கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. அவர் ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார். தேவன் நம் ஒவ்வொருவரையும் பிரகாசிக்கச் செய்ய விரும்புகிறார். கர்த்தர் நம் மேல் உதித்து, அவருடைய மகிமையினால் நிரப்ப விரும்புகிறார். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார். “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது” (ஏசா.60:1). மேலும் உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும், நடந்து வருவார்கள் என்கிறார். நம் மூலம் அநேகர் ஜீவ ஒளியினிடத்தில் வரவேண்டும். மரண இருளின் பள்ளத்தாக்கில் உள்ளவர்களுக்கு நம் சாட்சியின் வாழ்க்கையினால் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். பெரிய வெளிச்சமாகிய இயேசுவிடம் வந்து இரட்சிப்பைப் பெற வேண்டும் என்பதே தேவனின் திட்டம்.
சங்.4:6ஆம் வசனத்தில், “கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” என்று தாவீது ஜெபம் செய்கிறார். மேலும் சங்.67:2 வசனத்தில், “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” என்கிறார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் யோவான் மட்டும் தான் கல்வாரி சிலுவையண்டை கடைசி வரை நின்றார். ஆதலால்தான் மகிமையான இயேசுவை பத்மு தீவில் கண்டான். சிலுவையை ஒவ்வொரு நாளும் தரிசித்தால்தான் அவரின் மகிமையைக் காண முடியும்.
நாம் எப்படி பிரகாசிக்கப்பட முடியும்? என்பதை விரிவாக காண்போம்:
முதலாவதாக – அவர் முகத்தைத் தேடாவிட்டால் பிரகாசம் கிடைக்காது
சங்.34:5 வசனத்தில், “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை”. வெயில் வருமுன் மன்னாவைத் தேடி சேகரிக்கும் படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கட்டளையிட்டார். பல பிரச்சனைகளை சந்திக்கும் முன் அதிகாலையில் அவர் முகத்தை தேடினால் பிரகாசம் கிடைக்கும். சூரிய உதயத்துக்குப் பின்பு மன்னா உருகிவிடும். பல நெருக்கங்கள், பிரச்சனைகள் வந்த பின்பு தேவனைத் தேடினால் வசனம் உள்ளே செல்லாது, ஒருமனதுடனும் கவனத்துடனும் தேவனைத் தேடும் நேரம் காலை வேளைதான்.
இரண்டாவதாக – ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொள் பிரகாசம் ஏற்படும்
பிலி.2:14ஆம் வசனத்தில், “நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,” என்று பிலிப்பு சபையாரைப் பற்றி கூறுகிறார். நம் வாழ்க்கையை அங்கிகரிக்கும் 3 அதிகாரிகள் (Authorities) யாரென்றால் பிதா, வார்த்தை, மனச்சாட்சி. தேவன் கூறுவது வசனத்துக்கு ஒத்துக் காணப்படும். உலகத்தின் சட்டம் வசனத்துக்கு எதிராயிருக்கும். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற எபிரேய வாலிபர்கள் 60 அடி உயரமான பொன் சிலையை வணங்க வேண்டும் என்ற நேபுகாத் நேச்சார் ராஜாவின் சட்டத்துக்கு கீழ்ப்படியவில்லை. இராஜாவின் சட்டத்தை மீறினார்கள். தேவனுக்காக சுடர்களாக பிரகாசித்தனர். தேவன் அவர்கள் மூலம் மகிமைப்பட்டார். யோசேப்பின் வாழ்க்கையில் கூட தேவனுடைய வசனம் அவனைப் புடமிட்டது. சங்.105:19 “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது” வசனத்தின்படி, மனச்சாட்சியின்படி வாழ்ந்ததால் தேவன் யோசேப்பை உயர்த்தினார். மகிமைப்பட்டார். சங்.119:130ஆம் வசனத்தில், “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்”.
மூன்றாவதாக – உபவாசித்து ஜெபிக்கும்போது பிரகாசம் கிடைக்கிறது
மோசே சீனாய் மலையில் தேவனுடன் முகமுகமாய் பேசினார். மோசேயின் முகம் பிரகாசித்தது. மலையின் அனுபவம் என்பது ஜெபத்தில் தரித்திருந்து தனித்து தேவனோடு உறவாடும் அனுபவம். தேவன் ஜெபிக்கும் மனிதனுடன்தான் பேசுகிறார். யாத்.24:15-18 வசனங்களில், மோசே சீனாய் மலையின்மேல் ஏறினபோது ஒரு மேகம் மலையை மூடிற்று, கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப் போல் இருந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின் மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பது நாள் மலையில் இருந்தான். மோசேயின் வாழ்க்கையில் மூன்று முறை 40 நாட்கள் உபவாசத்தோடு தேவனுடன் பேசியதாக கூறப்பட்டுள்ளது. உபவாசத்தோடு தன் ஆத்துமாவை ஒடுக்கி ஜெபித்தால் வாழ்க்கையில் பிரகாசம் ஏற்படும். எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி இயேசுவே. இருள் நம்மை பற்றாது. தேவனின் பிரகாசத்தால் வாழ்க்கையில் உள்ள இருள் மறையும். ஒரு பறவை உயரமாய் எழும்பி பறக்க உதவும் இரண்டு இறக்கைகள் போல, வேதமும் ஜெபமும் நமக்கு பயன்படுகிறது.
