கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய தேவன் பெரியவர். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆராய்ந்து முடியாத எண்ணிக்கைக்கு அடங்காத அதிசயங்களையும் செய்து வருகிறார். நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் அவரால் படைக்கப்பட்டுள்ளோம். நாமும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழிநடத்தப்பட்டால் நம் வாழ்வில் அதிசயங்கள் நடக்கும். நம் தேவன் அதிசயமானவர் என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். ஏசா.9:6ஆம் வசனத்தில், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” நாமும் அதிசயமானவர்கள். அதிசயமானவர் நம் உள்ளத்தில் பிறக்கும்போது நம் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்.
நம்முடைய தேவன் எப்படிப்பட்ட அதிசயங்களைச் செய்கிறார் என்பதை தியானிப்போம்:
1.அவரைக் கனம்பண்ணும்படி அதிசயங்களைச் செய்கிறார்:
நியா.13:17-20ஆம் வசனங்களில், கர்த்தருடைய தூதனை மனோவா நோக்கி, “நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.” மனோவா போய் வெள்ளாட்டுக் குட்டியையும், போஜன பலியையும் கொண்டுவந்து அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான். அப்பொழுது மனோவாவும், அவன் மனைவியும் பார்த்துக் கொண்டிருக்கையில் அதிசயம் விளங்கியது. கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார். சிம்சோனின் பெற்றோருக்கு சிம்சோனின் பிறப்பைக் குறித்து முன்னறிவித்து அவர்கள் அவரை கனம்பண்ணும்படியாக அதிசயமாகத் தம்மை வெளிப்படுத்தினார்.
2. மனிதனை சிருஷ்டித்த விதம் அதிசயம்:
சங்.139:14ஆம் வசனத்தில், “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” மனிதனை சிருஷ்டிப்பின் மகுடமாக தேவன் சிருஷ்டித்துள்ளார். தசைகள், நரம்பு மண்டலம், செல்கள், எலும்புகள் என்று அற்புதமாகப் படைத்துள்ளார். மனிதனை தேவன் தன் சாயலாக சிருஷ்டித்தார். தேவன் முதலில் ஆதாமை சிருஷ்டித்தார். அவன் விலாவிலிருந்து எலும்பை எடுத்து அதிசயமாய் ஏவாளைப் படைத்தார். நாம் ஆதாமின் வழியில் வந்தவர்கள். பின்பு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவம் மன்னிக்கப்பட்டு மறுபடியும் நாம் புது சிருஷ்டியாக தேவனால் படைக்கப்படுகிறோம். இது மிகவும் அதிசயமான செயல்.
மேலும் இரண்டாம் வருகையில் எக்காள சத்தம் கேட்டு நம் அற்பமான சரீரம் அவருடன் இணைவதும் ஒரு அதிசயம். புதிய நாமம், புதிய இருதயம் கொடுத்து அவரை துதிக்கும் புதுப்பாட்டை நம் வாயில் கொடுத்து அவரில் நம்மை மகிழச் செய்வதும் அதிசயம்.
3. தேவன் மனிதனை போஷிக்கும் விதம் அதிசயம்:
சங்.78:23-29 வசனங்களில், “அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு(இஸ்ரவேலருக்கு) ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்;…ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணினார்”
கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசியை காலையிலும், மாலையிலும் காகங்கள் மூலம் அப்பமும், இறைச்சியும் தந்து போஷித்தார். ஆற்றின் தண்ணீர் வற்றியபின் சாரிபாத் என்ற விதவையின் மூலம் போஷித்தார். அதிசயமானவர் தம்முடைய பிள்ளைகளை அற்புதமாய் போஷித்து பராமரித்தார்.
4. தேவன் மனிதனை வழிநடத்தும் விதம் அதிசயம்:
சங்.78:12-16ஆம் வசனங்களிலும், யாத்.13:22ஆம் வசனத்திலும் தேவன் இஸ்ரவேலரை எவ்வாறு வழிநடத்தினார் என பார்க்கலாம். ஆசாப் தன்னுடைய போதக சங்கீதத்தில் தேவன் இஸ்ரவேலரை எவ்வளவு அருமையாய் அதிசயமாய் வழிநடத்தினார் என்பதை விவரிக்கிறார். எகிப்து தேசத்தில் சோவான் வெளியிலே அவர் இஸ்ரவேலருக்கு அதிசயங்கள் செய்து வழிநடத்தினார். செங்கடலைக் கடந்தார்கள். ஆழத்தின் ஜலத்தை உறையச் செய்து, கீழ்காற்றை வீசச் செய்து உலர்ந்த தரையாக மாற்றினார். ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார். பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்திலும் அவர்களை நடத்தி கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிப்போல ஓடிவரும்படி செய்தார். ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவராய் அதிசயமாய் 40 ஆண்டுகள் வழிநடத்தினார்.
5. தேவன் நம்மை காப்பாற்றும் விதம் அதிசயம்:
யாத்.15:4ஆம் வசனத்தில், “பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள். ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.” கர்த்தருடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. கர்த்தர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் நம் போக்கையும், நம் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காக்கிறார். கர்த்தர் தம்முடைய ஜனங்களை அதிசயமாய் சகல ஜனங்களின் கைக்கும் விலக்கி காப்பாற்றுகிறார்.
6. தேவன் நமக்கு வெற்றியைத் தரும் விதம் அதிசயம்:
சங்.115:10ஆம் வசனத்தில், “ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்” “கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.” (யாத்.15:9,10) “தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” அவர் தமது வலது கரத்தை நீட்ட பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
நம் வாழ்வில் அதிசயத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்னசெய்ய வேண்டும்?
1. தேவன் செய்த அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேச வேண்டும்:
1நாளா.16:9 “அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.” அப்பொழுதுதான் உனக்குச் சொந்தமாகும். மேலும் சங்.105:2 “அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்”
2. அவரது அதிசயங்களை நினைவுகூர வேண்டும்:
1நாளா.16:13 “அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்” சங்.77:11ஆம் வசனத்தில், “கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;”
3. அவர் செய்த அதிசயங்களை பின்வரும் சந்ததிக்கு விவரிக்க வேண்டும்:
சங்.78:4ஆம் வசனத்தில், “பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்” பிள்ளைகளுக்கு தேவன் நம் வாழ்வில் செய்த அதிசயங்களை விவரித்துச் சொல்ல வேண்டும்.
4. சாட்சியாக அறிவி:
சங்.71:17ஆம் வசனத்தில், “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்” தேவன் நம் வாழ்க்கையில் செய்த அதிசயங்களை மற்றவர்களுக்கு சாட்சியாக அறிவித்து அவர் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்.
அன்பு நண்பரே! நம் தேவன் அதிசயமானவர், உங்கள் வாழ்வில் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் அதிசயங்களையும் செய்ய வல்லவர். நாம் அவர் அதிசயங்களைப் பெற்று அனுபவிக்க அவர் அதிசயங்களை தியானித்துப் பேசுங்கள். அவர் அதிசயங்களை நினைவுகூருங்கள். பிள்ளைகளுக்கு விவரித்துச் சொல்லுங்கள். சாட்சியாக அவர் அதிசயங்களை விவரித்துச் சொல்லுங்கள். அல்லேலூயா!




