வாலிபப் பருவம் என்பது துடுக்கானது, மிடுக்கானது, துடிப்பானது. ஆர்பரித்துக் கொட்டும் வலிமையுடைய அருவியைப் போன்றது. எதையும் இழுத்துப்போட்டுச் செய்யும் கொடிய வேகமுடைய பருவமாயிருந்தாலும், சரியான முடிவெடுக்கும் அனுபவமில்லாத இரவென்றும் பகலென்றும் சொல்ல முடியாத அந்திப்பொழுதைப் போன்ற விடலைப்பருவம்!
இந்தப் பருவத்தில் நல்ல ஆலோசனை வழங்கும் பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், ஆவிக்குரிய தகப்பன்மார்கள் என்று ஒரு குழுவினர் கிடைத்து விட்டால், ஆர்பரித்துக்கொட்டும் அருவிக்கு கால்வாய் அமைத்துக்கொடுத்து செல்லும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்குவது போலாகிவிடும்!
சரி அண்ணன்! காற்றுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில நேரங்களில் வாழ்க்கையில் வீசும் தென்றல் காற்றை (வாய்ப்பை) இறைவனின் ஒப்புதலாக, அங்கீகரிப்பாக நினைத்து அதில் பயணம் செய்யும்போது பதுங்கியிருக்கும் புயல் காற்று கொடூரமாய் தாக்கி எல்லாவற்றையும் கவிழ்த்து, நாசமாக்கி தலைகீழாய் போட்டுவிடும். எனவே, எல்லா சாதகமான சூழ்நிலைகளும் இறைவனிடமிருந்து வருவதில்லை.
பரிசுத்தவான் ஒருவர் எழுதும்போது, “வாலிபர்கள் தங்கள் வேலையைப்பற்றியும் திருமணத்தைப் பற்றியும் தெளிவான தேவ நடத்துதலைப் பெற்று, அதன்படி நடந்துவிட்டால், தேவ சித்தம் செய்வதென்பது கடினமில்லாமல் போய்விடும். இவ்விரண்டிலும் கோட்டையை விட்டவர்கள், பின்னாளில் கஷ்டப்பட்டு தேவசித்தம் செய்யவேண்டிய கட்டாயநிலைக்குள் தள்ளப்படுவார்கள்” என்றார்.
எனதருமை தம்பி தங்கைகளே! “தடுக்கும் காற்று” (Wind which blocks) என்று ஒரு காற்று இருக்கிறது. தேவனுடைய விருப்பத்தை மீறி செல்லும்போது தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பினிமித்தம், சில கஷ்டமான சூழ்நிலைகளை அனுமதிப்பார். உஷாராகப் புரிந்துகொண்டு தேவனுக்கு விருப்பமில்லாதவற்றை விட்டுவிட்டால், காற்றும் அமர்ந்துவிடும். என்னே! தேவனின் அன்பு!
“என்னது! தடுக்கும் காற்று, தென்றல் காற்று, புயல் காற்றா? ஐயய்யோ! என் வாழ்க்கையில் என்ன காற்று வீசுதுன்னு தெரியலையே? அண்ணன் இப்படி ஒரு குண்டை போட்டுட்டு போய்ட்டாரே”ன்னு சொல்லக்கூடாது. உன் வாழ்க்கையில் வந்திருக்கும் வாய்ப்பு தடுக்கும் காற்றா? தென்றல் காற்றா? புயல் காற்றா? என்பதை கட்சிதமாக சொல்லக்கூடியவர் “பரிசுத்த ஆவியானவர்தான்!” ஒருவேளை அந்த அனுபவம் இல்லையென்றால் உன் பெற்றோர், ஆசிரியர், ஆவிக்குரிய தகப்பனின் ஆலோசனை மூலமாக பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த முடியும் என்று விசுவாசி!
சரி நண்பர்களே! அப்போஸ்தலர் 27ஆம் அதிகாரம், தடுக்கும் காற்று, தென்றல் காற்று, புயல் காற்று என்று மூன்று வகையான காற்றுகளைப் பற்றி சொல்லுகிறது. “எங்க! அதை படிச்சி தியானிங்க பாப்போம்! தியானிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் உன்கிட்ட பேசுவார். என்ன பேசினாருன்னு அண்ணங்கிட்ட சொல்றிங்களா!” OK! அடுத்த மாதம் சந்திப்போம்!God bless you!