கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
விசுவாசிகளாகிய நாம் உலகப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதிக் கப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். தேவனுடைய கட்டளைகளை, கற்பனைகளை, தேவன் விதித்த நிபந்தனைகளைக் கைக்கொள்ளும்போது தேவ ஆசீர்வா தங்கள் கிடைக்கிறது. தேவனுக்கு நம் தேவைகள் எல்லாம் தெரியும். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள் வதற்கும் அதிகமாய் ஏற்ற வேளையில் நம் தேவைகளை தேவன் சந்திப்பார். தேவன் தானியேலையும் அவன் மூன்று சிநேகிதரையும் ஆசீர்வதித்தார். தேவன் ஞானத்தையும், விவேகத்தையும், உயர்ந்த பதவிகளையும் கொடுத்தார். ஏன் தானியேலும் அவன் மூன்று சிநேகிதர்களும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதற்குரிய காரியங்களை இங்கு ஆராயலாம்.
முதலாவதாக – உலகத்தோடு ஒத்துப்போகாத வாழ்க்கை
இரண்டாவதாக – தேவனோடு தொடர்புள்ள வாழ்க்கை
மூன்றாவதாக – பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்க்கை
நான்காவதாக – நீதிக்கேடு செய்யாத வாழ்க்கை
ஐந்தாவதாக – சகோதரர்களின் வாழ்வைத் தேடிய வாழ்க்கை
1) உலகத்தோடு ஒத்துப்போகாத வாழ்க்கை
இந்த வாலிபர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ராஜபோஜனத்தை உண்ணவில்லை (தானி.1:8). சாதாரண உணவையே உட்கொண்டனர். ஆனாலும் அவர்கள் முகம் களை உள்ளதாகக் காணப்பட்டது. தேவன் அவர்களை பரீட்சித்துப் பார்த்தார். தேவன் ஒரு பொறுப்பைக் கொடுக்கும் முன்பு ஒவ்வொருவரும் இதற்குத் தகுதியானவர்களா என்று பரீட்சித்துப் பார்க்கிறார். ஆபிரகாம் கொள்ளைப் பொருளின்மேல் ஆசை வைக்கவில்லை (ஆதி.14:21,22). அதை ‘சீ’ என்று விலக்கித் தள்ளினான். உத்தமமான ஆசீர்வாதங்களை ஆபிரகாம் விரும்பினான். ராஜாவின் அரண்மனையில் பணிபுரிய ராஜகுல மக்களில் பல வாலிபர்கள் தெரிந்தெடுக்கப் பட்டனர். ஆனாலும் இந்த 4 எபிரேய வாலிபர்கள் தங்களை பரிசுத்தமாய்க் காத்துக் கொண்டனர். இவர்கள் ராஜ போஜனத்தால் தங்களைத் தீட்டுப்படுத்தவில்லை. தேவன் ஒருவனைப் பரிசுத்தப் படுத்தும்போது வேண்டாத அசுத்தங்களை அவனை விட்டு விலக்குகிறார். யாக்கோபு தந்திரமாய் சம்பாதித்த யாவும் அவனைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அகன்றது. பொன்னையும் வெள்ளி யையும் கர்வாலி மரத்தின்கீழ் புதைத்த பின்பே கானானுக்குள் பிரவேசித்தான். உலகம் அவனுக்குப் பாத்திரமாய் இருக்கவில்லை (எபி.11:38). தாமரை இலை தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீர் ஒட்டாதது போல; மீன் கடலுக்குள் இருந்தா லும் உப்பிராதது போல நாம் உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்தால் கறைபடாத ஜீவியம் செய்ய வேண்டும். தேவனுடைய கண்கள் நம்மைக் காண்கிறது என்கிற எண்ணம் எப்போதும் நமக்கு வேண்டும். உலகத்தால் தீட்டுப்படாமல் ஜீவிக்க தேவன்மேல் வைராக்கிய வாஞ்சையாயிருக்க வேண்டும். இந்த நான்கு வாலிபர்களைப் போன்று நல்ல தீர்மானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உலகத்தோடு ஒத்துப்போகாமல் தேவனை பற்றிக்கொள்ளும் போது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
2) தேவனோடு தொடர்புள்ள வாழ்க்கை
ஜெபம் பரலோகத்தைத் தொடும் ஏணி. தானியேல் மூன்று வேளையும் ஜெபிக்கிற மனிதனாயிருந்தான் (தானி.6:10). அரசு ஆணைக்கு அவன் பயப்படவில்லை. தேவனைக் கனப்படுத்தி அவரைத் தொழுதுகொள்வ தையே முதற்கடனாகக் கொண்டிருந்தான். தானியேல் இடைவிடாமல் ஆராதிக்கும் ஒரு மனிதன் என்பதை அரசன் அறிந்திருந்தான். நம் ஜெப வாழ்க்கை மற்ற வர்கள் அறிந்திருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தானியேல் இடைவிடாமல் ஜெபித்தான், ஸ்தோத்தரித்தான், உபவாசித்தான் (தானி.2:19; 9:3,4)
