எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்

Written by Pr Thomas Walker

November 22, 2010

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,
இன்றைய சமுதாயத்தில் தேவைகளும் விருப்பங்களும் பெருகி வருகிறது. மனிதன் தான் காண்கிறவைகளையும், விரும்புகிறவைகளையும் அனுபவிக்க விரும்புகிறான். விளம்பரங்களும், வானொலி, டி.வி.விளம்பரங்கள், சுவரொட்டிகளும் மனிதனின் ஆசை இச்சைகளை தூண்டி விடுகின்றன. பண ஆசை, பொருளாசை, மண் ஆசை, பெண் ஆசை என்று பலவிதமான இச்சைகளை சாத்தான் மக்கள் மனதில் தூண்டிவிடுகிறான். நவ நாகரீக உடைகள், சினிமா காட்சிகள், பார்வைக்கு இன்பம் தரும் காட்சிகள், மனிதனை தேவனை விட்டுப் பிரிக்கின்றது. தேவன்மேல் அதிருப்தி, கோபம், முறுமுறுப்பு, அவிசுவாசத்தை ஏற்படுத்துகிறது. எனவே தேவனுடைய பிள்ளைகள் இச்சையினால் உலகத்துக்கு உண்டான கேட்டிற்கு தப்ப வேண்டும். ‘போதும்’ என்ற மனதுடன் கூடிய தேவபக்தியே தேவை. ‘மனரம்மியம்’ – தேவன் தந்த ஆசீர்வாதங்களில் திருப்தி தேவை. இஸ்ரவேல் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டது எதினால்? மனரம்மியமாயிருக்க கற்றுக்கொள்ளாததினால் தான். தேவ வழிநடத்துதல் தேவனுடைய தலைமைத்துவம், உணவு, உடை, தேவன் தந்த வீடு, குடும்பம் பிள்ளைகளில் திருப்தி தேவை.
பிலி.4:11 வசனத்தில், “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.” மனம் ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன் என்கிறார். பிலிப்பியர் 4:12 “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” என்று கூறுகிறார். தேவன் பல வழிகளில் கற்பிக்கிறார். ஆவியானவர் போதிக்கிறார்.


ஆபகூக் 3:17 வசனத்தில், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்…” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி ஆபகூக் கூறுகிறார். இஸ்ரவேலருக்கு 6 முக்கியமான வருமானம் வரும் காரியங்கள் உண்டு. ஆறு காரியங்களாலும் பலன் அற்றுப்போனாலும் நான் தேவனை நம்புவேன். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பேன் என்கிறார்.
1. அத்திமரம், 2. திராட்சசெடி, 3. ஒலிவமரம், 4. வயல்கள், 5. ஆட்டு மந்தை, 6. மாடுகள்
எந்த நிலையில் இருந்தாலும் கர்த்தருக்குள் மனரம்மியமாக இருப்பேன் என்று கூறுகிறார். கிறிஸ்தவன் எத்தனை விசேஷமானவன். எந்த நிலைமையையும் தாங்கும் இதயம் உள்ளவன்.
பக்தன் யோபுவின் வாழ்க்கையில்கூட எவ்வளவோ ஆஸ்தி, பிள்ளைகள் எல்லாம் போய்விட்ட சூழ்நிலையிலும் கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். தோல் அழுகி விட்டது. நாற்றம் எடுத்தது. அவன் தூரப் பார்வையுள்ளவனாக இருந்தான். அவன் நம்பிக்கை தேவன் மேல் இருந்தது.


இன்றைய நிலையில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் பணம், பொருள் மேல் மக்களுக்கு ஆசை வந்து அதின்மேல் சார்ந்துவிட்டதால் தேவனை விட்டு விலகிப்போய்க் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்த வில்லியம் கேரி இந்திய மொழிகளில் 40 மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர். அவரை அவமானப் படுத்த எண்ணி நீ செருப்பு உண்டாக்குபவன் தானே என்று ஒரு இந்து மனிதன் கூறியபோது அவர் மிகுந்த தாழ்மையுடன் மன்னிக்கவும் நான் பழைய செருப்புத் தைப்பவன் தான் என்றார்.


வாழ்ந்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தாழ்ந்திருக்கவும் தெரிய வேண்டும். எந்த நிலையிலும் மன ரம்மியமாக இருக்க தெரிந்திருக்க வேண்டும். பவுல் தன் வாழ்வில் இதை நிரூபித்தார். பவுல் போதிக்கப்பட்டார்.


