கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
கிறிஸ்தவ குணாதிசயங்களிலே மிகவும் தலைசிறந்த குணம் மன்னிப்பு. The greatest Christian virtue is forgiveness. மத்.6:12ல் இவ்வாறு வாசிக்கிறோம் “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று கர்த்தர் சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் பார்க்கிறோம். எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுடைய குற்றங்களை நாம் அவர்களுக்கு மன்னித்தால் பரமபிதா நம்முடைய குற்றங்களை நமக்கு மன்னிப்பார். மேலும் ஏசா.43:25ஆம் வசனத்தில் “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” என்றார்.
ஏசா.55:7ஆம் வசனத்தில், “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”
“தேவன் பரிசுத்தராக இருப்பதுபோல் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்” என்கிறார். இயேசு பாவத்தை வெறுக்கிறவர், பாவியை நேசிக்கிறார். நாம் பாவம் செய்தால் தேவனை கோபப்படுத்துகிறோம், அவர் நம் பாவத்தைக் கணக்குப் பார்த்தால் அழிந்துபோவோம்.நாம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிட்டால் அவர் எல்லா பாவங்களையும் மன்னித்து நம்மை இரட்சிப்பார்.
பாவ மன்னிப்புப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
1. தேவன் பாவங்களை மன்னிக்கிறவர்:
சங்.86:5,6 “கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்” என்கிறார் தாவீது. ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். நம் தேவனிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டால் அவர் மன்னித்து, தமது மிகுந்த கிருபையினால் இரங்குவார்.
2. இயேசுவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்பு:
மத்.26:28ஆம் வசனத்தில், “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” மேலும் எபி.9:22ஆம் வசனத்தில் “நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.” மேலும் கொலோ.1:14ஆம் வசனத்தில், “(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”
3. பாவம் மன்னிக்கப்பட மனந்திரும்புதல் அவசியம்:
அப்.2:38ல், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” பாவ மன்னிப்பு பெற மனம் திரும்ப வேண்டும்.
4. மனிதர்களின் தப்பிதங்களை மன்னித்தால் பாவ மன்னிப்பு:
மத்.6:14,15ஆம் வசனங்களில், “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட மனிதர்களின் தப்பிதங்களை நாம் மன்னிக்க வேண்டும்.
5. தேவனை விசுவாசித்தால் பாவ மன்னிப்பு:
அப்.10:43ல், “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்” மேலும் லூக்.1:77ஆம் வசனத்தில், “நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்…” பாவமன்னிப்பை பற்றி பிரசங்கங்கள் செய்ய வேண்டும். லூக்.24:47ஆம் வசனத்தில், “அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” என்று தேவன் விரும்புகிறார். பாவ மன்னிப்பு பெறாத ஆத்துமா நரகத்துக்கே செல்லும். எனவே பாவ மன்னிப்பை பற்றி எல்லா ஜனங்களுக்கும் பிரசங்கம் செய்ய வேண்டும்.
மன்னிக்கும் அளவு:
மத்.18:21,22ல் “…பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
சங்.103:3 “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” தேவனிடம் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். எபே.4:32ல் “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” மேலும் மத்.11:28,29ல் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” யாக்.5:16ல் “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”
பாவ மன்னிப்பை பெற விரும்பும் அன்பு நண்பரே! யோசேப்பு தன் சகோதரரை மன்னித்து ஏற்றுக்கொண்டு நன்மை செய்ததுபோல ஆதி.45:15 நாமும் நன்மை செய்வோம். மேலும் மோசே எண்.12:13ஆம் வசனத்தில் “அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக்(மிரியாமை) குணமாக்கும் என்று கெஞ்சினான்” என்று பார்க்கிறோம். இயேசுவும் சிலுவையில் அறைந்து துன்பப்படுத்தியவர்களை “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்று மன்றாடினார். ஸ்தேவானும் கல்லெறிந்து கொன்றவர்களை “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்” (அப்.7:60). பவுல் அப்போஸ்தலனும் 2தீமோ.4:17ல் “…என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், … சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” என்கிறார். நாம் தேவனிடத்தில் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிட்டு தேவனிடம் பாவ மன்னிப்பு பெறுவோம். ஒருவர் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் மன்னித்து தேவனின் இரக்கத்தைப் பெற்று வாழ தேவன் அருள்புரிவாராக! – ஆமென்




