அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள்

Written by Pr Thomas Walker

August 22, 2010

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் மாறாதவர். அவர் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும், குடும்பத்தையும், சபையையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை நிறைவாக்க விரும்புகிறார். ஜெயத்தை கொடுக்க விரும்புகிறார். தேவனின் ஆசீர்வாதங்கள் எல்லாமே நிபந்தனையோடு கூடியதே. அவர் சொல்லுகிறபடியே செய்கிறவர்களை ஆசீர்வதிப்பார். அடிமையாக – ஏன் என்று கேள்வி எழுப்பாமல் உடனே கீழ்ப்படிகிறவர்களை ஆசீர்வதிக்கிறார். அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறார். யோவான் 2:5 வசனத்தின்படி, “அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்” என்றாள். வேலைக்காரர்கள் மரியாளின் வார்த்தையின்படியே கீழ்ப்படிந்து செயல்பட்டனர். இயேசு வேலைக்காரரிடம் “ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். பின்பு அவர்களை நோக்கி, “நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார். வேலைக்காரர்கள் இயேசுவின் வார்த்தையின்படி செய்ததால் அற்புதம் கானாவூர் கல்யாண வீட்டில் நடந்தது.


யோவான் 5:30 வசனத்தில், “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது” என்று இயேசு சொன்னார். இயேசு தன் விருப்பப்படி எதையும் தானாகவே சுயமாய் செய்யவில்லை. எப்பொழுதும் பிதா அவருக்குச் சொன்னதையே கீழ்படிந்து செய்தார். மேலும் யோவான் 12:49,50 வசனங்களில் கூட, “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.” இயேசு எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானபடி செய்ததால் அற்புதங்கள் அடையாளங்கள் நடந்தன. இயேசுவின் உபதேசத்தாலும், வாழ்க்கையாலும், மரணத்தாலும் அநேகர் நீதிமான்களாக மாற்றப்பட்டனர். இயேசு மரணம் பரியந்தமும் பிதாவுக்கு கீழ்படிந்ததால் எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார்.
தேவனுடைய வார்த்தையின்படியே செய்து ஆசீர்வதிக்கப்பட்டவர்களை வேதத்திலிருந்து காணலாம்.

 முதலாவதாகமரியாள்
லூக்.1:38 வசனத்தில் “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். மரியாள் தன்னை அடிமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததால் தேவன் அவரை ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், இயேசுவை பெற்றெடுக்கும் பாக்கியம் உடையவராகவும் மாற்றினார். ஆனால் ஆதாம், ஏவாள் வாழ்க்கையிலே அவர்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைக்கு – கீழ்ப்படியாமல் சர்ப்பத்தின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் பாவத்திற்குள்ளானார்கள். பாவம் அவர்கள் மூலமாக உலகத்திற்குள் பிரவேசித்தது. சாபத்தையும் தேவ தண்டனையையும் பெற்றனர். விசுவாசியே தேவனுடைய சத்தத்தை கவனமாய்க் கேட்டு, ஞானமாய், புத்தியாய் செயல்படு. சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாய் புத்தி கூர்மையுடன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதில் கவனமாயிரு அப்பொழுது கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
பிலி.4:19 வசனத்தின்படி, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்”.

 இரண்டாவதாகஇஸ்ரவேல் மக்கள் வாழ்க்கையிலே அற்புதம்
இஸ்ரவேலர் வனாந்திரத்தில் இறைச்சிக்காக மோசேயிடம் முறையிட்டனர். தேவன் இஸ்ரவேலருக்கு காடையைக் கொடுத்தார். எண்.11:31 வசனத்தில், “…கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.” தேவன் செயல்படும்போது மனிதரின் தேவையை நிறைவாக பூர்த்தி செய்து திருப்தியாக்குகிறார். தேவன் வானத்தை திறந்து நிறைவாய் ஆசீர்வதிக்கும்போது உன் அவிசுவாசத்தால் ஆசீர்வாதம் வீணாய்ப் போய்விடும். விசுவாசித்தால் நம் ஜீவியம் சரியாக காணப்பட்டால் நிறைவான ஆசீர்வாதம் கிடைக்கும்.

 மூன்றாவதாகநோவா
ஆதி.6:14,15 வசனங்களில், “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு” என்றார். நோவா தேவன் சொல்லியபடியே கொப்பேர் மரத்தால் பேழையைச் செய்தான். அந்தக் காலத்தில் மழையே பூமியில் பெய்யவில்லை. கப்பல் கூட ஆடினநட-லுக்கு பார்த்ததில்லை. தன் ஆஸ்தி முழுவதையும் செலவழித்து தேவன் சொன்னபடி ஒரு கப்பலைக் கட்டினான். எனவே தேவன் நோவா குடும்பம் முழுவதையும் பெரிய அழிவிலிருந்து காத்தார். தேவனுடைய பிள்ளைகள் சாதாரணமானவர்களானாலும் தேவன் செய்யும்படி சொல்லும் காரியத்தில் பெலனும், ஞானமும், கிருபையும் தருகிறார். அவர் சொல்வதைச் செய்தால் மேன்மை, செய்யாவிட்டால் கோபாக்கினை வரும்.

 நான்காவதாகஆபிரகாம்
ஆதி.12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி, “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்றார். ஆபிரகாம் கீழ்ப்படிந்தான் தேவன் பெரிய ஜாதியாக்கி பெருமைப்படுத்தினார். லோத்து கீழ்ப்படியாததால் சபிக்கப்பட்ட சந்ததிக்கு தகப்பனாக மாறினான்.

 ஐந்தாவதாகதாவீது
சவுல் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாததால் இராஜ்ஜிய பாரத்தை இழந்தான். தாவீது உத்தமனாகக் காணப்பட்டதால், தேவன் அவன் சந்ததியை ஆசீர்வதித்தார்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே!
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். பழைய ஆதாம் கீழ்ப்படியாமையினால் ஏதேனின் வாழ்வை இழந்தான். புதிய ஆதாமாகிய இயேசுவோ மரண பரியந்தம் கீழ்ப்படிந்து, சிலுவையில் மரித்ததால், எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார். பிதாவாகிய தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்துள்ளார். நாமும் தேவ வார்த்தைக்கும், பரிசுத்த ஆவியானவரின் சத்தத்துக்கும் கீழ்ப்படிந்து மேன்மையான ஆசீர்வாதத்தைப் பெறுவோமாக!
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This