பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! லூக்கா 10:30-37 வசனங்களில் எருசலேமை விட்டு எரிகோவிற்கு பயணித்த ஒரு மனுஷனைக் குறித்து பார்க்கிறோம். இந்த மனுஷன் தேவ ஆலயம் உள்ள எருசலேமை விட்டு எரிகோவிற்கு செல்கிறான். எருசலேமைக் குறித்து பார்க்கும்போது அது மலையின் மேல் கட்டப்பட்ட பட்டணம்; எருசலேம் தேவனுடைய நகரம் (சங்.46:4). எருசலேம் தேவசித்தம் செய்யும் இடம்; எருசலேம் பரிசுத்த நகரம் (நெகே.11:1) எருசலேம் சமாதானப் பட்டணம் (சங்.76:2). ஆனால் எரிகோவோ சமவெளிப் பட்டணம் (யோசுவா 12:1); அது ஒரு சபிக்கப்பட்ட பட்டணம் (யோசுவா 6:26); எரிகோ சுயசித்தம் செய்யும் இடம்.
குன்றிலிட்ட விளக்காய் நற்கந்தம் வீசிக் கொண்டிருந்த எருசலேமை விட்டு இந்த மனிதன் சபிக்கப்பட்ட எரிகோவிற்கு சென்றதுதான் இவன் செய்த மிகப்பெரிய தவறு. எருசலேமில் வாசம் பண்ணி எருசலேமின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக்கொண்டிருந்த இந்த மனிதன் சபிக்கப்பட்ட எரிகோவிற்கு சென்றபோது கள்ளர் கையில் அகப்பட்டுக்கொண்டான். நாமும் தேவனை விட்டு பின்மாறிப் போகும்போது சத்துருவின் கையில் அகப்பட்டுக் கொள்கிறோம். பின்மாற்றக்காரர்கள் சபிக்கப்பட்டுப் போவார்கள் (எபி.6:5-8).
எது பின்மாற்றம் என்று பார்க்கும்போது, தேவனைவிட்டு விலகுவது பின்மாற்றம் (1இராஜா.11:9,10). கோணலான வழிகளுக்கு சாய்வது பின்மாற்றம் (சங்.125:5). சாத்தானுடைய வழிகளை பின்பற்றுவது பின்மாற்றம் (1தீமோ.5:15). இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பது பின்மாற்றம் (2தீமோ.4:10). ஆதியில் கொண்டிருந்த அன்பை விடுவது பின்மாற்றம் (வெளி.2:4). வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புவது பின்மாற்றம் (கலா.1:6). மாம்சத்தில் முடிவு பெறுவது பின்மாற்றம் (கலா.3:1-3).
ஏன் பின்மாற்றம் வருகிறது? நமக்குள் பெருமை வரும்போது தேவனைவிட்டு பின்வாங்கிப் போகிறோம் (நீதி.16:18); இச்சை தேவனைவிட்டு பின்வாங்கச் செய்கிறது (சங்.106:14). பொருளாசை தேவனைவிட்டு பின்மாற காரணமாகிறது (1தீமோ.6:10). மேலும் பார்க்கும்போது செழுமை (உபா.8:10-14); உபத்திரவத்தினால் வரும் இடறல் (மத்.13:21), திவ்விய சுபாவங்களை வாஞ்சிக்காதது (2பேதுரு 1:8,9) முழு இருதயத்தோடும் தேவனை வாஞ்சிக்காதது (வெளி.3:16,17) போன்ற காரியங்கள் தேவனைவிட்டு பின்வாங்கச் செய்கிறது.
இந்த மனிதன் எருசலேமை விட்டு எரிகோவிற்கு போகும்போது கள்ளர் கையில் அகப்பட்டுக் கொண்டான். தேவனைவிட்டு பின்வாங்கிப் போகும்போது முதலாவதாக வழியிலே கள்ளர்கள் இருப்பார்கள் (லூக்.10:30). தேவனைவிட்டு பின்வாங்கிப் போகும்போது சாத்தான் கையில் அகப்பட்டுக் கொள்வோம். சாத்தான் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித் திரிகிறான் (1பேதுரு 5:8).
இரண்டாவதாக கள்ளர் வஸ்திரங்களை உரிந்துகொள்வார்கள் (லூக்.10:30). இரட்சிக்கப்படும் போது தேவன் அருளும் நீதியின் சால்வையை பின்மாற்றக்காரரிடம் இருந்து பிசாசு பறித்துக்கொள்வான். சாட்சியின் ஜீவியத்தை அபகரிப்பான்.
