கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார். தாழ்மை என்பது எப்பொழுதும் எல்லாராலும் அறியப்பட வேண்டும். நீதி.22:4ஆம் வசனத்தில் “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” ஐசுவரியம், மகிமை, ஜீவன் இவை மூன்றும் மிகவும் முக்கியம். இவைகளைப் பெற வழி தாழ்மையும் கர்த்தருக்குப் பயப்படுதலும் ஆகும். தாழ்மை இல்லாத இடத்தில் இருப்பது பெருமையே. தாழ்மையினால் ஐசுவரியத்தையும், மகிமையையும், ஜீவனையும் சுதந்தரிக்கலாம்.
1இராஜா.3:11-14 சாலமோன் தன்னைத் தாழ்த்தினதினால் என்ன கிடைத்தது என பார்க்கின்றோம். சாலமோன் கேளாத ஐசுவரியம், கனம், மகிமையையும் தேவன் கொடுத்தார். தேவனால் உயர்த்தப்பட்டான். சவுலும் தான் ராஜாவாக உயர்த்தப்பட்ட ஆரம்ப காலத்தில் தன்னை மிகவும் தாழ்த்தினவனாக இருந்தான்.
ஏசா.51:1ஆம் வசனத்தில், “நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்” எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தேவன் உயர்த்தினார் என்று சிந்திக்க வேண்டும்.
தாழ்மைப்படும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
1) முதலாவது: பாவ மன்னிப்பும் ஷேமமும் உண்டாகிற்று.
2நாளா.7:14 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” என்றார். தேவப்பிள்ளைகள் நம்மை தாழ்த்தி ஜெபித்தால் இரட்சிப்பும் பாவ மன்னிப்பும் க்ஷேமமும் கிடைக்கிறது.
2) இரண்டாவது: தாழ்மைப்படும்போது உயர்வு வரும்.
யாக்.4:10ஆம் வசனத்தில், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப் படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” தாவீது, யோசேப்பு தங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தியபோது உயர்த்தப்பட்டனர்.
3) மூன்றாவதாக: தாழ்த்தும்போது இரக்கம் பெறுவோம்
2இராஜா.22:19; 1இராஜா.21:27ஆம் வசனங்களில், “…உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” தேவனுடைய கண்களில் யோசியாவுக்கு இரக்கம் கிடைத்தது.
1இராஜா.21:27ஆம் வசனத்தில், “ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்”
ஆகாப் தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
4) நான்காவதாக: பணிந்தஆவி உள்ளவர்களிடம் தங்குவார்
“உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா.57:15). தாழ்மையுள்ளவர்களை உயிர்ப்பிப்பார். அவர்களிடம் தங்குவார்.
5) ஐந்தாவது: தாழ்த்துகிறவனே பெரியவனாயிருப்பான்
“ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்.18:4). நாம் சுய பெருமையையோ, சுய மகிமையையோ தேடக்கூடாது.
அன்பு நண்பரே! தாழ்மையுள்ளவர்களை தேவன் உயர்த்துகிறார். நம்மை தேவ சமூகத்தில் தாழ்த்தும்போது தேவ பிரசன்னத்தை உணர முடியும். பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியும். கிருபையையும் தேவனுடைய கண்களில் தயவையும், இரக்கத்தையும் பெறலாம். இரட்சிப்பையும், ஷேமத்தையும் நமக்கும் நம் தேசத்திற்கும் தருவார். எனவே மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். அல்லேலூயா!




