டிசம்பர் மாதம் நடந்த 54 மிஷனரிகள் பிரதிஷ்டை விழாவின் போது, புதிய மிஷனரிகளுக்கு, விசேஷித்த தேவ மனிதர்களின் “ஊழியப் பயிற்சியும்” வழங்கப்பட்டது. அதிக வேத அறிவு இல்லாத இந்த ஊழியர்களுக்கு, நமது தலைவர்கள், தங்கள் நீண்ட அனுபவத்தை சுருக்கமாகப் பகிர்ந்து, சாட்சிகளுடன் எடுத்துரைத்தது இவர்களுக்கு ஒரு மாபெரும் பாடமாக அமைந்தது.
இந்த வரிசையில், என்னுடைய முறையும் வந்தது. நான் பொதுவாக இதைப் போன்ற பயிற்சி வகுப்புகளில், உண்மையைப் பற்றி அதிகம் கற்றுக்கொடுக்க முயற்சிப்பேன். ஏனென்றால் உண்மை வந்துவிட்டால் பரிபூரண ஆசீர்வாதங்கள் தானாக வந்துவிடும் என நமது பரிசுத்த வேதாகமும் பறைசாற்றுகிறதே.
நான் நமது புதிய ஊழியர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். ஒருவன் மிகப்பெரிய குடிகாரன், மற்றொருவன் ஒரு சிறந்த திறமை மிக்க தேவ ஊழியன் ஆனால் பண விசயத்தில் சற்று தடுமாற்றம் கொண்டவர். இவர்கள் இருவரில் எவர் பரலோகம் செல்வது எளிது எனக் கேட்டேன்.அனைவரும் தேவ ஊழியர் எளிதில் பரலோகம் சென்று விடுவார் என ஆருடம் கூறினர்.
நான் அவர்களிடம் சற்று விளக்கி கூறினேன்…
இந்த குடிகாரன், காலமெல்லாம் குடித்தே உடலைக் கெடுத்து, கடைசி காலத்தில், மரணப் படுக்கையில் கிடக்கிறான். உயிர் போகவில்லை அது இழுத்துக்கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில், அவன் சிறுவயதில், ஞாயிறு பள்ளியில் பயின்ற போதனைகள் நினைவிற்கு வருகிறது. அவன் தன்னுடைய மரணத் தருவாயில், இயேசுவை நோக்கி, தன் பாவங்களை மன்னிக்கும்படி மன்றாடுகிறான்.
தன்னிடம் வரும் எந்தப் பாவியையும் புறம்பேத் தள்ளாத நமதாண்டவர், அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். சற்று நேரத்தில் அவன் மரிக்கிறான். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் அவன் நிச்சயம் தேவராஜ்யம் சேர முடியும்.
இதைப்போலவே தேவ ஊழியரும் ஒருநாளில், மரணத்துக்கேதுவான வியாதிப் படுக்கையில் இருக்கிறார். பலரும் இவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், ஆண்டவர் இந்த ஊழியருக்கு, அவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக, நண்பர் ஒருவரின் பணத்தை, இவர் கையாடல் செய்ததை நினைப்பூட்டுகிறார்.
இவருக்கு அந்த நண்பர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எழுந்து செல்லவோ, அந்த நண்பரைக் கண்டுபிடிக்கவோ, இவருக்கு பெலனுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் அச்சமயம் போதிய பண வசதியுமில்லை. இருக்கும் பணத்தை கொடுக்க மனைவி, மக்களுக்கு மனமுமில்லை. இச்சூழ்நிலையில் இந்த அருமை ஊழியரும் மரிக்கிறார். இவரிடம் மன்னிக்கப்படாத பாவம் இருக்கவே, இவரால் பரலோகம் செல்ல முடியாமற் போகிறது.
சுவிசேஷம் அறிவிப்பது நம் கடமை. அது என்று, எப்படி, எவ்வாறு கிரியை செய்யும் என்பதை ஆண்டவரே அறிவார். எனவே நாம் எவரையும், இவர் பரலோகம் செல்லமாட்டார் எனக் கணிக்கவே முடியாது. நியாயத்தீர்க்கவும் கூடாது. நாம் விதைக்கிறோம், ஆண்டவர் விளையச் செய்கிறார்.
நம்மால், ஆண்டவரைப் பற்றி அறிந்தவர் பரலோகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்று, நாம், நமது அஜாக்கிரதையினால், தேமாவைப்போல, வாய்ப்பினை நழுவ விடலாம். அப்போஸ்தல பட்டத்திற்கு வரவேண்டியவனையே, பிரபஞ்சத்தின் ஆசை விட்டுவிடவில்லை. தீர்க்கதரிசியாக வேண்டிய கேயாசியைக்கூட பொருளாசை விட்டுவிடவில்லை. அவர்கள் பெரிய தேவ மனிதரோடு வாழ்ந்தாலும், அவர்களுக்கு இச்சையில் விடுதலை இல்லை.
அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபம், 9:27ல், “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று கூறுகிறார்.
மாபெரும் அப்போஸ்தலனே இவ்வளவு பயந்து, ஆண்டவரை சேவித்தால், நாம் எவ்வளவு அதிகமாக ஊழியத்தில், பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைப்பூட்டினேன். இந்த இளம் ஊழியர்களுக்கு அது ஒரு மாபெரும் பாடமாக அமைந்தது. என்னோடும்கூட அந்த வசனம் இடைபட்டது.
“….நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” (எபி.10:25).