தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உபயோகிக்கிறார். அதற்கு சான்றாக கார்னிஷ் பட்டணத்தில் சுரங்கப் பணிபுரிந்த பில்லிபிரே ஒருவர். இங்கிலாந்தின் ஒரு முனை துவங்கி மறுமுனை மட்டும் அவரை அறியாதவர் ஒருவருமில்லை. ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தை நிரப்பி வழிந்தோடியதால், அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்தால் நடனமாடுவார். ஆத்துமாக்கள் மேல் அதிக தாகம் கொண்டிருந்தார். அவருடைய பரிசுத்த ஜீவியத்தால், விக்டோரியா இராணி அம்மையாரும், ஸ்பர்ஜன் போன்ற சிறந்த தலைவர்களும் கவரப்பட்டனர்.
பில்லி, கார்ள்வாலுக்கு அருகில் உள்ள துருரோ என்ற குக்கிராமத்தில் 1764ஆம் ஆண்டு பிறந்தார். பில்லியின் தந்தை சிறுவயதிலேயே மரித்துப் போனார். ஆகையால் பில்லி தமது 17ஆம் வயது வரை அவருடைய பாட்டனாருடன் ஜீவித்தார். பின்னர் துன்மார்க்கனாக ஜீவித்தார். அவர் ஒரு சுரங்கத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒருமுறை அவர் சுரங்கத்தை விட்டு வெளியேறினவுடன் சுரங்கத்தின் ஒரு பக்கம் சரிந்து விழுந்து அநேகர் மாண்டனர். இவரோ தப்பிக்கொண்டார். ஒருமுறை குடித்துவிட்டு குதிரை சவாரி செய்ய முற்பட்டபோது அது அவரைக் கீழே தள்ளி மரண அபாயத்திற்குள்ளாக்கிற்று. இவ்விதம் தேவன் பல மரண அபாயங்களிலிருந்து தப்புவித்தார். பனியன் என்ற பக்தன் இயற்றிய “பரலோக – நரக தரிசனங்கள்” என்ற நூலைக் கற்று, பாவ உணர்வு அடைந்து மனந்திரும்பினார்.
பில்லி இரட்சிக்கப்பட்டபின், முழு மூச்சுடன் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டார். போர்ன் என்ற பக்தன் “இராஜகுமாரன்” என்ற நூலில், “பில்லி கொண்டிருந்த ஆழமான பக்தி, எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவ தயவு தேவனால் உபயோகப்படுத்துவதின் ரகசியம், இவைகளைக் குறித்து சொல்லாமலே இருக்க முடியாது” என்று கூறுகிறார். தேவன் விரும்பும் மிகுந்த கனியை கொண்டிருக்க வேண்டுமானால், வேரானது மிகவும் ஆழத்திற்குச் செல்ல வேண்டும். முற்றிலுமாக பில்லி தமது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலே அதை ருசித்து விட்டார்.
பரிபூரணமாக சுத்திகரிக்கப்படுதலைப் பற்றி கேள்விப்பட்ட அவர் முழங்கால் படியிட்டு ஆண்டவரை நோக்கி, இந்த அனுபவத்திற்காக கெஞ்சினார். ஆண்டவர் அவரை நோக்கி, “நான் உன்னைப் பரிபூரணமாகச் சுத்திகரித்தேன்” என்று பதிலுரைத்தார். அதன் பின்பு சொல்லி முடியாத சந்தோஷத்தை அடைந்து எப்பொழுதும் தேவனை துதித்துக்கொண்டே இருப்பார். தனது வெற்றிகரமான கிறிஸ்தவ அனுபவத்தால் தேன்கூடு தேனீக்களைக் கவர்ச்சிப்பது போல அநேகரைக் கவர்ந்து கொண்டார். ஆகையால் சென்ற இடங்களிலெல்லாம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். எப்பொழுதும் சந்தோஷத்தினால் நிரம்பி நடனமாடிக் கொண்டேயிருப்பார். எப்பொழுதும் இடைவிடாமல் ஜெபிக்கும் பழக்கத்தை உடையவராகவும், எப்பொழுதும் துதிப்பவராகவும் காணப்பட்டார். தான் நடந்துசெல்லும் போது ஒரு காலைத் தூக்கினவுடன் “ஆண்டவருக்கு மகிமை” என்றும் அடுத்த காலைத் தூக்கும்போது “ஆமென்” என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்கிறார். தன் மனைவி மரித்ததும், பில்லி தமது அறையை விட்டு வந்து “என் அருமை ஜோயி, பிரகாசிக்கிறவர்களுடன் இருக்கும்படி சென்றிருக்கிறாள். அவள் தேவதூதர்களுடன் இருக்கிறாள். ஆண்டவருக்கு மகிமை! மகிமை!! மகிமை!!! என்று கதறினார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும், அவற்றைக் குறித்துக் கிறிஸ்தவர்கள் களிகூர வேண்டுமென்றும் கூறுவார், தன்னை ஒரு பீப்பாவில் போட்டு அடைத்து வைத்தாலும் அங்குள்ள துவாரத்தின் வழியாகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவதாகச் சொல்லுவார்.
