ஒரு கிராமத்தில் வாழ்ந்த அவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவருடைய வயல் நிலங்களும் ஒன்றன் அருகில் ஒன்று அமைந்திருந்தது. வயலில் வேலை செய்வ தற்குத் தேவையான கருவிகளையும், இயந்திரங்களையும் இரு சகோதரர்களும் நாற்பது வருடங்களுக்கு மேலாக பொதுவாக வைத்து வேலை செய்து வந்தனர்.
இந்த ஒற்றுமைக்கு ஒரு பங்கம் வந்தது. சகோதரருக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. இளைய சகோதரன் இரு வயல் நிலங்களுக்கும் நடுவே ஒரு பெரிய வாய்க்காலை உண்டுபண்ணினான். மேலும் வேலை செய்வதற்குத் தேவையான இயந்திரங்களையும் தானே வைத்துக் கொண்டான். இதனால் மூத்த சகோதரன் மிகவும் மனம் வருந்தினான்.
ஒருநாள் காலை மூத்த சகோதரனுடைய வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தபோது ஒரு தச்சன் நின்றுகொண்டிருந்தான். “ஐயா தயவுசெய்து ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள்” என்று வருந்தி கேட்டுக்கொண்டான். மூத்த சகோதரன் அந்த தச்சனை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றான். “கடந்த வாரம் வரை நானும், என் சகோதரனும் ஒற்றுமையாகவே இருந்தோம். இப்பொழுது எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்துவிட்டோம். அவன் எங்கள் இரு வயல்நிலங்களுக்கும் நடுவே ஒரு வாய்க்காலை உண்டுபண்ணி விட்டான். மேலும் உழ பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அவனே எடுத்துக்கொண்டான். இது எனக்கு மிகவும் மனவேதனையாக இருக்கிறது. நான் அவன் வயல்நிலத்தைப் பார்க்க விரும்பவில்லை. எனவே எட்டடி உயர வேலி ஒன்றை அமைத்துத் தர வேண்டும்” என்று மூத்த சகோதரன் தச்சனிடம் கேட்டுக்கொண்டான். அதற்கு தச்சனும் சம்மதித்தான்.
வேலி கட்டும் வேலையை தச்சனிடம் ஒப்படைத்துவிட்டு மூத்த சகோதரன் சில நாட்கள் வெளியூர் சென்றிருந்தான். அந்தத் தச்சனும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்ய ஆரம்பித்தான். வெளியூர் சென்று திரும்பிய மூத்த சகோதரன் வேலை நடந்துகொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. அங்கு அவன் எட்டடி உயர வேலியைக் காணவில்லை. ஆனால் இரு வயல்களுக்கும் நடுவே மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அழகிய பாலத்தைக் கண்டான். பாலத்தின் மறுமுனையில் இளைய சகோதரன் நின்றுகொண்டிருந்தான். பாலத்தின் நடுப்பகுதி வரை வந்த மூத்த சகோதரனும் இளைய சகோதரனும் கண்ணீர் மல்க கை குலுக்கிக் கொண்டனர்.
மூத்த சகோதரன் அந்தத் தச்சனுடைய கரங்களைப் பிடித்துக்கொண்டு, “நீ எங்களோடு தங்கவேண்டும். நாங்கள் உனக்கு வேலை தருகிறோம்” என்றான். ஆனால் அந்தத் தச்சனோ “நான் இதைப்போல் அநேகம் பாலங்களை உருவாக்க வேண்டியுள்ளது” என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.
இந்த சம்பவத்தை வாசிக்கும் அன்பர்களே! இன்று குடும்பங்களிலும், சமுதாயத்திலும், சமாதானமில்லாத சூழ்நிலையே காணப்படுகிறது. “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப் படுவார்கள்” என்று மத்.5:9ல் பார்க்கிறோம். எனவே சமாதானப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் அந்தத் தச்சனைப்போல அநேக சமாதானப் பாலங்களை உண்டாக்க முனைவோமாக!