“உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத்.24:42)
இயேசு எப்பொழுது வருவார் என அறியோம். ஆனால், அவர் சொல்லிப் போன அடையாளங்களெல்லாம், நிறைவேறி வருகிறபடியால் சீக்கிரம் வருகிறார் என்று அறிந்திருக்கிறோம். அப்படியானால், நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். எனவே தான், இயேசு கிறிஸ்து விழித்திருங்கள் எனக் கூறினார். பலர் இயேசு கிறிஸ்து இப்பொழுது வரமாட்டார். இன்னும் காலம் செல்லும் என்று எண்ணி, விழித்திராமல் அஜாக்கிரதையாயிருக்கிறார்கள். ஆனால் வேதம் அப்படிச் சொல்ல வில்லை. இன்ன நாழிகையிலே இயேசு வருவார் என்று நாம் அறியாதபடியால், எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். ஒரு வகையில் சொல்லப்போனால், எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாயிருப்பது நல்லது. நாம் மட்டுமல்ல, நமது வீட்டார், சபை அனைத்தும் ஆயத்தமாயிருப்பது நல்லது.
நீதிக்கென்று விழித்திருங்கள்
“நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்த வர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்” (1கொரி.15:34)
விழித்திருப்பது என்பது தூக்கமில்லாமல் விழித்திருப்பது மட்டுமல்ல; நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழித்திருப்பதைக் குறிக்கிறது. நாம் பாவம் செய்யாமல் விழித்திருக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள் நீதியான வாழ்க்கை வாழ்ந்து விழித்திருக்க வேண்டும். பொல்லாத உலகத்தில் நாம் வாழ்கிறோம். நமது மாம்சமும், மனசும் தேவனுக்கேற்றபடி நிலைத்திராமல், உலகத்தின் வழியில் செல்ல முற்படுகிறது. இப்படிப்பட்ட நேரங்களில் நாம் விழித்திருக்க வேண்டும். நமது மாமிசத்தையும், மனதையும் கீழ்ப்படுத்த வேண்டும். நீதியின் பாதையில் நடக்க ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். பரிசுத்தமாய் வாழ வேண்டும், நீதியாய் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நாம் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாகும். நம்முடைய மனது தேவன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். பாவத்தின் மேல் நோக்கமாயிருக்கக் கூடாது. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும். சஞ்சலப்படுகிற மனதை அகற்றி தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
யோசேப்பு நீதிமானாய் இருந்தான். பாவத்தை விட்டு விலகி ஓட வேண்டும் என்ற தெளிந்த புத்தியுள்ளவனாய் இருந்தான். நீதிக்கேற்க விழித்திருந்தான். நாமும் அப்படிப்பட்ட தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். கர்த்தருடைய வசனத்தினால் நம்முடைய மனதின் அரையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.
“ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர் களாயிருங்கள்” (1பேதுரு 1:13)
நம்முடைய மனதும் வெறுமையாய் இராமல், கர்த்தருடைய வசனத்தினால் காக்கப்பட வேண்டும். உங்கள் மனதை, சிந்தையைக் காக்கக் கூடிய வசனத்தினால் நிரம்பி, ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவ சமாதானத்தினால் நிறைந்து சிந்தையைக் காக்க வேண்டும். நீதிக்கென்று சிந்திக்கத்தக்கதாக உங்கள் மனதைக் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனது கர்த்தருடைய வசனத்தினால் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்பொழுது நீதிக்கேற்க விழித்திருக்க முடியும். இயேசு சீக்கிரம் வருகிறார்; எனவே உங்கள் மனது விழித்திருந்து நீதியினால் ஸ்திரப்படட்டும்.
இயேசு உங்களை நேசிக்கிறார், ஆகவே சிட்சிக்கிறார்
“நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கி றேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு” (வெளி.3:19)
இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே தான் சிட்சிக்கிறார். சிட்சையில்லாமல், பரிசுத்த வாழ்க்கை வாழ முடியாது. சிட்சையில்லாமல் கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்பட முடியாது. எனவே சிட்சையை ஏற்றுக்கொள்வோம். இயேசு தகப்பனைப் போல நம்மிடம் அன்பு கூறுகிறார். எனவே அவ்வப்போது நம்மை சிட்சித்து பரிசுத்தப் பாதையில் நடத்துகிறார். நாமும் அவரது சிட்சையை ஏற்றுக்கொண்டு வைராக் கியமாய் அன்புகூர்ந்து மனந்திரும்ப வேண்டும். நாம் தேவனுடைய பிள்ளைகள். ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள். கர்த்தர் நமது பரம தகப்பன். அவருக்கு நம்மைக் கண்டித்து நடத்துவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அது அவருடைய அன்பைக் காட்டுகிறது. நாம் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. மாறாக மனந்திரும்பி கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்பட விரும்புகிறார். ஆகவே நம்மைக் கடிந்து கொள்கிறார். சிட்சை கிடைக்காவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் இல்லை என வேதம் கூறுகிறது. தேவன் உங்களை சிட்சிப்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள். தேவன்மேல் அன்பு வைத்து மனந்திரும்புங்கள். கர்த்தர் நம்மை அவருடைய பிரயோஜனத்திற்காகவே சிட்சிக்கிறார்.
“அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபி.12:10)
இயேசு நம்முடைய பிரயோஜனத்திற்காகவே சிட்சிக்கிறார். ஆகவே நாம் அதை அசட்டை பண்ணாமல், மனந்திரும்பி ஏற்றுக்கொள்வோம். வெறும் ஆறுதலான வசனங்களை மட்டும் கேட்டு, உங்களை பரிசுத்தப்படுத்த மறந்துபோக வேண்டாம். ஆறுதலும் வேண்டும், சிட்சையும் வேண்டும். இயேசு நம்மை சிட்சித்து நம்மை பரிசுத்தப்படுத்தி, வருகையில் பங்கடைய அழைக்கிறார். நாம் ஆயத்தப்படுவோம்.