கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்று நமது பணி கட்டவேண்டியது. இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை என்று விளம்பியவரோடு சேர்ந்து கட்டுவோம். இனி அசதியாய் இருக்கலாகாது, பொறுத்திருப்போம் என்று நினைக்கலாகாது, தீவிரமாய் எழுந்து கட்டுவோம்.
அன்று நெகேமியா எருசலேமின் அலங்கங்களை கட்ட ஆரம்பித்ததும், நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன? சுட்டெரித்துப் போடப்பட்ட மண் மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ? அவர்கள் கட்டினாலும் என்ன? ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்து போகும் என்றெல்லாம் பரியாசம் செய்தார்கள், நிந்தித்தார்கள். ஆனால் நிந்தனை, இடையூறுகளுக்கு மத்தியில் அலங்கம் கட்டப்பட்டு ஒன்றாய் இணைந்து உயர்ந்தது.
ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாய் இருந்தார்கள். ஜனங்களை சரியாய் நடத்துவது தலைவர்களின் கடமை. கட்டும் போது தேவனை நோக்கி ஜெபம் பண்ணி, எதிராளிகளினிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தார்கள். கட்டும்பணியில் ஜனங்களை இணைத்தபின் இடைவிடாமல் ஜெபம் செய்யும் ஜெபக் குழுக்கள் தேவை. ஆவிக்குரிய போராயுதங்களை பயன்படுத்த வேண்டும். மாமிசம் ஒன்றுக்கும் உதவாது. ஒரு கையினாலே வேலை செய்து மறு கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். கட்டும்போது கட்டுவதற்கான பிரயாசம் எவ்வளவோ, அவ்வளவு சத்துருவின் எதிர்ப்புகளை சமாளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். கட்டும்போது திசை திருப்புவதற்காக சத்துரு முயல்வான். நெகேமியா சொன்னதுபோல நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது என்று சொல்லும் நிலையிலிருக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் கட்ட வேண்டும். அதன்மேல் தேவ கிருபையின்படி புத்தியுள்ள சிற்பாசாரியைப் போல விலையேறப் பெற்ற கற்களைக் கொண்டும் பொன், வெள்ளியைக் கொண்டும் கட்ட வேண்டும். மரம், புல் இவைகளைக் கொண்டு கட்டினால் அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும், அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்றும் அக்கினி பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால் அவன் கூலியைப் பெறுவான். கூலியைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக கட்டுவோம்.
எழுந்து கட்டுவோம் வாருங்கள்