கர்த்தருக்குப் பிரியமானவர்களே!
தேவனைப் பற்றி தெரிந்து இருப்பதைவிட, அறிந்து இருப்பது ஆழமானது விசேஷமானது. “…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். தேவன் அவர்களுக்கு இங்கேயே இளைப்பாறுதலைத் தருகிறார். ரோமர் 8:28 வசனத்தின்படி நாம் அழைக்கப்பட்டவர்களாகவும் அவரிடம் அன்புகூருகிறவர்களாகவும் இருந்தால் இந்த இளைப்பாறுதலை தேவன் தருகிறார். சூழ்நிலைகள் மாறுபட்டாலும், எது எப்படி நடந்தாலும் தம்மிடம் அன்புகூருகிறவர்களுக்கு இளைப்பாறுதலை தருகிறார்.
தேவனிடம் ஆழமான அன்புகொள்ள வேண்டும். தேவன் என்னை நாடின துறைமுகத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பார் என்று விசுவாசிக்க வேண்டும். சகலமும் என்னுடைய நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும். “பயம்” இருந்தால் இளைப்பாறுதல் இருக்காது. மரண பயம் இருக்காது. தேவனிடம் உள்ள பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். மணலை தள்ள கப்பல் உண்டு கடற்கரையில் இது பயன்படுகிறது. சாத்தான் பயத்தின் ஆவியைக் கொடுத்து, நாம் தேவனுடன் பேச விடாதபடி தடுப்பான்.
சங்.42:1 வசனத்தில், “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்று தாவீது கூறுவதுபோல நாம் தேவன்மேல் பிரியமாக அன்புடன் காணப்பட வேண்டும். தேவ தூதர்களுக்கு கண்ணீர், கவலைகள் இல்லை. அவர்கள் அவரை ஓயாமல் துதித்து மகிமைப்படுத்துகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய துதியைவிட நமது துதியின்மீது தேவன் பிரியமாயிருக்கிறார்.
1யோவான் 5:3 வசனத்தின்படி “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” நாம் அவருடைய வசனத்துக்கு கீழ்ப்படிந்து வாழும்போது அவரிடம் அன்புகூருகிறோம்.
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
1. இரக்கம் செய்கிறார்:
யாத்.20:6, “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” என்கிறார். நம் சந்ததிக்கு, நம் பிள்ளைகளுக்கு இரக்கம் கிடைக்கும்படி நாம் தேவனை நேசிக்க வேண்டும்.
2. உடன்படிக்கையையும், தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவனாயிருக்கிறார்:
உபா.7:9 வசனத்தில், “ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்…” நீ தேவனை நேசித்தால் அவர் உடன்படிக்கையைக் காப்பார். ஆதி.50:20 வசனத்தில், “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” ஆபிரகாம் தன் நாட்களில் தேவனுடன் உடன்படிக்கை பண்ணியிருந்தான். தேவனை விசுவாசித்தான் அறிக்கை செய்தான். நம்புவதற்கு ஏதுவில்லாதபோதும் ஈசாக்கை கொடுத்து ஆசீர்வதித்தார்.
யோசேப்பு மட்டும் இதை ஞாபகம் வைத்திருந்தான். மற்ற பிதாக்கள் எகிப்தில் அடக்கம் பண்ணப்பட்டனர். ஆனால் யோசேப்பு தன் எலும்புகள் தன்னுடைய முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஆகவே தன் சகோதரருக்கு நினைப்பூட்டினார். அவர்கள் அதைச் செய்தார்கள்.
யாத்.12:41, “நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது” ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு தேவனை நேசித்தனர். யோசேப்புடைய வாழ்வில் எல்லா கஷ்டங்களையும், துன்பங்களையும் தேவன் நன்மையாக முடியப் பண்ணினார். பிதாக்களுடனும் அடக்கம் செய்யப்பட்டார்.
3. பிதா தாமே உங்களை சிநேகிக்கிறார்:
யோவான் 16:27, “நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” நாம் இயேசுவை நேசித்தால் பிதா நம்மை சிநேகிக்கிறார். பிதாவுக்கு இது பிரியம். மேலும் யோவான் 14:23 வசனத்தில், “…ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” நாம் தேவனுடைய வார்த்தைக்கு நடுங்கவேண்டும். திரியேக தேவனின் உறவு நமக்குக் கிடைக்கிறது.
4. தேவன் கிருபையை அளிக்கிறார்:
எபே.6:24 வசனத்தின்படி, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக” கிருபை தேவனை நேசிக்கிறவர்களுக்கு கிடைக்கிறது. ஏற்ற வேளையில் உதவி கிடைக்க, ஆலோசனை கிடைக்க கிருபை தேவை. வீணான அலைச்சல்கள் இல்லை. கிருபை தாங்கும். கிருபை பெற்றவளே! வாழ்க! என்று வாழ்த்தப்பட்ட மரியாள் கிருபை பெற்றவள். தாழ்மையுடன் வாழ்ந்தாள். கிருபை பெற ஜெபிக்க வேண்டும். வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர வேண்டும். கிருபையும் நன்மையும் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவை. கிருபைக்காக ஜெபித்தால் நன்மை தானாகவே பின்தொடர்ந்து வரும்.
5. ஜீவனும் தீர்க்காயுசுமாயிருப்பார்:
உபா.30:20 வசனத்தில், “….உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்”. தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்துக்கு செவிகொடுத்தால் தேசத்தை சுதந்தரிக்கும் கிருபையைத் தருவார். வீட்டில் சமாதானமும் சந்தோஷமும் நிலைக்கும். அவரே ஜீவனையும், தீர்க்காயுசையும் தருவார்.
பிர.3:13 வசனத்தில், “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” நாம் தேவனுடைய அன்பை சந்தேகிக்க கூடாது, அது பாவம். கூடியீ ளுநஉசநவ நமக்குத் தெரியாது. கடைசி வேளையில் காபிரியேல் தூதனை அனுப்பி விடுவிப்பார்.
அன்பு நண்பரே! அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும். தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் துன்பங்களையும் வேதனைகளையும், பாடுகளையும் அனுமதிக்கிறார். அதின் இரகசியம் நமது நன்மைக்காகவே, நம்மைப் பரிசுத்தப்படுத்த, பூரணபடுத்தி மகிமையில் சேர்க்கவே. யோபு வாழ்க்கையில் வந்த துன்பங்களும் சோதனைகளும் தேவன்மேல் அவர் வைத்திருந்த அன்பை சோதிப்பதற்காகவே. சோதித்தபின் பொன்னாக மாற்றினார். இருமடங்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்தார்.
யோசேப்பின் வாழ்க்கையிலும் சகோதரரால் வந்த துன்பம், பகைமை, சிறை தண்டனை எல்லாம் அவர் தேவனிடத்தில் வைத்த அன்பை சோதிக்கவே. மேலும் ஆதி.45:7 யாக்கோபின் வம்சத்தை பாதுகாக்கவே. “பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்” என்று தேவனின் நோக்கத்தை யோசேப்பு புரிந்துகொண்டார். தேவனை சந்தேகிக்கவில்லை. சிறைச்சாலையிலும் தேவ அன்பில் நிலைத்திருந்தார். நாமும் கடைசிவரை அன்பில் நிலைத்திருந்து ஜீவகிரீடம் பெறுவோம். மாரநாதா!