சிறந்த பக்தர்களைப் போல், பில்லி வெகு நேரம் ஜெபத்தில் செலவிடுவார். எங்கு சென்றாலும் அவர் ஆண்டவரை நோக்கி, தன்னைச் சாத்தான் வழியில் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளும்படி ஜெபிப்பார். ஒருமுறை சாத்தான் அவரைச் சோதித்த போது, அவர் சாத்தானை நோக்கி, “நீ எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாய், கடந்த 28 ஆண்டுகளாக நான் உன்னோடு போராடியிருக்கிறேன். இதுவரை நான் உன்னைத் தோற்கடித்திருக்கிறேன் இனிமேலும் தோற்கடிப்பேன்” என்றார்.
பில்லி அதிக நேரம் ஜெபிப்பது மட்டுமல்லாது, ஆண்டவர் மீது அதிக விசுவாசம் கொண்டிருந்தார். எனவே ஜெபங்களுக்கு ஆச்சரியமான முறைகளில் பதில்கள் கிடைத்தன.
மீனவர் குடியிருக்கும் ஓர் இடத்தில் ஓர் ஆலயம் கட்டுவதற்காகப் பணம் சேகரித்தார். அம்மக்கள் மிகவும் ஏழைகளானதால் அதிகப் பணம் கொடுக்க முடியவில்லை. பில்லி, உடனே ஜெபிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அந்த மக்கள் ஏராளமான மீன்களைப் பிடிக்க தேவன் கிருபை செய்தார். அவருடைய பணத் தேவையும் அவர்களால் சந்திக்கப்பட்டது.
மக்களின் இரட்சிப்புக்காக பில்லி மிகக் கருத்துடன் ஜெபம் செய்வார். அவருடைய முக்கிய வேலை ஆலய பீடத்திற்குப் புறம்பே தான் செய்யப்பட்டது. தன்னுடன் சுரங்கவேலை செய்யும் ஊழியர்களுக்காக அவர் ஜெபிப்பார். ஒவ்வொரு நாள் காலையிலும் வேலை ஆரம்பிக்கு முன் அவர், “ஆண்டவரே, இன்று சுரங்கத்தில் யாரும் மரிக்க வேண்டாம். இவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை. நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன், நான் மரித்தால் உடனே மோட்சம் செல்வேன்” என்று ஜெபிப்பார்.
பில்லி எப்பொழுதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார். ஒரு குன்றின்மேல் நடந்து செல்லும்போது அந்தப் பகுதியில் வாழும் எல்லாரையும் இரட்சிப்பதாக தேவன் கூறினார். அதன்படி அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆண்டவரிடம் வந்தனர். ஒரு தேவாலயமும் கட்டப்பட்டது.
பில்லி மரித்துப் போவார் என்று டாக்டர் கூறிவிட்டார். ஆனால் அவரோ சற்றும் பதட்டமின்றி டாக்டரிடம், “ஆண்டவருக்கு ஸ்தோத்திரம், நான் சீக்கிரம் பரலோகத்திலிருப்பேன். மரணத்தைக் குறித்து எனக்குப் பயமில்லை. என்னுடைய இரட்சகர் மரணத்தை ஜெயித்திருக்கிறார். நான் நரகத்தின் பாதாளத்திற்குச் சென்றாலும் என்னுடைய ஆண்டவராகிய இயேசுவை ஸ்தோத்தரித்துப் பாடுவேன், என்னுடைய சத்தத்தினால் நரகமே அதிரும். அப்பொழுது சாத்தான் மிகவும் வேதனையடைந்து பில்லி உனக்கு இங்கு இடமில்லை. நீ சீக்கிரம் பரலோகம் போய்விடு என்பான்” என்றார். பில்லி 1868ஆம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ஸ்தோத்திரம் என்பதே அவருடைய இறுதி வார்த்தை!