கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நாம் தேவனுடைய கிருபையின்படி புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின்மேல் கட்ட வேண்டும். அவனவன் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்க வேண்டும். போடப்பட்ட அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால் அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும் நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால் அவன் கூலியைப் பெறுவான். கட்டினது வெந்துபோனால் அவன் நஷ்டமடைவான் என்று பவுல் அப்போஸ்தலன் கூறியுள்ளார்.
மேலும், இயேசுவே தன் மலைப் பிரசங்கத்தில் “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” கற்பாறையில் கட்டுவது மிகக் கடினம். ஆனால் நிலைத்து நிற்கும். கிறிஸ்து என்னும் ஞானக் கன்மலைமேல் நம் வீடு கட்டப்பட்டால் நிலைத்து நிற்கும். கிறிஸ்துவின்மேல் விலையேறப்பெற்ற கல், பொன், வெள்ளி வைத்து கட்டினால், வேலைப்பாடு வெளியாகும் நாளில் நாம் நிலைத்திருப்போம். கூலியைப் பெறுவோம்.
சாலமோன் ஞானி நீதிமொழிகளில், “பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்கள்” என்கிறார் (நீதி.30:24,26). பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் – நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷன். தேவனுடைய சித்தம் செய்யாதவன் கிறிஸ்துவாகிய கன்மலைமேல் தன் வீட்டைக் கட்ட முடியாது. மேலும், லூக்.12:47ஆம் வசனத்தில், “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.”
கற்பாறையில் வீட்டைக் கட்ட தேவையானவைகள் எவை? என்று பார்ப்போம்
1. பொறுமை தேவை:
யாக்.1:2-4ஆம் வசனங்களில், “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” என்கிறார் யாக்கோபு அப்போஸ்தலன். சில சமயங்களில் நன்மைசெய்து பாடு அனுபவிக்க வேண்டும். நன்மை செய்வதற்கு பதிலாக தீமையை அடைகிறோம். சிலருக்கு அன்பு பாராட்டியும், பகைமையை சந்திக்கிறோம். மேலும் லூக்.21:19ல் இயேசுவே கூறியுள்ளார் “உங்கள் பொறுமையினால், உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்கிறார். பொறுமை நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. குறுக்கு வழியில் போகாதே. எபி.10:36ஆம் வசனத்தில் “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” பவுல் அப்போஸ்தலன் ரோம சபைக்கு எழுதும் நிருபத்தில் ரோம.5:3-5ஆம் வசனங்களில், “…உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.”
2. போதிக்கிறபடி செய்ய வேண்டும்:
யாக்.3:1ஆம் வசனத்தில், “என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” என்கிறார். சொல்லுகிறபடி செய்ய வேண்டும். சொல் தவறாதவனானால், அவன் பூரண புருஷன், அவன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்.
மத்.23:2,3ஆம் வசனங்களில், “வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” நாம் நம்மை நிதானித்துப் பார்க்க வேண்டும். போதிக்கும் நாம் அதின்படி செய்யாவிட்டால் ஆக்கினைக்குட்படுவோம். றுந ளாயடட சநஉநiஎந பசநயவ உடினேநஅயேவiடிn மற்றவர்களுக்கு போதிக்க முன்னால் நிற்கிறோம். ஆனால் அதின்படி செய்கிறோமா? என்று பார்ப்போம்.
3. நீங்கள் ஆசீர்வதியுங்கள்:
1பேதுரு 3:9ல் “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.” நாம் தீமையைவிட்டு விலக வேண்டும். பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்கு தன் உதடுகளையும் விலக்கி காக்க வேண்டும். மேலும் மத்.5:44,45ஆம் வசனங்களில், “…உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;”
4. கர்த்தருக்கு மனப்பூர்வமாய் செய்யுங்கள்:
கொலோ.3:24,25ஆம் வசனங்களில், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை” தேவனுக்கு கொடுப்பதானாலும், ஊழியம் செய்வது, பணிவிடை செய்வது எதுவானாலும் மனப்பூர்வமாய் நாம் செய்ய வேண்டும்.
அன்பு நண்பரே! நாம் கிறிஸ்துவின்மேல் கட்டடம் கட்டிடும் புத்தியுள்ள சிற்பாசாரிகள். மாளிகையாக இசைவிணைப்பாக அவர்மேல் கட்டப்பட வேண்டும். ஜீவனுள்ள கற்களை வைத்து கட்ட வேண்டும். விலையேறப் பெற்ற பொன், வெள்ளி, இரத்தின கற்களை வைத்துக் கட்ட வேண்டும். அவனவன் செய்யும் வேலை பரிசோதிக்கப்பட்டு, கட்டினது நிலைத்தால் கூலியைப் பெறுவோம். எனவே, பொறுமையாகவும், நாம் போதிக்கிறபடி செய்கிறவர்களாகவும், சத்துருக்களையும், சபிப்பவர்களை ஆசீர்வதிக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும். நாவை பொல்லாப்புக்கு விலக்க வேண்டும். கர்த்தருடைய காரியங்களில் மனப்பூர்வமாய், உத்தமமாய் செய்தல்போல விலையேறப்பெற்ற ஆவிக்குரிய கற்களை வைத்து நமது மாளிகையை கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் கட்டி, தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவோம்! அல்லேலூயா!