கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நாம் வளரவேண்டும் என்று ஆவியானவர் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். கிறிஸ்துவின் சாயலை அடையும்வரை நிறைவான வளர்ச்சிக்கு நேராக நடத்த தேவன் நம்மைப் புடமிட்டுப் பக்குவப் படுத்துகிறார். ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை இயேசு மலைப் பிரசங்கத்தில் கூறுகிறார் (மத்.5:1-10; லூக்.6:20-23) அதில் எட்டு முக்கியமான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
எட்டு முக்கிய குறிப்புகள்
1. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:3)
2. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:4)
3. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:5)
4. நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:6)
5. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:7)
6. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:8)
7. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:9)
8. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:10)
முதலாவதாக ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:3)
இது ஆவிக்குரிய தாழ்மையைக் குறிக்கிறது. தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம் (நீதி.22:4). தாழ்மைக்கு எதிர்பதமானது பெருமை. நான் தாழ்மையாயிருக்கிறேன் என்று கூறி பெருமைப்படுவோரும் உண்டு. ‘மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்’ என்று நீதி.29:23ல் பார்க்கிறோம். ‘நீ உன்னைத் தாழ்த்துவாயானால் மற்றவர்கள் உன்மேல் ஏறி உட்கார்ந்து விடுவார்கள்’ என்று பிசாசு கற்பிப்பான். நொறுங்கின உள்ளம் தாழ்மையுள்ளவர்களிடம் காணப்படும். (ஏசாயா 57:15) நொறுங்கின உள்ளத்திலேயே தேவன் வாசம் பண்ணுவார். பெருமையும், அகந்தையுமான உள்ளத்தில் தேவனால் வாசம் பண்ணவே முடியாது. பணிந்த ஆவியே தேவன் தங்குமிடம். பணிவு என்பது கோழையின் அனுபவமல்ல. குழந்தையைப் போல் தங்களைத் தாழ்த்துபவர்களே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவர்களாயிருப்பார்கள் (மத்.18:4). தாழ்மையுள்ளவர்களுக்கே தேவன் கிருபையளிக்கிறார். பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.
இரண்டாவதாக துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:4)
இவர்கள் தங்கள் உணர்வின் ஆழத்தைத் தொட ஒப்புக்கொடுக்கிறவர்கள்; மற்றவர்கள் படும் கஷ்டங்களில் தங்களை இணைத்துக்கொள்பவர்கள். ஆத்தும வருத்தம் உள்ளவர்கள். ஆத்துமாக்களுக்காக அழுபவர்கள். பரிதாப உணர்வுள்ளவர்கள். இவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் அல்ல. குற்றத்தை உணர்ந்து துயரப்படுகிறவர்கள். மற்றவர்களின் துன்பங்களைக் காணும் கண்களுள்ளவர்கள். தாயுள்ளம் உள்ளவர்கள். மற்றவர்களுக்காக பரிதபிக்கிறவர்கள். இவர்களை தேவன் ஆறுதலடையச் செய்கிறார்.
மூன்றாவதாக சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:5)
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக என்று இயேசு நமக்குப் போதிக்கிறார். ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்று சாத்தான் நமக்குப் போதிக்கிறான். அது சரியல்ல. நாம் பாதிக்கப்படும்போது கோபம் கொள்ளக்கூடாது. நமது எல்லா உரிமைகளையும் ஆண்டவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும். ஒரு அதிகாரி வேலையினிமித்தம் கடிந்துக்கொள்வது, கோபிப்பது பாவமல்ல. சாந்தகுண முள்ள நம் தேவன் நாமும் சாந்தகுணத்தை நாடவும் தரித்துக்கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறார். அவர் பாறையைப் போல் தன்னை மாற்றிக்கொண்டதால் தான் சாந்தமாக இருந்தார். அவர்மேல் துப்பும்போதும் அடிக்கும்போதும் பாறையைப்போல் உணர்வில்லாத நிலையில் இருந்தார். தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாத ஆட்டைப்போல் இருந்தார். பாறையில் அடித்தவர்களுக்குத் தான் வலிக்குமே தவிர அடிபட்ட பாறைக்கல்ல. இயேசுகிறிஸ்து தமது மகிமையை அதிகாரத்தைத் துறந்து எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்தார். சாந்தகுணமுள்ளவர்களே பூமியை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.
நான்காவதாக நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:6)
இவர்கள் தேவனுடைய காரியங்களில் வாஞ்சையுள்ளவர்கள். தேவனுடைய காரியங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும். ஒழுங்கான கிறிஸ்தவ ஜீவியம் இருந்தால் மட்டுமே நீதியின்மேல் பசிதாகம் உண்டாகும். தியாக வாழ்க்கையுள்ளவர்கள், தேவ அன்பைப் பகிர்ந்துகொள்பவர்கள், தேவனுக்கு சாட்சியாக வைராக்கியமாக ஜீவிப்பவர்கள், ஒழுங்காக ஜெபிப்பவர்களுக்கு மட்டுமே தேவன்மேல் வாஞ்சை உண்டாகும். தேவன்மேல் பசிதாகம் ஏற்பட மருந்து, ஒருமணி நேரம் ஜெபித்து வேதம் வாசிப்பது ஆகும். இவர்களே தேவனால் திருப்தியடைய முடியும்.