தானியேலின் வெற்றி ஜெபத்தில் இருந்தது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ தாங்கள் ஆராதிக்கிற தேவன் தங்களை ஆபத்து நேரத்தில் தப்புவிக்க வல்லமையுள்ளவர் என்ற முழு நிச்சயத்தோடிருந்தனர் (தானி.3:17). இடைவிடாமல் ஜெபித்த இந்த நான்கு வாலிபர்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
3) பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்க்கை
பரிசுத்த தேவ ஆவியானவர் அவர்களுக்குள் வாசமாயிருந்தபடியால் அவர்கள் மற்ற வாலிபர்களைப் பார்க்கிலும் பத்து மடங்கு சமர்த்தராயிருந்தனர் (தானி.1:20). பரிசுத்த ஆவியானவர் தானியேலுக்குள் வாசமாயிருந்தபடியால் அவன் யோசனையும் புத்தியுமாய் பேசினான் (தானி.2:14); பிரதானிகளின் தலைவனிடம் இரக்கம் கிடைக்கும்படி செய்தார் (தானி.1:9); சொப்ப னங்களை வியர்த்தி பண்ணுகிறதும், புதை பொருள் களை வெளிப்படுத்து கிறதும்; கருகலானவைகளை தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும் விசேஷித்த ஆவியும் அவனில் காணப்பட்டது (தானி.5:12). தானியேலுக்குள் விசேஷித்த ஆவி காணப்பட்ட படியால் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான் (தானி.6:3). இந்த நான்கு வாலிபர்களின் உள்ளத்திலும் உலக ஆவி கிரியை செய்யவில்லை. அவர்கள் உள்ளம் தேவ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. வெள்ளம்போல் சத்துரு வரும்போது ஆவியானவர் விரைந்து கொடியேற்றுகிறார்.
தேவன் பெசலெயேலை ஆசரிப்புக் கூடார வேலையை யூகித்துச் செய்ய ஞானமும் அறிவும் உள்ள ஆவியினால் நிரப்பினார் (யாத்.31:5). இரத்த சாட்சிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து காணப்பட்டான் (அப்.6:5).
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழும்போது தேவ ஆசீர்வாதங்கள் நம்மை வந்தடைகிறது.
4) நீதிக்கேடு செய்யாத வாழ்க்கை (தானி.6:22)
தானியேல் எல்லாக் காரியத்திலும் உண்மையுள்ளவ னாயிருந்தான் (தானி.6:4). ராஜாவுக்கு விரோதமாகவோ, அரசாங்கத்துக்கு விரோதமாகவோ நீதிக்கேடு செய்ய வில்லை. அரசாங்க சட்டத்தை சில வேளைகளில் எதிர்க்க வேண்டிய சூழ் நிலைகள் வரும். நாம் தேவனுக்காக ஜீவிக்க வேண்டும். எகிப்திய மருத்துவச்சிகள் பார்வோனின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எபிரேய ஆண்பிள்ளைகளைக் கொல்லவில்லை. அதனால் தேவன் அவர்கள் குடும்பங் களைத் தழைக்கும்படி செய்தார். தானியேல் அரசாங்க சட்டத்திற்கு விரோதமாக ஜெபம் பண்ணினான். சிலையை வணங்க மறுத்தான். தேவனுக்காக ஜீவித்தான். அதனால் தேவாசீர்வாதம் பெற்றான்.
5) சகோதரர்களின் வாழ்வைத் தேடிய வாழ்க்கை
தானியேல் அரசனை வேண்டிக்கொண்டதன் பேரில் சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ பாபிலோன் மாகாண காரியங்களை விசாரிக்கும்படி நியமிக்கப்பட்டனர் (தானி.2:49). தானியேல் தன் சுய மகிமையைத் தேடவில்லை. மொர்தெகாய் தன் சொந்த ஜனங்களுடைய நன்மையை நாடி தன் குலத்தாருக்கெல்லாம் சமாதா னமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான் (எஸ்தர் 10:3). யோசேப்பு தன் சகோதரர்களின் வாழ்வைத் தேடி பஞ்சகாலத்தில் அவர்களுக்கு உதவியாயிருந்தான். சகோதரர்களின் வாழ்வைத் தேடும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட முடியும்.
நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட உலகத்தால் கறைபடாதிருக்க வேண்டும்; ஜெப ஜீவியத்தின் மூலம் தேவனோடு தொடர்புகொள்ள வேண்டும்; பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருக்க வேண்டும்; தேவனை முழுமையாக விசுவாசிக்க வேண்டும், சகோதரர்களின் நன்மையை நாட வேண்டும். அப்பொழுதுதான் நாம் உன்னத ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கப்பட முடியும்.