கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய தேவன் பெரியவர், மாறாதவர், நமக்காகவே இருக்கிறார். நமது தேவைகளைச் சந்திப்பார். தேவனாலே மாத்திரம் நம் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். தேவனை நாம் சார்ந்து வாழும்போது – தேவன் யார் மூலமாகவும், எப்படியும் நம் தேவைகளைச் சந்திக்க முடியும். எலியாவின் தேவன் பெரியவர். எலியாவின் தேவையை காகங்கள் மூலமாகவும், ஆற்று நீர் முலமாகவும், பின்னர் விதவையின் மூலமாகவும் சந்தித்தார்.
தேவன் நம் தேவைகளை சந்திப்பது நேர்வழியில்தான், சரீர தேவையோ அல்லது எப்படிப்பட்ட தேவையானாலும் நமது ஜீவியத்தின் பொறுப்பை தேவன் எடுத்துக்கொள்ளுகிறார். அவரை ஏற்றுக்கொண்ட அத்தனைபேரும் அதிகாரப் படுத்தப்பட்டவர்கள். பிள்ளைகளானால் சுதந்திரராக இருக்கிறோம். நாம் அவரது பிள்ளைகளானபடியால் அவரே நமது தேவைகளைச் சந்திக்க ஆவலுடனிருக்கிறார். அவரை நாம் எல்லாக் காரியத்திலும் சார்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார். நாம் நமது தேவனாலேயே போஷிக்கப்படவே விரும்புகிறார். சங்.115:12ஆம் வசனத்தில், “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்;” என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.
மத்.6:26ஆம் வசனத்தில், “அவைகளையும் பிழைப்பூட்டுகிறார்” என்றும் மத்.6:26-34 வசனங்களில், தேவன் நமது தேவைகளை அறிந்திருக்கிறார். அவரே தேவைகளைச் சந்திக்கவும் விரும்புகிறார்.
தேவைகள் சந்திக்கப்பட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்:
1. முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரியவைகளைத் தேட வேண்டும்:
மத்.6:33ஆம் வசனத்தில், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” நாம் முதலாவது தேவ இராஜ்ஜியம், தேவ ராஜ்ஜியத்தின் நீதி இவைகளைத் தேட வேண்டும். இயேசு 12 வயதில் பிதாவுக்கடுத்த காரியங்களைத் தேடி தேவ சித்தம் செய்வதில் அதிக கவனத்துடன் செயல்பட்டார்.
2. சம்பூரணமாய்க் கொடுக்கிறவரிடம் கேட்க வேண்டும்:
யாக்.1:5ஆம் வசனத்தில், “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” தேவன் நமக்குத் தேவை என்று கண்டு, பூமியில் பொன், இரும்பு, நிலக்கரி போன்றவற்றைப் புதைத்து வைத்திருக்கிறார். நாம் தோண்டி எடுக்கிறோம். அப்படி எடுக்கிறவன் அதை உண்டாக்கவில்லை. ஆனால் கண்டு எடுக்கிறான். அப்படியே விசுவாசத்தோடு, சந்தேகப்படாமல் அப்படியே கேட்க வேண்டும். யாக்.5:14,15,16 வியாதி நேரத்தில் சபையின் மூப்பர்களை அழைத்து விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது சுகம் உண்டாகிறது.
3. தேவ சித்தம் அறிந்து தேவனின் சித்தப்படி கேட்க வேண்டும்:
1யோவான் 5:14ல் “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” தேவசித்தம் அறிந்து தேவனின் சித்தப்படி கேட்க வேண்டும். யாக்.4:2,3 “நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; ….தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” பொறாமை, இச்சை போன்ற தீய குணங்கள் கேட்டதைப் பெற தடையாக இருக்கின்றன.
நமக்கு தேவன்மேல் உள்ள தைரியம் என்னவென்றால் தேவ சித்தத்தின்படி கேட்பதை நிச்சயம் பெற்றுக்கொள்வோம் என்பதே. தேவ சத்தமும், தேவ சித்தமும் அறிய ஒப்புக்கொடுத்தலே அவசியம். எஜமானின் சத்தத்தையும், சித்தத்தையும் அறியும் அடிமை எவ்வளவு எஜமானுடன் நெருங்கிப் பழகுகிறானோ அவ்வளவு தூரம் அடிமையானவன் எஜமானின் விருப்பத்தை அறிவான்.
4. கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்!
1பேதுரு 5:7ஆம் வசனத்தில், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” தேவனுடைய சமூகத்தில் நாம் போய் ஜெபிக்கும்போதெல்லாம் நம்முடைய எல்லாக் கவலைகளையும் அவர்மேல் வைத்துவிட வேண்டும். மேலும் ஏசா.41:10ஆம் வசனத்தில் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; ….நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;” என்று பல வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். தேவனை நம்ப வேண்டும். அவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தையும் நம்ப வேண்டும்.
சீனாவிலுள்ள இளம் விசுவாசிகளுக்கு இளம் மிஷனரிகள் நன்றாக வேதத்தைப் போதித்து வந்தார்கள். விசுவாசித்தால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சத்தியத்தை ஆழமாக போதித்தார்கள். தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று. விசுவாசிகள் போய் மிஷனரியிடம் முறையிட்டார்கள். உபவாச ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. தேவன் அற்புதம் செய்தார். கோதுமை மழை பெய்தது. 1500 மைல்கள் தொலைவில் திபெத்தில் உள்ள பாமீர் மலையில் உள்ள கோதுமையை காற்று கொண்டுபோய்விட்டது. காற்று கோதுமை களஞ்சியத்தின் மேற்கூரையை எடுத்தெறிந்து கோதுமையை எடுத்து 1500 மைலுக்கு அப்பால் விசுவாசிகள் ஜெபித்த சபையைச் சுற்றிலும் போட்டது. கோதுமை மழைபோலப் பெய்தது. அங்குள்ள விசுவாசிகளின் விசுவாச ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுத்தார்.
5. தேவனுடைய ஆலோசனைப்படி நடக்கும்போது தேவைகள் சந்திக்கப்படும்:
2இராஜா.4ஆம் அதிகாரத்தில் எலிசா தீர்க்கதரிசியிடம் சென்ற விதவை தீர்க்கதரிசியின் ஆலோசனைப்படி செய்ததால் கடன் பிரச்சனை தீர்ந்தது. தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! நம் தேவன் நம்மை நினைத்திருக்கிறார். அவர் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார். நாம் அவரைச் சார்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தேவன் அவரே நம் வாழ்வின் தேவைகளை சந்திக்க விரும்புகிறார். நாம் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவோம். சம்பூரணமாய்க் கொடுக்கும் அவரிடம் சந்தேகப்படாமல் கேட்போம். தேவனின் சித்தம் அறிந்து வாக்குத்தத்தங்களை நம்பி ஜெபிப்போம். கவலைகளை அவர்மேல் வைத்துவிட்டு ஜெபிப்போம். மேலும் தேவ ஆலோசனைப்படி நடந்தால் தேவன் நம்முடைய தேவைகளை சந்திப்பார். தேவன் நம் வாழ்வில் மகிமைப்படுவார். அல்லேலூயா!




