விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்

Written by Pr Thomas Walker

August 2, 2014

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

கிறிஸ்தவன் உயிர்வாழ விசுவாசம் அவசியம். விசுவாசம் என்றால் தேவனையே சார்ந்திருப்பது என்று பொருள். விசுவாசம் காணப்படாததைக் காண்கிறது. நம்ப முடியாததை நம்புகின்றது, பெற முடியாததைப் பெற்றுக்கொள்கின்றது. ஜெபம் செய்வதற்கும் விசுவாசம் தேவை. மேலும் மாற்கு 9:23ஆம் வசனத்தில், “இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்”

விசுவாசிக்கிறவன் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ மனிதனிடம் கேட்பவன் அல்ல. தேவனுக்கு வெளியே ஏதாவது ஒன்றைத் தேடினால் விசுவாசம் தடைபடும். விசுவாசிக்கிறவன் முற்றிலுமே தேவனைச் சார்ந்திருப்பவன். பெலவீனமான ஒருவனைக் கொண்டு தேவன் பலமான பெரிய காரியங்களைச் செய்ய வைக்கிறார். நான் விசுவாசிக்கிறவர் “இன்னார்” என்ற அறிவேன் என்கிறார் பவுல்.

முதலாவது சாதாரண காரியங்களை அல்ல, அசாதாரண காரியங்களைச் செய்பவனே விசுவாசி. மேலும் மத்.17:20 “அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். போதகரின் விசுவாசத்தில் விசுவாசிகள் வாழக்கூடாது. சபையையே எதிர்பார்த்தும் வாழக்கூடாது. விசுவாசி தன் தேவனின்மேல் வைக்கும் நம்பிக்கையில் நிலைத்திருப்பவன். தேவனிடம் மட்டுமே எதிர்ப்பார்ப்பவன்.

2. கீழ்ப்படிபவன்: தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிவதே விசுவாசத்தில் உறுதி. கீழ்ப்படிவது விசுவாசத்தில் அடங்கியுள்ளது. விசுவாசமுள்ளவர்கள் செயல்படுகிறவர்களாக இருப்பார்கள். கீழ்ப்படிபவனே விசுவாசி.

3. தேவனுடைய சத்தத்தைக் கேட்பதில் மிக கவனமாக இருப்பவனே விசுவாசி:

எபி.11:1ஆம் வசனத்தில், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” பரலோகம் உண்டு என்று எல்லாராலும் நம்பப்படுகிறது. உறுதியானது தேவதூதர்களைப் பார்க்கவில்லை. காணப்படாதவைகளின் நிச்சயமே விசுவாசம். விசுவாசம் தேவனிடமிருந்து வருகிறது.

ஐம்புலன்கள் மூலம் அறிவு வருகிறது. ஆனால் விசுவாசம் தேவனிடமிருந்து வருகிறது. தேவன் ஒருவனுக்கு வெளிப்படுத்தினால் அல்லாமல் விசுவாசம் ஒருவனுக்குள்ளும் உண்டாவதில்லை. 1கொரி.2:4-7 வசனத்தில், “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, …ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.” மேலும் 1கொரி.2:15 வசனத்தில் “ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்” என்கிறார்.

மேலும் 2கொரி.5:6ஆம் வசனத்தில், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” என்கிறார்  பவுல்.

விசுவாசத்தின் அடித்தளம் என்ன?

தேவன் எப்படிப்பட்டவர் என்ற அறிவு நமக்குத் தேவை.

1) தேவன் மாறாதவர்:

எபி.13:8ஆம் வசனத்தில், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” மேலும் மல்.3:6ஆம் வசனத்தில், “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” என்கிறார்.

2) தேவன் செய்ய நினைத்தது தடைபடாது!

யோபு 42:2ஆம் வசனத்தில், “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” என்று யோபு கூறினார்.

3) அவர் கைவிட மாட்டார், விலகவுமாட்டார்:

1நாளா.28:20ல் “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்” என்கிறார் தாவீது.

4) தேவன் பொய் சொல்ல மாட்டார்!

எண்.23:19ஆம் வசனத்தில், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” தீத்து 1:3ல் “பொய்யுரையாத தேவன்…” என்று கூறுகிறார் பவுல்.

5) தேவன் சர்வ வல்லவர்!

ஆதி.17:1ல் “…கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” என்கிறார்.

இதை வாசிக்கும் அன்பு நண்பரே! விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவன் எல்லாவற்றிற்கும் போதுமானவர். தேவன் பேரில் வைத்துள்ள அடிப்படை விசுவாசத்தை நாம் மாற்றக்கூடாது. அதாவது தேவன் மாறாதவர், அவர் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் நினைத்தது தடைபடாது. அவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. தேவன் பொய்சொல்ல மனிதன் அல்ல. தாம் நமக்குச் சொல்லிய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவர் என்று விசுவாசிக்க வேண்டும். மேலும் விசுவாசம் நமது நற்செயல் எனக் கருதி மோசம் போகக்கூடாது. விசுவாசம் தேவனுடைய ஈவு. விசுவாசத்தில் பெருகுவோம்! தேவன் நம் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண ஜெபிப்போம்! நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்! ஆமென்!!






Author

You May Also Like…

Share This