சாத்தானின் தந்திரங்கள்

Written by Pr Thomas Walker

March 2, 2014

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உலகில் உள்ள மக்களை மிகவும் மோசப்படுத்தி, தேவனைப் பற்றி அறியவிடாமலும், தேவனை ஆராதனை செய்யவிடாமலும் தடுப்பவன்தான் சாத்தான். தேவனுடைய பிள்ளைகள் சாத்தானின் தந்திரங்களை அறிந்துகொள்ள வேண்டும். நம் எதிராளியான சாத்தானின் பெலத்தை நாம் கண்டுகொள்ள வேண்டும். சாத்தான் ஒரு பெரிய தந்திரவாதி, மனுஷ கொலைபாதகம், குடும்பங்களில் ஒற்றுமையைக் குலைத்துவிடுகிறான். குடும்பங்களை உடைத்துப் பாழாக்குகிறான். சாத்தான் பொய்யன். பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். வல்லமையும், அற்புதம் செய்யும் ஆற்றலும் உடையவன். அவனுக்கு எதிர்காலத்தில் நடக்கும் காரியங்கள் கூடத் தெரியும். மேலும் குணமாக்குகிறான். இராஜாக்கள் இருதயத்தை தூண்டி ஜனங்களைக் கொடுமைப்படுத்துவான். அவனுடைய மற்றொரு பெயர் உலகத்தின் அதிபதி. நாம் பிசாசின் தந்திரங்களை முறியடிக்க வேண்டுமானால் இயேசுவைச் சார்ந்து வாழ வேண்டும். சாத்தான் தேவனுடைய எதிரி. நாம் தேவனுடைய உடன்படிக்கையின் பிள்ளைகளாக இருப்பதால் சாத்தான் நம்மை எதிர்க்கிறான். நம்மை எதிரியாகக் கருதுகிறான்.

சாத்தான் உடன்படிக்கையின் ஜனங்களை அடிமைப்படுத்துகிறான்:

யாத்.1:10ஆம் வசனத்தில், “அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.” எகிப்தின் ராஜா பார்வோன் சாத்தானைக் குறிக்கிறான்.

சாத்தானின் நோக்கங்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்:

1. தேவ ஜனங்கள் பெருகக் கூடாது!

யாத்.1:10ஆம் வசனத்தில் “தேவ ஜனங்கள் பெருகாமல்” தடுக்கிறான். (க்ஷiடிடடிபiஉயட ழுசடிறவா) முக்கியமாக, தேவப் பிள்ளைகள் திருமணமாகி குடும்பத்தில் தேவ பக்தியுள்ள சந்ததி பெருகுவதை, சாத்தான் தடுக்கப் பார்க்கிறான்.

2. தேவ ஜனங்கள் தன்னை எதிர்க்கக் கூடாது!

யாத்.1:10ஆம் வசனம், “தேவ ஜனங்கள் பகைவர்களோடு சேர்ந்து தனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணக்கூடாது.” தேவ ஜனங்கள் ஒன்றுபட்டு கூடி ஜெபிப்பதையோ, உபவாசித்து, பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபிப்பதையோ அவன் விரும்பவில்லை… தேவ ஜனங்கள் ஒன்றுகூடிப் பிசாசை எதிர்க்க வேண்டும். பிசாசை எதிர்க்காதவன் கிறிஸ்தவன் அல்ல. ஜெபத்தில் யாக்கோபைப் போலப் போராட வேண்டும். பிசாசின் சேனைகளோடு முகமுகமாய் போராடி எதிர்த்துத் துரத்த வேண்டும். பிசாசு தன்னை எதிர்க்காதவனைப் பற்றி எந்தவிதக் கவலையும் கொள்ளமாட்டான். பரிசுத்தமாயிருங்கள், பிசாசின் தந்திரங்களை மேற்கொள்ள தேவ ஆவியின் வல்லமையோடு பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபித்தால் பிசாசின் அக்கினியாஸ்திரங்கள் அவிக்கப்பட்டுப்போகும்.

