நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடையத் தகப்பனார், தனது “ரயில்வே பணியை” ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்தார்கள். எங்கள் தகப்பனாரின் சபை மதுரைக்கு வெளியே ஆட்கள் அதிகமில்லாத கூடல்நகர் என்ற இடத்திலிருந்தது. எனவே அதிக விசுவாசிகள் எங்கள் சபையில் இல்லை.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சுந்தர் சிங், ராஜ்மனோகர் ஆகியோருக்கு உதவியாக கிராமங்களில் “ஞாயிறு பள்ளிகளில்” பாடல் கற்றுக்கொடுக்கும் பணியை ஆரம்பித்தேன். ஏழாம் வகுப்பு வந்தபோது, தனியாக அருகிலிருந்த “ஆனையூர்” என்ற கிராமத்தில் ஞாயிறு பள்ளி நடத்த தீர்மானித்துச் சென்றேன்.
முதன்முதலில் அந்தக் கிராமத்திற்கு நான் சென்றபோது, தனியாக சைக்கிளில், அரைக்கால் சட்டை அணிந்து சென்றிருந்தேன். சகேயுவைப் பற்றியக் கதை, படங்கள், பாடல்கள் எல்லாம் நேர்த்தியாய் ஆயத்தம் செய்திருந்தேன். நம்பிக்கையோடு சென்றேன்.
அந்த ஊர் எனக்கு முன்பின் சென்று அறியாத ஊர். தெரிந்தவர் எவரும் அங்கு இல்லை. எனவே நான் அங்கு சென்று, இந்த ஊரின் தலைவர் யார் என்று கேட்டேன். அவர்கள் ஒரு மனிதரை அறிமுகப்படுத்தினர். நான் அவரிடம் சென்று ஐயா நான் உங்கள் பிள்ளைகளுக்கு வாரம்தோறும் வந்து “இயேசுவைப் பற்றிய கதைகள், பாடல்கள் கற்றுக்கொடுக்கப் போகிறேன். அதினால் உங்கள் பிள்ளைகள் மிகுந்த ஒழுக்கம் உடையவர்களாய் மாறி விடுவார்கள்” என்றுக் கூறினேன்.
அவர் மிகவும் சந்தோஷமாக இவன் சிறுவனாக இருக்கிறானே என்று கூட நினையாமல் அப்படியானால் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றுக் கேட்டார். நான் அவரிடம், நான் ஞாயிறுதோறும் மதியம் 2:00 மணிக்கு வருவேன், நீங்கள் குறைந்த பட்சம் 50 பிள்ளைகளை ஆயத்தம் செய்து வைக்க வேண்டும், மைக் செட்டில் சினிமா பாடல்கள் போடக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.அந்நாட்களில் அந்தக் கிராமத்தில் கிறிஸ்தவர் எவரும் கிடையாது. எனவே அவர்களுக்கு எப்படிப்பட்ட இடத்தை “ஞாயிறு பள்ளிக்காக” ஆயத்தம் செய்ய வேண்டும் என்று தெரியாமல் அங்கிருந்த “இந்துக் கோவிலில்” ஒழுங்குசெய்து விட்டார்கள்.
12 வயதே நிரம்பிய நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கோவில் மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். என்னுடைய பின்புறம் விக்கிரகம் இருந்தது. ஜீவிக்கிறார்… இயேசு ஜீவிக்கிறார் எனப் பாடல்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
வாரங்கள் சென்றன… கூட்டம் அதிகரித்தது… 100 பிள்ளைகளுக்கு மேல் வர ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்துக் கிராம மக்கள் வந்து… எங்களுக்கும் இப்படிப்பட்ட வகுப்பு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்கள்.
3 மாதத்துக்குள், ஞாயிறு பள்ளிகள், 300க்கும் மேற்பட்ட சிறுவர்களை, வாரந்தோறும், வழிநடத்தும் கிருபையை தேவன் கொடுத்தார். ஜெபக்குமார், டோனல்ராஜ் போன்ற என்னுடையத் தோழர்கள் இந்தப் பணியில் சேர்ந்துகொண்டார்கள். எனது பெற்றோரும் உற்சாகப்படுத்தினார்கள்.
ஒவ்வொரு வாரமும் மதியம் 2:00 மணிக்கு ஆரம்பித்து 6:30 மணிக்குள் 5 ஞாயிறு பள்ளிகளை திட்டமிட்டு நடத்தும் பயிற்சிகளைப் பெற்றுவிட்டோம்.
கிராம மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, திருவிழாக்களை, ஞாயிறு பள்ளி முடித்த பின்பு நடத்தும் அளவிற்கு வந்துவிட்டார்கள். இந்த ஊழியம் நான் பத்தாம் வகுப்பு முடித்து சேலம் செல்லும்வரை நான்கு ஆண்டுகள் ஒரு வார இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது. வந்த அனைத்து சிறுவர்களும், பெரியவர்களும் வாரம் தவறாமல் இரட்சிப்பின் செய்தியைக் கேட்டு பாவ அறிக்கை ஜெபத்தை செய்து வந்தனர். எத்தனைபேர் இன்று விசுவாச ஜீவியத்தில் இருக்கிறார்கள் என்ற விபரத்தை பரலோகில் தான் காணமுடியும்… இன்று அந்தக் கிராமங்கள் “தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகளாக மாறி, அநேகத் திருச்சபைகள் கொண்ட இடமாக மாறிவிட்டது. 20 ஆண்டுகளில், கிராமங்கள் நகரமாக மாறிவிட்டது.”
“விக்கிரகம், சிறுவர்களாகிய எங்களைச் சேதப்படுத்தவும் இல்லை, ஊர் மக்கள் எவரும் எங்களிடம் சண்டையிடவும் இல்லை”. நாங்கள் சிறுவர்கள் என எவரும் அசட்டை பண்ணவும் இல்லை. இரட்சிப்பின் செய்தியைக் கேட்டபோது தரையில் முழங்கால் படியிட்டு, ஜெபிக்கத் தவறவும் இல்லை.
ஒருநாளும் எவருக்கும் மிட்டாய் கொடுத்து அழைக்கவும் இல்லை, பிள்ளைகளை வசீகரிக்கும் தோற்றம் எனக்கு இருந்ததும் இல்லை.
ஆனால்… அதிகாரம் கொடுத்து அனுப்பியவர் பெரியவர், அவருடைய சுவிசேஷம் சிறந்தது. எந்த மனுஷனையும் தேறினவனாக நிறுத்த வல்லமையுள்ளது.
கர்த்தருடைய நாமத்தில் போவோம். பார்வோனுக்கு முன்பாக பேசும் தைரியத்தை…… அவர் கொடுப்பார்.
“பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்…” (யோசுவா 1:9)