ஐந்தாவதாக இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:7)
எல்லாக் குற்றங்களையும் மன்னிப்பதும் எல்லாருக்கும் உதவி செய்ய விரும்புவதுமே இரக்கக் குணமாகும். மன்னிக்கிற சுபாவமுள்ளவர்களே இரக்கக் குணமுள்ளவர்கள். ஏழைகளுக்கு இரங்குவது இரக்கத்தின் ஒரு பகுதி ஆகும். சத்துருவையும் மன்னித்து அவனுக்கு உதவி செய்வது இரக்கத்தின் மறுபகுதியாகும். இன்று நம்மில் அநேகர் இரக்கத்தின் ஏதாவது ஒரு பகுதியை மட்டுமே பின்பற்றுகிறோம். இரண்டையும் கைக்கொள்ள தேவன் நம்மை எதிர்பார்க்கிறார். இரக்கமுள்ளவர்களே இரக்கம் பெற முடியும்.
ஆறாவதாக இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:8)
இருதயத்தில் சுத்தம் வேண்டும். நமது நோக்கம், ஆசை, இச்சைகளை தேவன் ஆள இடங்கொடுக்கும் போது சுத்த இருதயம் உண்டாகிறது. சுத்த இருதயம் இல்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது. தேவனுடைய உபதேசங்கள், சிலுவையில் கிறிஸ்து சிந்திய இரத்தம், அவரது ஆளுகை இவற்றால் நமக்கு சுத்திகரிப்பு உண்டாகிறது. நம்முடைய நோக்கம் தேவனை தரிசிக்க வேண்டுமென்றிருந்தால் நாம் இருதய சுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
ஏழாவதாக சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:9)
நம்முடைய தேவன் சமாதானக் காரணர். இன்று நாட்டிலும் வீட்டிலும் சமாதானம் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. தேவனை அண்டிக்கொள்ளும் போதே நமக்கு சமாதானம் உண்டாகிறது. தங்கள் பிழைகளை உணர்ந்து ஒப்புரவாவதே சமாதானம் ஆகும். தேவனுடைய மனிதர்களுடன் நாம் சமாதானமாயிருக்க வேண்டும். நமது பேச்சினாலும் செய்கைகளினாலும் சமாதானக் குலைச்சலை உண்டுபண்ணக் கூடாது. குத்தலான பேச்சுகளால் பிறரைக் குற்றப்படுத்துவதும் சமாதானத்துக்கு எதிர்மறையானது. நீங்கள் மற்றவர்களை சமாதானப்படுத்தும்போது உங்களுக்கு சமாதானம் உண்டாகிறது.
எட்டாவதாக நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் (மத்.5:10)
கிறிஸ்துவுக்காக பாடு அநுபவிக்கிறவர்கள் உலகத்தோடு, உலக வேஷத்தோடு ஒத்துப் போகாதவர்கள். உபத்திரவத்தின் பாதையே வெற்றி வாழ்க்கைக்கு நேராக நம்மை நடத்துகிறது. தேவன் சென்றதும் பரிசுத்தவான்கள் சென்றதும் இந்தப் பாதையே. இதுவே பரலோகம் செல்ல நம்மை வழிநடத்தும் பாதை. நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படும்போது பாக்கியவான்களா யிருக்கிறோம். தேவனும் நம்மில் மகிமைப்படுகிறார் (1பேதுரு 4:14). நீதியினிமித்தம் நாம் துன்பப்படுவது பரலோக ராஜ்ஜியத்திற்கு மிகுந்த பலனைக் கொண்டுவருகிறது. கோதுமை மணியாக நிலத்தில் விதைக்கப்பட்ட அநேக பரிசுத்தவான்களும் மிஷனெரிகளும் மிகுந்த பலனை நம்முடைய தேசத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியடைந்து அந்த பரலோக சந்தோஷத்தை அனுபவிக்க ஆவியில் எளிமை, சாந்தகுணம், இரக்கமுள்ள சுபாவம், இருதயத்தில் சுத்தம், நீதியின் மேல் பசிதாகம் போன்ற மேன்மையான குணங்களை நாடுவோமாக! சமாதானம் பண்ணுகிறவர்களாய் துயரப்படுகிறவர்களை ஆறுதல் படுத்துகிறவர்களாய் மாறுவோமாக! நீதியினிமித்தம் துன்பத்தை அனுபவித்து பரலோக ராஜ்ஜியத்திற்கு மிகுந்த பலனைக் கொண்டு வருவோமாக!!