மூன்றாவதாக கள்ளர் காயப்படுத்துவார்கள் (லூக்.10:30). பின்மாற்றக்காரரின் இருதயத்தை பிசாசு காயப்படுத்தி அவர்கள் சந்தோஷத்தை, சமாதானத்தை எடுத்துப்போடுவான்.
நான்காவதாக கள்ளர் குற்றுயிராய் விட்டுவிட்டுப் போவார்கள் (லூக்.10:30). பின்மாற்றக்காரர் அநேக வேதனைகளினால் தங்களை உருவக் குத்திக் கொள்வார்கள் (1தீமோ.6:10).
எருசலேமை விட்டு எரிகோவிற்கு சென்ற இந்த மனிதனை குற்றுயிராய் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்பொழுது அந்த வழியாக மூன்று மனிதர்கள் வருகிறார்கள்.
முதலாவதாக ஆசாரியன்: இவன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் பாக்கியம் பெற்றவன். எல்லோராலும் கனம் பெற்றவன். வழியிலே குற்றுயிராய் கிடந்த அந்த மனிதனைக் கண்டான். ஆனால் இந்த ஆசாரியன் இரக்கம் இல்லாதவனாய் இருந்தான். கண்டும் காணாமல் அந்த இடத்தைவிட்டு போய்விட்டான். ஆத்தும தரிசனம் அவனுக்கு இல்லாதிருந்தது.
இரண்டாவதாக லேவியன்: இவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணிவிடை செய்கிறவர்கள். அவனும் குற்றுயிராய் கிடக்கிற அந்த மனிதனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனான். மனதுருக்கம் இல்லாதவனாயிருந்தான்.
மூன்றாவதாக சமாரியன்: இவன் புறஜாதியான்.
முதலாவதாக இந்த சமாரியன் குற்றுயிராய் கிடக்கிற அந்த மனிதனைக் கண்டான். ஆத்தும மீட்பில்லாமல் குற்றுயிராய் கிடக்கிற அந்த மனிதனைக் கண்டான். ஆத்தும மீட்பில்லாமல் குற்றுயிராய் கிடக்கிறவர்களைக் காணும் கண்கள் நமக்குத் தேவை.
இரண்டாவதாக மனதுருகினான். இயேசு மேய்ப்பனில்லாத ஆடுகளைக் கண்டு மனதுருகினார். ஆத்துமாக்களைக் குறித்து மனதுருகி அவர்களுக்காக மன்றாட வேண்டும்.
மூன்றாவதாக கிட்ட வந்தான். ஆனால் லேவியரும் ஆசாரியரும் பக்கமாய் விலகிப் போனார்கள். இவனோ அருகில் வந்தான். ஆத்துமாக்களைக் குறித்து கரிசனை நமக்குத் தேவை.
நான்காவதாக அவனது காயங்களைக் கண்டான். உள்ளான மனுஷனில் காயப்பட்டவர்களை இனங்கண்டு கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக தன்னிடத்திலிருந்து எண்ணெயையும், திராட்சரசத்தையும் பயன்படுத்தி காயங்களைக் கட்டினான். தாலந்துகளை திறமைகளை பயன்படுத்தி ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை வழிநடத்த வேண்டும்.
ஆறாவதாக சுயவாகனத்தில் ஏற்றினான். ஆத்துமாக்களுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தியாக வாழ்க்கை தேவை.
ஏழாவதாக பராமரிக்கும் இடத்திற்கு கொண்டுபோனான். ஆத்துமாக்களை பாதுகாக்க வேண்டும். சத்திரம் சபையைக் குறிக்கிறது. ஆத்துமாக்களை சபைக்குள் கொண்டுவர வேண்டும்.
எட்டாவதாக சத்திரத்தில் சேர்த்த பின்பு திரும்பி வருவதாக கூறினான். சபைக்குள் வரும் புதிய ஆத்துமாக்களை அப்படியே விட்டுவிடாமல் அவர்களை திடப்படுத்த வேண்டும்.
தேவ பிள்ளைகளே! இன்றும் கூட திருச்சபைக்குத் தேவை கனம் பொருந்திய மனிதராய் இருந்தும் இரக்கமற்றவர்களாய் இருப்பவரோ அல்லது கடமையை மறந்து பக்க வழியாய் செல்பவரோ அல்ல, கிட்ட வந்து, மனதுருகி, தன்னுடைய உடைமைகளை தாராளமாய்க் கொடுத்து, ஆத்துமாக்களை சபையில் சேர்த்து பராமரிக்கும் நல்ல சமாரியர்களே!