனுடைய கரமும் நம்முடைய கரமும் ஒப்புரவாக்கப்படும் இடம்தான் சிலுவை. சிலுவையில் தொங்கிய இயேசு தன்னைத் துன்பப்படுத்தினவர்களையும் மன்னிக்கும்படி தேவனிடம் பரிந்து பேசினார். இதுதான் சிலுவையின் அன்பு. “நான் மன்னிக்கிறது போல் நீர் எனக்கு மன்னியும்” என்று சொல்லுமளவு நமக்கு மன்னிக்கும் அனுபவம் வேண்டும். மன்னித்து மறந்துவிடுவதே சிலுவையின் அன்பு. நாம் இரட்சிக்கப்படும்போது நாம் செய்த பாவங்களை தேவன் மறந்துவிடுகிறார். முதுகுக்குப் பின்பாக எறிந்துவிடுகிறார். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு அதிகமாய் நமது பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்; நமது பாவங்களை சமுத்திர ஆழத்திலே தள்ளிவிட்டார். இயேசு மன்னித்ததால் ஒரு நிமிடத்தில் கிறிஸ்துவோடுகூட பரதீசில் இருக்கும் பாக்கியம் பெற்றான் சிலுவைக் கள்ளன்.

சிலுவையில் இயேசு தாய்க்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தார் (யோவான் 19:26). நாமும் நமது பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். ‘தாகமாயிருக்கிறேன்’ என்று இயேசு சிலுவையில் தொங்கும்போது கூறினார் (யோவான் 19:28). அவருக்குக் கசப்புக் கலந்த காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். இந்த உலகம் நமக்கு கசப்பைத்தான் கொடுக்க முடியும். மனுக்குலம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதுதான் இயேசுவின் தாகம். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடம் வந்து பானம் பண்ணக் கடவன்” என்று இயேசு கூறுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது மூன்று மணிநேரம் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று (மத்.27:45). பிதாவின் சமூகம் இயேசுவுக்கு மறைக்கப்பட்டது. “எல்லாம் முடிந்தது” என்று சொல்லி ஜீவனை விட்ட இயேசு பிதாவின் கைகளில் தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19:30). அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்.

இயேசு சிலுவையில் செய்த முக்கிய காரியங்கள் என்ன?

1. இயேசு சிலுவையில் மரித்ததினால் நமக்கு இரட்சிப்பு (பாவ மன்னிப்பாகிய மீட்பு) உண்டாகிறது. (ரோமர் 1:16; கொலோ.1:14)

2. கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5:8)

3. நமது பாடுகளை சுமந்து தீர்த்தார். (ஏசாயா 53:4)

4. நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையைச் சுமந்தார். (ஏசாயா 53:5,6)

5. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகிறோம். (2கொரி.5:21)

6. கிறிஸ்துவின் குடும்பத்திலே நம்மை அங்கத்தினர்களாக்கினார். (எபி.2:10-12)

7. நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கினார். (எபே.2:13-16)

இயேசு சிலுவையில் மரித்ததினால் உண்டாகும் ஏழு ஆசீர்வாதங்கள் என்ன?

1. நமக்கு எதிரிடையாகவும் விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும்     உரிந்துகொண்டு அவைகளின்மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார். (கொலோ.2:14,15)

2. நமது கடந்தகால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. (கொலோ.2:13; ரோமர் 6:14)

3. அவரே நமது பரிகாரியாகிறார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். (ஏசாயா 53:5)

4. நம்முடைய துக்கங்களை சுமந்து தீர்த்தார். (ஏசாயா 53:4)

5. நித்திய நியாயத்தீர்ப்பை உண்டு பண்ணினார். (எபி.9:26,27)

6. நியாயப்பிரமாணத்தினால் உண்டாகும் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார். (கலா.3:10)

7. நித்திய ஜீவனைக் கொடுக்கிறார் (யோவான் 3:16)

அவமானத்தின் சின்னமாய் இருந்த சிலுவையை ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக மாற்றி மனுக்குலத்தின் பாவம், சாபம், ரோகம் மாற்றிட ஆண்டவர் தெரிந்தெடுத்த இந்த சிலுவையையல்லாமல் வேறே மேன்மை எந்த மனிதருக்கும் இல்லை. நாமும் நமக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையைச் சுமந்து நமது முன்னோடியாம் இயேசுவை நாள்தோறும் பின்பற்றுவோம். அது நம்மை மகிமையில் சேர்க்கும்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!






Author

You May Also Like…

Share This