விசுவாசியே! கர்த்தருடைய வார்த்தையை சந்தேகப்படாமல் விசுவாசித்தால் ஜெயம் பெறுவாய்

Written by Pr Thomas Walker

August 21, 2009

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைய சபைகளில் காணப்படுவது சந்தேகத்தின் ஆவி. வசனத்துக்கு அப்படியே மனப்பூர்வமாகக் கீழ்ப்படியாமல், வசனத்தை தங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி கூட்டியோ, குறைத்தோ செயல்படுவதால் தேவபிள்ளைகள் பெலன் இழந்து ஜெயம் பெறமுடியாமல் சாத்தானின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். விசுவாசியே! இன்றைக்கு உனக்குத் தேவை “கர்த்தருடைய வார்த்தையை மனப்பூர்வமாய் முழுமையாக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியக் கூடிய ஒரு பணிந்த ஆவியே”. “என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் ஆண்டவர் கூறுகிறார். தேவனுடைய வார்த்தையையும், தேவனையும் எல்லாவற்றிற்கும் சார்ந்திருப்பதுதான் விசுவாசம். ரோமர் 4:20,21 வசனங்களில் ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து பார்க்கிறோம். “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” ஆபிரகாம் தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்தில் பலவீனமாயிருக்கவில்லை.


விசுவாசியே தாக்கும் சாத்தானின் தந்திரங்களில் சந்தேகமும் ஒன்று. சாத்தான் தேவனின் வார்த்தையை சந்தேகப்பட வைப்பான். புரட்டுவான். பின்னர் நாம் அடையவேண்டிய ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல் தோல்வியையே சந்திக்க நேரிடும். நாம் வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க வேத வார்த்தையில் ஆழமான விசுவாசம் வைக்க வேண்டும். We should be deep routed in His words. ஏதேன் தோட்டத்தில் ஆதி.3:4 வசனத்தில், “…சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;” என்று மாற்றிப் பேசியது. “சாவீர்கள்” என்பதை சாகவே சாவதில்லை என்று புரட்டியது. சாத்தான் தனக்கு நம் மீது அதிக அக்கறை இருப்பதாகக் காட்டுகிறான். கர்த்தர் நம் விஷயத்தில் முயற்சி எடுக்காதது போலப் படம் காட்டி ஏமாற்றுவான். வேதத்தில் தேவனுடைய வார்த்தையை நம்பி விசுவாசித்து காத்திருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களையும், விசுவாசியாமல் சந்தேகப்பட்டு துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்தவர்களையும் காணலாம்.

முதலாவதாக
யோசேப்பு கர்த்தர் தனக்கு கொடுத்த தரிசனங்களையும் வாக்குத்தத்தங்களையும் நம்பி காத்திருந்தான். சங்.105:19 வசனத்தில், “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது” ‘கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும் வரை காத்திருந்தான். அவன் கால்களை விலங்கு போட்டு ஒடுக்கினார்கள். அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது, காத்திருந்து உயர்த்தப்பட்டான். ஆனால் அவன் வாழ்க்கையில் முதலில் நடந்தது எதிர்மறையாயிருந்தது. கானானை விட்டு எகிப்துக்குப் போனான். பின்னர் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்குப் போனான். கர்த்தர் வார்த்தையை விசுவாசித்ததால் ஜெயம் பெற்றான்’. எபி.11:22 வசனத்தில், “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்”. யோசேப்பு இஸ்ரவேலர் கண்டிப்பாக கானானுக்குப் போவார்கள் என்று கர்த்தர் ஆபிரகாமோடு சொன்னதை விசுவாசித்து தன் எலும்புகளை எகிப்திலிருந்து அவர்கள் போகும்போது கூடவே எடுத்துச்செல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்தான்.

இரண்டாவதாக
யோபுவின் வாழ்க்கையிலும் தேவனை விசுவாசித்து வெற்றி பெற்றான். யோபு 19:25,26 வசனங்களில், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” என்றான். தன் சரீரம் உருக்குலைந்தும் விசுவாசித்தான். தேவன் அவன் சிறையிருப்பை மாற்றினார். அவன் இழந்துபோன எல்லாவற்றையும் இரண்டத்தனையாகக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாமும் கஷ்ட நேரங்களிலும், துன்ப வேளைகளிலும் தேவனை மகிமைப்படுத்தினால் சாட்சிக் கூறினால், தேவன் நம் நஷ்டங்களையும், தோல்விகளையும் ஜெயமாக மாற்றுவார்.

மூன்றாவதாக
மரியாள் தேவ தூதனால் தனக்குச் சொல்லப்பட்ட காரியங்களை தன் மனதிலேயே வைத்துக்கொண்டு விசுவாசித்தாள். “மரியாளே! நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் என்றதும், தேவ தூதனிடம் இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்று தன்னை அந்த வார்த்தைக்கு ஆயத்தப்படுத்தி கேட்கிறாள். பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்றான். விசுவாசித்து பாக்கியவதியானாள். கர்த்தரால் சொல்லப்பட்டபடியே இயேசு பாலகனைப் பெற்றெடுத்தாள்.

நான்காவதாக
வேதத்திலிருந்து சந்தேகப்பட்டு தன் வாழ்க்கையில் நஷ்டத்தை அனுபவித்தவர்களைக் காணலாம்.
சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசி சொன்ன கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை. எரேமியா சிதேக்கியா ராஜாவிடம் எரே.37:17 வசனத்தில், “…கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க்கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்” நிறைய கள்ளத் தீர்க்கதரிசிகளும் அக்காலத்தில் இருந்தனர். கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடாமல் பிரபுக்கள் பேசியதைக் கேட்டான். அதினால் எரே.39:7 வசனத்தில், “சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்” சிதேக்கியாவின் கண்கள் குருடாக்கப்பட்டது.

