யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு

Trees

Written by Dr Ajantha Immanuel

July 10, 2021

நம்முடைய வாழ்க்கையைக் குறித்து தேவன் கொண்டிருக்கும் நோக்கமும் திட்டமும் வேறு. நாம் கொண்டிருக்கும் கனவுகளோ வேறு என்பதை விளக்கும் ஒரு கற்பனைக் கதை இது.

ஒரு காட்டில் மூன்று மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மூன்று மரங்களும் தங்கள் எதிர்கால கனவுகளைக் குறித்து ஒன்றோடொன்று சம்பாஷித்துக் கொண்டன. முதல் மரம், “நான் தங்கம், வெள்ளி வைர நகைகளை வைக்கும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெட்டகமாக மாற விரும்புகிறேன். எல்லாரும் என் அழகை வியந்து பாராட்டுவார்கள்” என்று பெருமிதத்தோடு கூறியது.

இரண்டாவது மரம், “நான் ராஜகுல மக்களை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றிச் செல்லும் ஒரு பெரிய சொகுசு கப்பலாக மாற விரும்புகிறேன்” என்று கூறியது. கடைசியாக மூன்றாவது மரம், “நான் இந்தக் காட்டிலேயே உயர்ந்த உறுதியான மரமாக மாற விரும்புகிறேன். என்னை பார்ப்பவர்கள் இந்த மரம் பரலோகத்தை எட்டிவிடும்போல் இருக்கிறதே என்று கூறி என்னைப் புகழுவார்கள்” என்றது.

சில வருடங்கள் உருண்டோடியது. அந்தக் காட்டிற்கு ஒரு கூட்டம் மனிதர்கள் வந்தார்கள். ஒரு மனிதன் முதல் மரத்தின் அருகே சென்று, “இந்த மரம் உறுதியான மரமாக இருக்கிறதே. இதை ஒரு தச்சனிடம் நல்ல விலைக்கு விற்றுவிடலாம், நல்ல லாபம் கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே அதை வெட்ட ஆரம்பித்தான். முதல் மரம் தன் கனவு நனவாகப்போகும் நாளை எண்ணி மகிழ்ச்சி கொண்டது. இரண்டாவது மரத்தினருகே வந்த மற்றொரு மனிதன், “இந்த மரம் மிகவும் பலம் வாய்ந்த மரமாக இருக்கிறதே. இதைக் கப்பல்களை வடிவமைக்கும் இடத்தில் விற்று விடலாம், நல்ல லாபம் கிடைக்கும்” என்று கூறி அதை வெட்டினான். இரண்டாவது மரம் தன் கனவு பலிக்கும் நாளை எண்ணி மகிழ்ந்தது. மூன்றாவது மரத்தினருகே ஒருவன் வந்தான். அவன் “இந்த மரம் எதற்கும் பயன்படாது” என்று கூறி, அதை வெட்டினான். மூன்றாவது மரம் தன் கனவு பலிக்காததைக் கண்டு மிகுந்த கவலை கொண்டது.

முதலாவது மரம் ஒரு தச்சனிடம் விற்கப்பட்டது. அவன் அதை வைக்கோலை வைக்கும் ஒரு பெட்டியாக உருவாக்கினான். பின்பு அது வைக்கோலால் நிரப்பப்பட்டு ஒரு மாட்டுத்தொழுவத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது மரம் ஒரு சிறிய படகாக வடிவமைக்கப்பட்டது. மூன்றாவது மரம் எதற்கும் பயன்படாமல் வீட்டில் ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டது.

பல வருடங்கள் உருண்டோடியது. மரங்கள் தங்கள் கனவுகளை மறந்து விட்டிருந்தன. ஒருநாள் ஒரு மனிதன் அந்த மாட்டுக்கொட்டிலுக்கு தன் மனைவியுடன் வந்தான். அவனது மனைவி அந்த மாட்டுக்கொட்டிலிலே பிரசவித்தாள். பிள்ளையை துணிகளில் சுற்றி வைக்கோல் நிரப்பப்பட்ட பெட்டியில் கிடத்தினார்கள். அந்தக் குழந்தைதான் உலகத்தை இரட்சிக்க மனிதனாய் மண்ணில் அவதரித்த அழியாத பொக்கிஷமாகிய கிறிஸ்து என்பதை அறிந்த முதல்மரம் தேவனுடைய அநாதி தீர்மானத்தை நினைத்து அகமகிழ்ந்தது. பின்னொருநாள் இரண்டாம் மரத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த சிறிய படகில் சில மனிதர்கள் ஏறினார்கள். அதில் ஒருவர் மிகுந்த களைப்படைந்தவராய் படகின் அடித்தளத்தில் உறங்கிவிட்டார். அந்தப் படகு நடுக்கடலை அடைந்தபோது, புயல் பலமாக வீசியது. அதில் ஏறின மனிதர்கள் கலக்க மடைந்து, படகின் அடித்தளத்தில் உறங்கினவரை எழுப்பினார்கள். அவர் எழும்பி “இரையாதே அமைதலாயிரு” என்றார். காற்றும் கடலும் அமர்ந்தது. அந்த மனிதர் தான் பூமியை நியாயந்தீர்க்க மண்ணில் அவதரித்த ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து என்பதை உணர்ந்து பேருவகைக் கொண்டது இரண்டாவது மரம்.

பல நாட்கள் கேட்பாரற்றுக் கிடந்த மூன்றாவது மரத்தை ஒரு மனிதர் சுமந்துகொண்டு எருசலேம் வீதிகளில் நடந்தார். அவரைப் பார்த்தவர்கள் அநேகர் அவரை பரிகசித்தனர். அவர் வாரினால் அடிக்கப்பட்டார். இறுதியாக அவர் சுமந்து சென்ற மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலுவையில் மூன்று ஆணிகளால் கடாவப்பட்டார். அந்த மனிதர் தான் உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்க தன் இன்னுயிரையே பலியாகத் தந்த இயேசுகிறிஸ்து என்பதை உணர்ந்த மூன்றாவது மரம் மெய்சிலிர்த்துப் போனது.

நம் ஒவ்வொருவரையுங் குறித்தும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக் கிறார். நம்முடைய வழிகள் வேறு. தேவனுடைய வழிகள் வேறு. அவர் நம்மை அழைத்த அழைப்பின் மேன்மையை உணர்ந்து நம் சிலுவையை சுமந்துகொண்டு ஆண்டவரைப் பின்பற்ற வேண்டும், அப்பொழுதுதான் மெய்யான பரலோக சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்”

“பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8,9)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This