“என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.” (2நாளா.6:6)
கர்த்தர் எருசலேமைத் தெரிந்துகொண்டார். எருசலேமின் மூலம் கர்த்தரின் நாமம் விளங்கும்படி அதைத் தெரிந்துகொண்டார். தேவனுடைய பிள்ளைகளாகிய நம் மூலமாய், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விளங்கச் செய்து, கர்த்தருக்கு மகிமையுண்டாகச் செய்கிறார். அதுபோல, பூமியிலே தமக்கென்று ஒரு இடத்தைத் தெரிந்துகொண்டார். பூமியிலே எருசலேமுக்கு சிறப்பு என்ன? அது எவ்விதத்தில் விஷேசமானது என்பதை சற்று தியானிப்போம்.
“வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்” (சங்.48:2)
எருசலேமில் உள்ள சீயோன் மகாராஜாவின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையின்போது, எருசலேமுக்கு கிழக்கே ஒலிவ மலையில் இறங்குவார். அதற்குப் பின்பு எருசலேமை தமது நகரமாகத் தெரிந்து கொள்வார். இயேசு கிறிஸ்து எருசலேமில் சர்வ பூமியின் ராஜாவாக இருந்து, ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வார். எனவேதான் எருசலேம் ஒரு தனிச்சிறப்பு பெற்ற நகரமாக விளங்குகிறது.
எருசலேமில் யூதர்களின் தேவாலயம்
தாவீது ராஜா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு ஆலயம் கட்ட விரும்பினார். ஆனால் கர்த்தர் அவனுக்கு பிரதியுத்திரமாக உன் கர்ப்ப பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப் பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான் என்றார். அவ்விதமாகவே சாலமோன் தேவனுக்கென்று ஒரு சிறந்த ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தைக் கட்டிமுடித்த பின்பு அதை பிரதிஷ்டை செய்தான். தேவனுக்கென்று சர்வாங்க தகனபலி செலுத்தினான். சாலமோன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒரு ஜெபம் பண்ணினான். அவன் ஜெபம் பண்ணி முடித்தவுடன் தேவனிடத்திலிருந்து அக்கினி இறங்கி சர்வாங்க பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது. கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
“கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரி யர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது” (2நாளா.7:2)
தேவனுடைய மகிமை அந்த ஆலயத்தில் இருந்தது. அங்கே செய்யப்படும் ஜெபங்களுக்குக் கர்த்தர் செவி கொடுப்பதாகக் கூறினார். நாட்கள் கடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். கர்த்தர் எருசலேமை பாபிலோனியரின் கையில் கொடுத்தார். கர்த்தருடைய தேவாலயம் சிதைக்கப்பட்டது. எருசலேமின் குடிகள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனார்கள்.
தேவன் தெரிந்துகொண்ட எருசலேம், கர்த்தரைவிட்டுப் பின்வாங்கி, அன்னிய தேவர்களைப் பின்பற்றியபோது, எருசலேம் சிறைப்பட்டுப் போனது. தேவ மகிமை தேவாலயத்தை விட்டு விலகியது, தேவாலயம் சிதைக்கப்பட்டது. பிரியமானவர்களே! கர்த்தரின் மகிமை நம்மில் தங்கியிருக்க நாம் நம்மை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவப்பலியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் சமர்ப்பிப் போம். அப்பொழுது கர்த்தரின் மகிமை நம்மை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிரப்பும். நம்மை பரிசுத்த ஆவியானவர் நிரப்பி வல்லமையாய்ப் பயன்படுத்துவார்.
எருசலேம், நமக்கு ஒரு பாலமாக இருக்கிறது. சிறைப்பட்டுப்போன எருசலேமின் குடிகள் பாபிலோனிலே எருசலேமை நினைத்து அழுதார்கள். எப்பொழுது எருசலேம் கட்டப்படும் என்று ஏங்கினார்கள். அவர்களின் சிறையிருப்பின் காலம் எப்பொழுது முடியும் என்று தவித்தார்கள். தேவன் அவர்கள் மேல் கோபம் கொண்டாலும், அவர்கள் மேல் மனதுருகினார். எருசலேம் திரும்பக் கட்டப்பட உதவி செய்தார். அவர்களின் சிறையிருப்பைத் திருப்பினார். கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும் நிறைந்தவர். அவர் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆமென்!
எருசலேமும் தானியேலின் ஜெபமும்
தானியேல் எருசலேம் திரும்ப கட்டப்பட வேண்டுமென்று, தனது பாவங்களை யும், எருசலேம் ஜனங்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு மன்றாட்டு ஜெபம் செய்தான். அப்பொழுது எருசலேம் கட்டப்படும் காலத்தையும், மேசியாவாகிய இயேசு ஜனங்களுக்காக எருசலேமில் மரிக்கும் காலமும், கடைசி காலத்தின் செய்திகளும் வெளிப்படுத்தப்பட்டது. தானியேல் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, கர்த்தருடைய தூதன் அவனிடத்தில் வந்து மறைபொருளை வெளிப்படுத்தினான்.
“இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்” (தானி.9:25)
எருசலேம் கட்டப்படும் காலத்தையும் இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரிக்கும் காலமும் குறிக்கப்பட்டுள்ளது. காலத்தை அளவிடும்போது, எதிலிருந்து துவங்குவது என்ற இயல்பான கேள்வி வரும். எருசலேம் கட்டப்பட கட்டளை வெளிப்பட்ட நாளி லிருந்து 7 வாரம் கழித்து 7 ஓ 7=49 வருடங்கள் கழித்து எருசலேம் கட்டிமுடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நாள் ஒரு வருடம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அது அப்படியே நடந்தது.
அதற்கு பின்பு 62 வாரங்கள் கழித்து, அதாவது 434 வருடங்கள் கழித்து இயேசு கிறிஸ்து நமக்காக எருசலேமில் தமது ஜீவனைக் கொடுப்பார் என்று சொல்லப்பட்டது. ஆகவே, எருசலேம் எப்பொழுது கட்டப்படும், எருசலேமில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்பொழுது நமக்காக ஜீவனைக் கொடுப்பார் என்பது தேவனால் முன்னமே திட்டமிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அந்தத் திட்டத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு தானியேல் மூலம் அறிவித்திருந்தார். ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! நம் தேவன் எதையும் திட்டம் பண்ணிச் செய்கிற தேவன். தேவனுடைய இரகசியங்களை தானியேல் அறிந்துகொண்டது போல, நீங்களும் அமர்ந்திருங்கள். தேவன் உங்களோடு பேசுவார். கர்த்தருக்குக் காத்திருப்போம், தானியேலோடு பேசின தேவன் உங்களோடும் பேசுவார்.