ஐந்தாவதாக
இஸ்ரவேலர் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காமல் சந்தேகப்பட்டனர்.
தேவனின் நோக்கம் அவர்களைக் கானான் தேசத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது. ஆனால் முறுமுறுத்து, சந்தேகப்பட்டு, பரீட்சை பார்த்து அவர்கள் கானானைச் சுதந்தரிக்க முடியாமல் போனார்கள். யாத்.17:3 வசனத்தில், “ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்” மேலும் யாத்.15:24 வசனத்தில், “அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்”. மாராவில் வந்தபோது தண்ணீர் கசப்பாக இருந்ததால் மோசேயிடம் முறுமுறுத்தார்கள். எனவே இஸ்ரவேலர் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை. ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

ஆறாவதாக
பேதுருவிடம் முதலில் அவிசுவாசமும் சந்தேகமும் வந்தது. பின்னர் பரிசுத்தாவியால் பலப்பட்ட போது அவருடைய ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டது. மத்.14:31 வசனத்தில், “…இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்”. பேதுரு கடலில் தான் அமிழ்ந்துபோகிறதைக் கண்டு அவ்வாறு கேட்டார். யாக்.1:6 வசனத்தில், “ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” சந்தேகப்படுகிற மனுஷன் நிலையற்றவனாக இருக்கிறான். பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவியைப் பெற்றபின் ஊழியத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர். மத்.21:21,22 வசனங்களில், “இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்யலாம்” என்கிறார். மேலும் “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” என்றார். லூக்.12:29 வசனத்தில், “…என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்” நாம் தேவ அன்பையும், தேவனுடைய வல்லமையையும் சந்தேகிக்கக் கூடாது. நாளைக்காக கவலைப்பட்டு ஆண்டவரை சந்தேகிக்க கூடாது.


ஒரு தீவில் வாழும் மக்கள் மழைத் தண்ணீரைத்தான் குடித்து வந்தார்கள். தேவனுடைய மனிதன் ஒரு மிஷனரி சொன்னார். நீங்கள் கிணறுகள் தோண்டலாம், தண்ணீர் கிடைக்கும் என்றார். மழைத் தண்ணீர்தான் தங்கள் தெய்வம் – எனவே கிணறுகள் தோண்ட மக்கள் எதிர்த்தனர். சிலர் மட்டும் விசுவாசித்து கிணறுகள் தோண்டி புதிய நீருற்றுகளைக் கண்டனர்.

ஏழாவதாக
தாவீது தேவ வழி நடத்துதலை சந்தேகிக்கக் கூடாது. நாட்டப்பட்ட தோட்டத்தில், தேவன் சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். 1சாமு.27:1,2 “பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்; …நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், தப்பித்துக்கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். …ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்”.
தாவீதைக் குறித்து தேவனிடம் திட்டம் யூதாவின் எல்லைகளில் குடியிருக்க வேண்டும். ஆனால் சவுலின் பயமுறுத்தலினாலும், பிராணனைப் பற்றிய பயத்தாலும் சாத்தானின் ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தான். சரியான இடத்தில் நீ இருக்கும்போது தேவையில்லாத பயத்தையும், எதிரிகளின் கொடுமையையும் சாத்தான் காட்டி, நீ இருக்கும் இடம் சரியில்லை எனக் கூறி வேறு இடத்திற்குக் கொண்டுசென்று தோல்வியிலும், கண்ணீரிலும் தள்ளிவிடுகிறான். தாவீது எல்லாவற்றையும் இழக்கிறான். பைத்தியம் பிடித்தவனைப் போல நடிக்கிறான்.
நகோமி கூட அப்பத்தின் வீடாகிய பெத்லகேமை விட்டு மோவாபிய தேசத்திற்குச் சென்று வேதனைகளையும் அகால மரணங்களையும் சந்தித்தாள். தேவன் வைத்த இடத்தை விட்டோ, நாட்டிய தோட்டத்தை விட்டோ தன் இச்சையாகப் போனால் நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். அப்பத்தின் வீடான தேவ சபையை விட்டுப் போகாதே. ரூத் 1:21 வசனத்தில் நகோமியே இவ்வாறு கூறுகிறாள், “நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்”. நாம் தேவச் சித்தத்தின்படி வாழ்ந்தால் மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெறலாம்.


இதை வாசிக்கும் அன்பான நேயரே! தேவனுடைய வார்த்தையையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்ற வல்லவர் என்று மனப்பூர்வமாய் விசுவாசித்து கீழ்ப்படிந்தால் யோசேப்பைப் போல உயர்த்தப்படலாம். சாராளிடம் ஆதி.18:13 வசனத்தில், “சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?” என்று கர்த்தர் ஆபிரகாமிடம் கேட்டார். சந்தேகத்தை நீக்கி ஒரு உற்பவ காலத் திட்டத்தில் சாராளுக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார். சந்தேகப்படுகிறவன் தேவனிடம் எதையும் பெற முடியாது. நாமும் தேவனுடைய சபையில் துதிக்கும் யூதா கோத்திரமாகவும், பணிவிடை செய்யும் லேவி கோத்திரமாகவும், தேவனுடைய பீடத்தண்டையில் தங்கியிருக்கும் குருவிகள் போல நிலைத்து அவர் ஆலயத்தில் தங்கியிருந்து மேன்மையான பரம தேசத்தை அடைவோமாக! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This