எழும்பு

Written by Pr Thomas Walker

January 4, 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நீங்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் மகுடமாக (மனிதன்) இருக்கிறீர்கள். தேவனுடைய கரத்தின் அனைத்துக் கிரியைகளின் மேலும் ஆளுகை செய்வதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான். அவன் அனைத்தையும் ஆளுகை செய்து அவற்றின் தலைவனாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மனிதனோ பிசாசுக்கு அடிமைப்பட்டு பல காரியங்களில் விடுதலையில்லாமல் வாழ்கிறான். எழும்ப முடியாத நிலையில் அநேகர் கட்டப்பட்டுள்ளனர். தேவன் நாம் எழும்பி, தேவனுடைய வல்லமையைப் பெற்று சத்துருவின் சிறையிலிருந்து விடுபட விரும்புகிறார். வல்லமை தேவனுடையது. எனவே அது உன்னுடையது. அதைப் பெற்று தேவனுடைய கிருபையினால் சத்துருவை மேற்கொள்ள வேண்டும். ஏசா.52:1,2 வசனங்களில் “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப் போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு” என்று தேவன் ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு எச்சரிக்கிறார்.

1. பயத்தைவிட்டு எழும்பு:
சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக்கண்டு தரிசித்தும், பயத்தால் கதவை பூட்டிக்கொண்டு உள் வீட்டிற்குள் இருந்தார்கள். அவர்கள் தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எழுந்து மேல் வீட்டில் சென்று காத்திருந்தபோது, தேவ வல்லமையால் நிரப்பப்பட்டார்கள். முதலாவது பயத்தைவிட்டு எழும்ப வேண்டும். ஏசா.51:9ஆம் வசனத்தில், “எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?” பயத்தின் ஆவியை மேற்கொள்ள வேண்டும். பேதுருவின் பிரசங்கத்தை பெந்தெகொஸ்தே நாளில் கேட்ட அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்ற சீஷர்கள் வேதபாரகர், பரிசேயருக்கு பயப்படாமல் சுவிசேஷத்தை எங்கும் பறைசாற்றினர். வசனம் விருத்தியானது, சீஷர்கள் எண்ணிக்கையும் பெருகியது.

2. தூங்குகிற நீ எழும்பு:
எபே.5:14ல் “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” தூங்குகிற நீ மரித்தோரிலிருந்து எழும்ப வேண்டும். மேலும், எபே.2:1ல் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” தேவன் உன்னை பாவத்திலிருந்து மீட்டுவிடும்படி தன் சொந்த குமாரனையே அனுப்பினார். உன் தொடர்பு யாருடன் உள்ளது? ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவர்கள் சரீரபிரகாரமாய் மரித்தவர்களை அடக்கம் பண்ணட்டும். ஊருக்குள்ளே இருக்கிற தீப்பொறி அணைவதற்குள் என்னைப் பின்பற்று என்றார். அப்பொழுது பிரகாசிப்பிப்பார். மரித்தோர் மத்தியில் தூங்காதே. 1) நாற்றம் தெரியாமல் தூங்குவது 2) எழுப்பவும் யாருமில்லை பாவ உணர்வற்ற நிலை ஆண்டவரையும் மரித்தோரிடத்தில் தேட முடியாது. ஆவியானவரின் அசைவாடுதலைப் பெற்று தேவனைத் தேடு பிழைப்பாய்.

3. பின்மாற்றத்திலிருந்து எழும்பு:
லூக்கா 15:18ஆம் வசனத்தில், “நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று மனந்திரும்பி வந்த இளைய குமாரனை தகப்பன் ஏற்றுக்கொண்டார். இளைய குமாரன் பின்மாற்றத்தில் பாவியாக வாழ்ந்தபோது, அவனது அழகிய தோற்றம், நல்ல சுபாவம், மாறிவிட்டது. பசி, தாகம் ஏற்பட்டது. ஆனால், எழும்பி, தவறை உணர்ந்து, திரும்பி தகப்பனிடம் வந்தான். நாமும் பின்மாற்றத்தில் வாழ்ந்தால் நம் பரம தந்தையிடம் திரும்பிப்போக வேண்டும். மனந்திரும்பினால், வறுமை, ஏழ்மை மாறிவிடும்.

அன்பு நண்பரே, இந்தப் புதிய ஆண்டில் தேவன் நம்மை பிரகாசிப்பிக்க விரும்புகிறார். நாமும் தூசியை உதறிவிட்டு எழுந்திடுவோம். சிறைப்பட்டுப் போன சீயோன் குமாரத்தியே உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு என்று கூறியதுபோல் பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தரித்துக்கொள்வோம். சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம். வலுசர்ப்பங்களின் தலையை நொறுக்கி, அந்தகார வல்லமையை முறியடித்து, சிறைப்பட்டு போனவர்களை விடுதலையாக்குவோம்! கர்த்தர் பெரிய காரியங்களை நம் மூலம் செய்வாராக! மாரநாதா!






Author

You May Also Like…

Share This