1998ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு, என்னுடைய அலுவலகக் காரியமாக, தரக் கட்டுப்பாட்டுப் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன்.
அச்சமயத்தில் “சனிக்கிழமை” அங்கிருந்து அண்டை மாநிலத்திலிருந்த நியூயார்க் நகருக்குச் சென்று, சில முக்கிய இடங்களைக் காண விரும்பினேன். இதற்கிடையில், நான் சென்ற சபையிலிருந்த மூப்பர் ஒருவர் என்னிடம், சனிக்கிழமை என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டார்.
நான் அவரிடம், நியூயார்க் செல்லலாம் என நினைத்தேன். ஆனால் முடிவு செய்யவில்லை எனக் கூறினேன். உடனே அவர் என்னிடம் சனிக்கிழமை ஆலய வளாகத்தில் நடக்கும் “சிறுவர் வேதபாட சாலைக்கு” வருகிறீர்களா? எனக் கேட்டார். நானும் ஆவலுடன் ஒப்புக்கொண்டேன். நியூயார்க் செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.அந்த மூப்பர், சனிக்கிழமை அதிகாலை என்னுடைய ஓட்டலுக்கு, தன்னுடைய காரில் தன்னுடைய மனைவியுடன் என்னை அழைத்துச் செல்லும்படி வந்தார்.காரை நேராக அவருடைய ஆலயத்திற்கு ஓட்டிச் சென்றார். கிட்டத்தட்ட 1 மணி நேரப் பயணம், நான் அநேக சிறுவர்கள் ஆலயத்தில் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுவர்கள் எவருமில்லை.
இந்த மூப்பர், தன்னுடைய காரை ஆலயத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்த ஒரு பெரிய பேருந்தை எடுத்தார். அவருடைய மனைவியும், நானும் அதில் ஏறிக்கொண்டோம். எனக்கு ஒன்றும் புரியவில்லை….பேருந்து சில மைல் தூரம் சென்றது. பின்பு ஒரு வீட்டின் முன்னால் நின்றது. மூப்பரின் மனைவி ஓடிச் சென்று, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். அங்கிருந்து ஒரு சிறுவன் வந்து பேருந்தில் ஏறிக்கொண்டான். இவ்வாறாக, இந்த மூப்பர் தம்பதிகள் 3 மணி நேரம் வீடுவீடாக பேருந்தை ஓட்டிச் சென்று “30 பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்தார்கள்”பின்பு பேருந்து ஆலய வளாகத்தை அடைந்தது. அங்கே 2 மணி நேரம் சிறுவர் வேதபாட வகுப்பை நடத்தினார்கள். பின்பு ஒவ்வொரு பிள்ளையையும் அவரவர் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சென்று விட்டார்கள். அவர்கள் ஊழியத்தை முடிக்கும் போது இரவு நேரம் வந்துவிட்டது.நான் யோசித்துப் பார்த்தேன்… அத் தம்பதிகள் நாள் முழுவதும் பிரயாசப்பட்டு, பல நூறு மைல்கள் பேருந்தை ஓட்டி, 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று, 30 பிள்ளைகளைத் தான் சேர்க்க முடிகிறது. அதையும் அவர்கள் ஆவலுடன், பல ஆண்டுகளாக, உற்சாகமாய்ச் செய்து வருகிறார்கள்….
நம்முடைய நாட்டில், ஒரே ஒரு தெருவில் சென்றாலே போதும், பல நூறு பிள்ளைகளைச் சேர்த்து விடலாம். பேருந்தும் தேவையில்லை. பல மணி நேரப் பயணமும் தேவையில்லை.தவனமுள்ள ஆத்துமாக்கள் இந்த தேசத்தில் ஏராளம் உண்டு. அவர்களுக்கு இயேசுவைக் காண்பிக்க… அவர்போல் நடந்திட கால்கள் வேண்டும், அவர்போல் பேசிட நாவு வேண்டும்.இவைகளைச் செய்யும் சுவிசேஷகன் மீது கர்த்தருடைய கண்கள் சிறப்பாய் பதிந்திருக்கும். பரலோகம் அவர்களில் மகிழும். கர்த்தர்தாமே நமக்கு இப்படிப்பட்ட கிருபைகளைத் தருவாராக!
இயேசு சொன்னார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மாற்கு 10:14).
தேவன்தாமே நமக்கு இந்த ஆண்டில் அநேகமாயிரம் சிறுவர்களைச் சந்தித்து அவர்களை தேவ ராஜ்யத்தின் புத்திரராக்கும் சிலாக்கியத்தைத் தருவாராக!
தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்போம். தேவன் நம்மூலம், நம்முடைய நாட்களில் பெரிய எழுப்புதலைக் கட்டளையிடுவார்.