3. தேவ ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்படக் கூடாது:

கிறிஸ்தவர்கள் தனியாகவோ, குடும்பமாகவோ வேதம் வாசிப்பதையோ, ஜெபிப்பதை பற்றி அவன் கவலைப்படுவது இல்லை. தேவ ஜனங்கள் மோசே, ஆரோன் போன்ற தேவ ஊழியர்களால் வழிநடத்தப்பட்டு, தேவனுக்காக சேனையாக, சபையாக எழும்பி பிரகாசிக்க வேண்டும். சபை கூடிவருதல், சபையாக ஊழியம் செய்தல், சபையாக தேசத்திற்காக திறப்பின் வாசலில் நின்று பரிந்துபேசி ஜெபித்தல் போன்ற காரியங்களை விரும்பமாட்டான்.

தீர்மானங்கள்:

பிசாசின் தந்திரங்களைப் புரிந்துகொண்ட நாம் தேவ வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.

1) நாம் தேவ ஜனங்கள் பெருக வேண்டும் என்று பிரயாசப்பட வேண்டும். குடும்பங்கள், திருமணங்கள் மூலம் கட்டப்பட வேண்டும். சபையில் ஆத்துமாக்கள் பெருக வேண்டும்.

2) சாத்தானின் சேனைகளை உபவாச ஜெபங்கள் மூலம் குடும்பமாக, சபையாக ஜெபித்து பார்வோனின் அடிமைத்தன ஆவியிலிருந்தும், ஆமானின் கொலை வெறியின் ஆவியிலிருந்தும் விடுவிக்க வைராக்கியமாக எழும்ப வேண்டும்.

3) தேவ ஜனங்கள் தேவனை ஆராதிக்கப் புறப்பட வேண்டும். ஊழியம் செய்யப் புறப்பட வேண்டும். தேவ ஜனங்கள் தேவனுக்காகப் புறப்பட்டுச் சென்று அநேகரைச் சீஷர்களாக மாற்ற வேண்டும்.

பிசாசின் தந்திரம் ஆண் பிள்ளைகளைக் கொலைசெய்ய வேண்டும்:

யாத்.1:12-16 வசனங்களில்,

1) இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சலடைந்தார்கள்.

2) வசனம் யாத்.1:12 – கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

3) வசனம் 13 “…சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும் அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.”

4) வசனம் 16 “…ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.” தேவன் இதைத் தடுக்கத் திட்டமிட்டார், மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால் ஆண்பிள்ளைகளை உயிரோடே பாதுகாத்தார்கள்.

5) யாத்.1:22 “…பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.” பெற்றோரே தங்கள் பிள்ளைகளை நதியில் போட்டார்கள். இதில் பிசாசு வெற்றி அடைந்தான். விசுவாசியே! உன் பிள்ளைகளை நீ பாதுகாக்க வைராக்கியம் காட்டு, உன் மடியில் உன் பிள்ளை செத்துப் போகாதபடி கண்ணீர்விட்டு ஜெபி. கடைசி நாட்களில் பிசாசு குடும்பங்களில் உள்ள வாலிப பிள்ளைகளை உலகத்துக்கு நேராகத் திருப்பி வெற்றி கொள்கிறான். துன்மார்க்கமாக வாழ வைத்து, குடித்து, வெறித்து, தவறான பாவ சிற்றின்பங்களில் மூழ்கடித்து ஆத்துமாக்களைக் கொலை செய்கிறான். உன் பிள்ளையின் ஆத்தும இரட்சிப்புக்காக அழுது உபவாசித்து ஜெபித்து சாத்தானின் தந்திரங்களை முறியடித்து ஜெபி. உன் ஆண் மக்கள் சாத்தானின் கையில் சிக்கி நரகம் செல்லக்கூடாது.

தேவ திட்டமும் – சாத்தானின் தந்திரமும்:

தேவ திட்டம்: “என் ஜனங்களைப் போகவிட வேண்டும்”

யாத்.5:1ஆம் வசனத்தில், “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.” பிசாசின் கிரியைகளை அழித்து ஜெயம் பெற வேண்டும்.