பிலி.4:12 வசனத்தில், “…எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” திருப்தியினால் துதி உண்டாகிறது. நன்றி கூறி தேவனுக்குள் மனமகிழ்ச்சியாக இருக்க போதிக்கப்பட்டிருந்தார்.
பிலி.4:12 வசனத்தில், “…பட்டினியாயிருக்கவும், …குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” பட்டினியாக இருக்கும்போது, துதித்து மகிழ்ந்திருக்கிறார். தேவனால் போஷிக்க முடியும். ஆனாலும் தேவன் ஒரு பாதையில் நடத்தி கற்றுக்கொடுக்கிறார். பட்டினியாயிருக்கையில் முறுமுறுக்காமல், இது பரிபூரண வாழ்வு, இதற்குள் நடக்கும்போது, இது தேவன் நடத்தும் பாதை என்று அறிந்து சந்தோஷமாக இருந்தார்.


மற்றவர்கள் அற்பமாக எண்ணும்போதும் பேசும்போதும் நம் மனநிலையைக் காண்கிறார். பலரும் நிந்தித்து பேசும்போது, உனது பாவங்கள் நிமித்தம் தான் இது நடைபெறுகிறது என்று பேசும்போது தேவன் அறிவார். நாம் எப்படி இருக்கிறோம், மன ரம்மியம் உண்டா? அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும் அங்கே சிறப்பான ஆசீர்வாதம் மறைந்து இருக்கிறது. அதைக் கண்டுகொள்ள வேண்டும். நீரூற்று அங்கு உண்டு. கண்டுகொள்ள வேண்டும்.
தாவீது, நீதிமான் கைவிடப்பட்டதைக் காணவில்லை என்கிறார். அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டான். காக்கும் வல்ல தேவன் உண்டு. என்ன வந்தாலும் என் நேச மீட்பரை நம்புவேன்.

1) இஸ்ரவேலர் தேவன் கற்றுக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. நமது கண்கள் மற்றவர்கள் மேல் பதிக்கப்பட்டு, அவர்கள் செய்யும் அருவருப்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகளுக்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும்.
உபா.18:9-12 வசனங்களில், “தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்;…”
தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய பாடசாலையில் கற்றுக்கொண்டால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். சபையில் தேவ ஆவியானவர் போதிக்கும் போதனையில் நடக்க வேண்டும். சங்.106:35,36 வசனங்களில், “ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று; அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.”

2) மத்.6:25,34 வசனங்களில், “…என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்…. நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”
நாளைக்காக (எதிர்காலத்திற்காக) கவலைப்படுகிறார்கள். அதனால் திருப்தியற்றவர்களாக இருக்கிறார்கள். வெற்றி வாழ்வுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. துதிக்க முடியவில்லை.

3) 1கொரி.10:10 வசனத்தில், “அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்” முறுமுறுத்தார்கள், திருப்தியில்லை, துதியில்லை.
இஸ்ரவேல் ஜனங்களை தேவனால் தொடர்ந்து நடத்த முடியாததற்குக் காரணம் அவர்களது முறுமுறுப்பு, பின்னிட்டுப் பார்ப்பது, குறைவுகளை மட்டும் காண்பது, கவலைப்படுவது, தேவனால் அவர்களை நடத்த முடியவில்லை. தேவனை நம்பவில்லை. தேவன் அவர்கள் மனரம்மியமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.”

4) எபி.13:5 வசனத்தில், “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” இது தேவனுடைய வாக்குத்தத்தம். அவர் நம்முடன் இருக்க வேண்டுமானால் பண ஆசை இல்லாதவர்களாயிருக்க வேண்டும். மேலும் 1தீமோ.6:6 “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்கிறார் பவுல்.

5) எரே.10:2 வசனத்தில், “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்;” வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே…
மன ரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! பவுல் அப்போஸ்தலன் வாழ்ந்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எவ்விடத்திலும், எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேயே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்கிறார். போதும் என்ற மனதுடன் பொருளாசை, பண ஆசை இல்லாமல் வாழ்ந்தால் தேவன் நம்மைவிட்டு விலகவுமாட்டார், கைவிடவுமாட்டார். புறஜாதிகள் மார்க்கமாய் நடவாமல் தேவ சித்தம் செய்து, வசனத்தின்படி வாழ்வோம்! மனரம்மியமாய் இருப்போம்! தேவன் நம்முடன் கூட இருந்து ஆசீர்வதிப்பார். ஆமென்!





Author

You May Also Like…

Share This