நான்காவதாக – மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்
பிரசங்கி 8:1ஆம் வசனத்தில், “ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்”. யாக்.1:5ஆம் வசனத்தில் “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” இயேசுவே ஞானம். நீதி.9:1ஆம் வசனத்தில், “ஞானம் தன் வீட்டைக்கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,” என்று கூறப்பட்டுள்ளது இயேசுவைக் குறிக்கிறது. சபையை தேவன் இயேசுவின்மேல் கட்டுகிறார். 7 தூண்கள் என்பது அஸ்திபார உபதேசங்களான மனந்திரும்புதல், ஞானஸ்நானம், அப்பம் பிட்குதல், மாறுபாடான சந்ததியாரை விட்டு பிரிதல், அப்போஸ்தலருடைய உபதேசம், ஐக்கியம், ஜெபம் போன்றவையே. உலகத்தை நேசிப்பவர்கள் ஞானவான்கள் அல்ல. முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தை தேட வேண்டும். யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் தேவனுடைய ஞானத்தால் உயர்த்தப்பட்டார். தானியேல் பரலோக தேவனின் விசேஷித்த ஞானத்தால் நிரப்பப்பட்டபடியால் அவனுடைய காரியம் மூன்று வித்தியாசமான சாம்ராஜ்ஜியத்திலும் ஜெயமாகவும் மகிமையுள்ளதாகவும் காணப்பட்டது.
ஐந்தாவதாக – நற்கிரியைகளைச் செய்வதால் பிரகாசிக்க முடியும்
மத்.5:14,16-வசனத்தில், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்…. மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். இயேசு நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தார். மாற்.14:8 – “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். விலையேறப் பெற்ற நளதம் என்னும் உத்தம தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றிய ஸ்திரீயைப் பார்த்து சீஷர்கள் முறுமுறுத்தனர். ஆனால் இயேசு சீஷர்களிடம் அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியைச் செய்திருக்கிறாள்” என்றார். நாம் தேவனிடத்திலும் நற்கிரியை செய்ய வேண்டும், தரித்திரருக்கும் நன்மை செய்ய வேண்டும். அப்பொழுது நம் வாழ்க்கை பிரகாசமடையும்.
ஆறாவதாக – உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தவர்கள் பிரகாசிக்க முடியும்
எபி.10:32ல் “முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே” யாருடைய வாழ்க்கை மிகுந்த பிரகாசமடையும்? போராட்டங்களை சகிப்பவர்கள் தான். எபி.11:33,34ஆம் வசனங்களில், “நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்” கிறிஸ்துவுக்காக பாடு சகிக்கிறவர்களை தேவன் பிரகாசமடையச் செய்வார்.
ஏழாவதாக – தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்
எபே.5:14ஆம் வசனத்தில் “…தூங்குகிற நீ(விசுவாசி) விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்” நீ மரித்தவர்களிடையே தூங்கிக் கொண்டிருக்கிறாயா? சங்.88:10,11 வசனங்களில் “ மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துபோன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?” இயேசு தம் மரணத்தின் மூலம் பாதாளத்தில் இறங்கி, பரிசுத்தவான்களை விடுவித்தார். பரிசுத்தவான்கள் மரித்தால் பரதீஸுக்கு தான் போகிறார்கள். இதை தான் இயேசு சிலுவையில் தொங்கிய கள்ளனிடம் கூறினார். மேலும் நரகத்திலிருந்த ஐசுவரியவான் பரதீசில் உள்ள ஆபிரகாமையும் லாசருவையும் பார்த்தான். பாதாளத்தில் மனம் திரும்புதல், ஜெபத்திற்கு பதில் ஏதும் கிடையாது. எனவே உலகத்தில் நாம் வாழும் நாட்களிலேயே தேவனுக்காக ஊழியம் செய்ய வேண்டும். ஆத்தும பாரத்தோடு ஜெபிக்க வேண்டும். சங்.116:15ஆம் வசனத்தில், “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” மேலும் சங்.115:17ஆம் வசனத்தில், “மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்” எனவே நாம் உலகில் வாழும் இந்த நாட்களில் தேவனை துதிக்கவும், ஆராதிக்கவும், அவர் புகழை அறிவிக்கவும் விழிப்புடன் செயல்படுவோம். அப்பொழுது தேவன் நம்மை பிரகாசிப்பிப்பார்.
இதை வாசிக்கும் அன்பு வாசகரே! நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறோம். ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்த புத்தியுடன் காணப்பட வேண்டும் (1தெச.5:6,7). மேலும் தானி.12:3ஆம் வசனத்தில் “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பிரகாசிப்பார்கள். ஆத்தும ஆதாயம் பண்ணினால் நாம் பாதுகாக்கப் படுவோம். நீ, ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று சொல்லி மகிமைப்படுத்து, அப்பொழுது அவர் உன்னை பரிசுத்தப்படுத்துவார். நான் சிறுபிள்ளை, தகுதியில்லை என்று சாக்குபோக்கு சொல்லக் கூடாது. மல்கியா 4:2ஆம் வசனத்தில் “…என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” என்கிறார். அப்.7:55ஆம் வசனத்தில் ஸ்தேவான், “…பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டார்” விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து ஆவியானவரால் நடத்தப்பட்டால் தேவன் அவர்களை பிரகாசமடையச் செய்வார். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பிரகாசிப்பித்து, நம் வாழ்வில் மகிமைப்படுவாராக! ஆமென்!