ஐந்துவிதமான மக்கள் கிறிஸ்தவர்கள் நடுவில் உள்ளனர்:

1) எகிப்தைவிட்டுப் புறப்படத் தயங்குபவர்கள்:

இன்றைய சபைகளிலும் இம்மைக்குரிய சலுகைகள், பதவி, உயர்வு, வேலை, திருமணம் போன்ற காரியங்களுக்காக, தேவனுக்காக வைராக்கியமாய் எகிப்தின் பாவ வாழ்க்கையை விட்டு வெளியே வரத் தயங்குபவர்கள் அநேகர் உள்ளனர். முறுமுறுக்கிறவர்களாகவும், மோசேயையும், ஆரோனையும் எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர். தேவன் ஆசீர்வாதத்தைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கர்த்தரை உறுதியாகப் பின்பற்றுகிறவர்கள். தேவனுக்காக வெளியே புறப்பட்டுச் சென்ற ஊழியம் செய்ய வேண்டும்.

2) எகிப்திலேயே ஆராதனை செய்பவர்கள்:

யாத்.8:25ல் “அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” தேவனுக்கு எகிப்து தேசத்தின் அருவருப்புகளோடு பலியிடுவது தவறு. 3 நாட்கள் பிரயாண தூரம் இடைவெளி வேண்டும். பாவத்தையும் பாரம்பரியத்தையும் விடாமல் வீட்டிலேயே ஆராதிக்க பிசாசு தூண்டுவான். இது சாத்தானின் பெரிய தந்திரம். தேவனை ஆராதிக்க அவர் தெரிந்தெடுத்த இடத்துக்குப் புறப்பட்டுச் சென்று அவர் சமூகத்தில் ஆராதிக்க வேண்டும்.

3) அதிக தூரம் போக வேண்டாம்:

யாத்.8:28ல் “…ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.” பிசாசின் தந்திரம் தேவனுடைய பிள்ளைகளை முழுமையாகச் செயல்பட விடமாட்டான். கொஞ்சம் பங்கெடுத்தல், தேவனுக்காக தசமபாகம், கொடுக்க விடமாட்டான். கொஞ்சம் கொடுக்க வைப்பான். அது பெரிய தவறு. தேவனுக்காக ஒரு மைல் தூரம் வரக் கூப்பிட்டால் 2 மைல் தூரம் போகிறேன் என்று மனப்பூர்வமாய் வேலை செய்பவர்கள் தேவை.

4) புருஷர் மட்டும் போகட்டும்:

யாத்.10:11,9ஆம் வசனங்களில், “அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.” “அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது…” என்றான். தேவன் நாம் குடும்பமாக, பிள்ளைகளோடு ஆராதனைசெய்ய விரும்புகிறார்.

5) ஆடுமாடுகள் நிறுத்தப்பட வேண்டும்:

யாத்.10:24ல் “நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.” சாத்தானின் தந்திரம் தேவனுக்கென்று ஜனங்கள் கொடுப்பதைத் தடைசெய்ய வேண்டும். உன் செல்வம் ஆண்டவருக்குத் தேவை. கர்த்தருக்கு உன் பணம் தேவை, நீ தேவனுக்காக தாராளமாய், மனப்பூர்வமாய்க் கொடுக்கும் நபராக மாற வேண்டும். சபை இயங்க உன் பணம் தேவை. சாத்தான், தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்காக கொடுக்க விடமாட்டான். நாம் தடைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதை வாசிக்கும் அன்பு நண்பரே! நாம் சாத்தானின் தந்திரங்களை அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடையப் பிள்ளைகள் பெருக வேண்டும், பிசாசை எதிர்க்க வேண்டும், தேவனுக்காக புறப்பட்டுச் செல்ல வேண்டும். தேவனுடைய சபையில் குடும்பமாக, பிள்ளைகளோடு தேவனுக்காக மனப்பூர்வமாய்த் தம் செல்வங்களையும், பணங்களையும் தானாய்க் கொடுத்து ஆராதிக்க வேண்டும். தேவனுடைய சபை, பிசாசின் தந்திரங்களை மேற்கொள்ளும்படி போராடி ஜெபிக்கிறவர்களாய் மாற வேண்டும். மோசேயின் பெற்றோரைப் போல நம் பிள்ளைகளை விசுவாசத்தோடு தேவனுக்காக வளர்க்க வேண்டும்! அல்லேலூயா!!






Author

You May Also Like…

Share This