வேல்ஸ் தேசத்தின் பிரபல பிரசங்கிகளில் கிறிஸ்மஸ் எவன்ஸ் விசேஷமானவர். இவரது பிரசங்கங்களைக் கேட்ட மக்கள் ஆவியில் உற்சாகங் கொண்டு தேவ வல்ல மையைக் கண்டார்கள். இவரது மனந்திரும்புதலைக் கண்ட இவருடைய பழைய துஷ்ட சிநேகிதர்கள் இவரைப் பிடித்து குரூரமாய் அடித்து வதை செய்தபோது ஒரு கண்பார்வையை இழந்துவிட்டார். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று பிறந்ததால் கிறிஸ்மஸ் எவன்ஸ் என பேர் பெற்றார். இவரது பிரசங்கங்களைக் கேட்ட ஜனங்கள் அழுது தேவ இரட்சிப்பைத் தேடினார்கள். ஜனங்களுடைய இருதயத்தை அவரது பிரசங்கங்கள் வல்லமையாய் பிடித்துக்கொண்டன.
ஒருநாள் திடீரென்று ஜெப வாஞ்சையால் நிரப்பப்பட்டார். இயேசுவின் நாமத்தைச் சொல்லி ஜெபிக்கும்போது கட்டுகள் அறுந்து விழுவது போலவும் அவருக்குள் இருந்த மலை போன்ற பாரம் பனிக்கட்டி போல் உருகிப்போகவும் கண்டார். கண்களிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக ஓடிற்று. எல்லா சபைகளுக்காகவும் ஊக்கமாக ஜெபித்தார். தெய்வீக உணர்ச்சி திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருந்ததால் அழுது அழுது தளர்ந்து போனார். அதன்பின் ஆவி ஆத்துமா சரீரத்தை முற்றிலும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சி ஒரு புது தெய்வீக வெளிப்படுத்துதலை அளித்ததால் புதிய மனிதனாக புதிய ஜீவனோடு வசனத்தைக் கூறினார். பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆத்தும பாரத்தால் நிரப்பப்பட்டார். இதற்குப் பிறகு தேவனோடு உடன்படிக்கை செய்துகொண்டு புது வல்லமையோடு பிரசங்கிக்கலானார். ஒரு புது ஆவியின் அபிஷேகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
இவரது பிரசங்கங்களை கேட்டவர்கள் பாவ உணர்வினால் குத்துண்டு அழுது மனந்திரும்பினார்கள். ஸ்தோத்திரமும் ஜெபமும் அடிக்கடி கூட்டங்களில் கேட்கப்படும். ஜனங்கள் அதிர்ச்சியடைந்து நடுங்கி விழுவார்கள். இவருடைய ஊழியம் வல்லமை யுள்ள பிரசங்கங்கள், ஆவியின் அசைவு, அழுகைகள், ஸ்தோத்திரங்கள், பாவிகள் தேவனிடம் மனந்திரும்புதல் போன்ற அம்சங்களால் நிறைந்ததாக இருந்தது. இவரது “கல்லறைக் குழி” பிரசங்கத்தில் உலகம் நியாயப்பிரமாணமாகிய கல்லறைக் குழியில் மரித்துக் கிடக்கிறதென்றும், நீதி பரலோக வாசலைக் காத்துக்கொண்டிருக்கிற தென்றும், இரக்கம் கதவைத் திறக்க வருகிறதென்றும் அவர் விவரிக்கும்போது, ஜனங்களைப் பாவ உணர்ச்சி பெரு வெள்ளம் போல் அசைத்துவிடும்.
எவன்ஸ் ஒரு கிராமத்துக்குள் செல்லும்போது மற்ற கிராமங்களுக்குள் ஒரு வல்லமை நுழைவது போலிருக்கும். அதனால் ஜனங்கள் சீக்கிரம் கூட்டம் கூட்டமாக அவரை நோக்கி வந்துகொண்டிருப்பார்கள். பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் பொருட்படுத்தாமல் வருவார்கள். நிச்சயமாகவே அவரது பிரசங்கங்கள் மிகவும் அதிர்ச்சி கொடுக்கிறதாக இருந்தன. இவருடைய சுவிசேஷம் அரும் பொருள் நிறைந்ததாகவும் இருந்தது. மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் காணப்பட்டதால் எல்லாரும் பாவ உணர்வடைந்தார்கள். ஆவியின் வல்லமை இல்லாவிட்டால் ஊழியம் பயனற்றது என அடிக்கடி கூறுவார்.
ஒருமுறை ஒரு தேவாலயம் கட்ட பணம் சேர்த்துக்கொண்டிருந்த போது திரளான மக்கள் கூடியிருந்தபோதிலும் தாராளமாக கொடுக்கும் சிந்தை காணப்படவில்லை. ஆடுகள் திருடுகிற பழக்கமுள்ளவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கொடுக்கவேண்டாம் என கூறினார். அதன்பின் ஏராளமான பணம் வந்து குவியலாயிற்று. கையில் பணம் கொண்டுவராதவர்கள் கூட மற்றவர்களிடம் வாங்கி கொடுக்கலானார்கள். தேவை சந்திக்கப்பட்டது. ஆலயம் கட்டப்பட்டது.