கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் தேவன் செய்த நன்மைகள் ஏராளம். பிசாசுக்கும் பாவத்துக்கும் அடிமைகளாக இருந்த நம்மை, அவரது மாசற்ற தூய இரத்தத்தால் கழுவி மீட்டாரே, அது மாபெரும் விடுதலை. ஜீவ காலமெல்லாம் மரண பயத்திலும் சாபத்திலும் வாழ்ந்த நம்மை தாழ்மையிலிருந்த நம்மை நினைத்து, மரண கண்ணிகளில் விழாமல் கரம் பிடித்து நடத்தி வருகிறாரே, அது அவரது அளவற்ற கிருபை! அதை மறக்க முடியுமா? ஆண்டவர் நம்மேல் வைத்த அன்பையும், பராமரிப்பையும் ஒவ்வொரு நாளும் நினைத்து அவரைப் போற்றி, துதித்து மகிழ்வது அல்லவா நம் கடமை? “அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த கர்த்தரை மறவாதபடி ஜாக்கிரதையாயிரு” என்கிறார் மோசே. மேலும் சங்.88:12ஆம் வசனத்தில், “இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?” என்று ஏமானின் போதக சங்கீதத்தில் பார்க்கிறோம். ஆனால் ஏமான் மறுமொழியாக “நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்” என்கிறார்.
தேவன் எப்படிப்பட்டவர் என்று பார்ப்போம்:
“தேவன் அநீதியுள்ளவர் அல்ல, அவர் நீதியுள்ளவரானபடியால் அவர் நம்மை மறப்பதில்லை.” அவர் உன்மேல் நினைவாயிருக்கிறார். அவர் நீதியுள்ளவரானபடியால் அவர் நம்மை விசாரிக்கிறார். எபி.6:10ஆம் வசனத்தில், “…உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே” தேவன் நம்மேல் கரிசனையுள்ளவர். ஆகவே நாம் அவரை மறக்காதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
தேவனை மறக்காமலிருக்க நாம் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று தியானிப்போம்.
*** முதலாவதாக – ஸ்தோத்திரபலியிட்டு, வழியைச் செவ்வைப்படுத்த வேண்டும்
சங்.50:22,23 வசனங்களில், “தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.” மேலும் ஏசாயா 17:10-12 வசனங்களில், “…உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், ….பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்”
*** இரண்டாவதாக – தேவனுடைய செயல்களை மறக்காமல் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்
சங்.78:5-8 வசனங்களில், “…தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். …இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடி…” இருக்க வேண்டும். தேவன்மேல் பிள்ளைகள் தங்கள் நம்பிக்கையை வைத்து தேவனுடைய செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு, போதிக்க வேண்டும். சங்.106:12ல், “அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
*** மூன்றாவதாக – தேவன் செய்த உபகாரங்களை மறக்காமல் நன்றியுடன் துதி செலுத்த வேண்டும்
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங்.103:2). தேவன் செய்த சகல நன்மைகளுக்காகவும் நன்றியுடன் துதிக்க வேண்டும். துரோகம் செய்யக்கூடாது. யூதாஸ் துரோகியாகிக் காட்டிக்கொடுத்ததுபோல நமக்கு நன்மை செய்து ஆதரித்து வரும் தேவனுக்கும், தேவனுடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றியின்மை கேடு, கொடிய பாவம், சாபத்தை நமக்குக் கொண்டுவரும்.
*** நான்காவதாக – வேதத்தை மறக்காமல் தேவனைப் பற்றிய அறிவில் வளரவேண்டும்
ஓசியா 4:6ஆம் வசனத்தில், ஆண்டவர் “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” என்கிறார். நாம் வேதத்தை மறந்தால் தேவன் நம் பிள்ளைகளை மறந்துவிடுவார். எனவே வேதத்தை நேசித்து, இரவு பகலும் அதை தியானித்துக் கடைபிடிக்க வேண்டும்.
*** ஐந்தாவது – எருசலேமை மறக்கக்கூடாது தேவனை ஆராதிக்கும் சபையை மறக்கக் கூடாது
சங்.137:5ஆம் வசனத்தில், “எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக” என்று சொல்லப் பட்டுள்ளது. தேவனுடைய சமூகத்தையும், ஆராதனையையும் நாம் விரும்ப வேண்டும். தேவனை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்.
*** ஆறாவதாக – போதகத்தை மறக்காமல் காத்து, அதன்படி நடக்க வேண்டும்
“என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதி.3:1). தேவனுடைய போதகத்தைக் காத்து நடந்தால் நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணுவார். தேவனுடைய சபையில் தேவன் போதகர்களை வைத்து போதிக்கிறார். ஆவியானவர் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளும்போது சகல சத்தியங்களுக்குள்ளும் போதித்து நடத்துகிறார். அவைகளை மறக்காமல் கைக்கொள்ள வேண்டும்.
*** ஏழாவதாக – தேவனுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்த மறவாமல் வாழ வேண்டும்
“அன்றியும் நன்மைசெய்யவும், தான தர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” (எபி.13:16). தேவன் நம்மை இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் அழைத்திருக்கிறார். எனவே ஆசாரியர்களைப்போல பலிச் செலுத்த வேண்டும். நன்மை செய்ய வேண்டும். தான தர்மமாகிய பலியைச் செலுத்த வேண்டும். ஸ்தோத்திர பலி கீழ்ப்படிதலாகிய பலி போன்ற பலிகளைச் செலுத்தி, தேவனை மகிமைப்படுத்தி வாழ வேண்டும்.
அன்பு நண்பரே! தேவனை அறிந்த ஜனங்கள் தேவனை மறக்காமல் தேவனை மகிமைப்படுத்தி வாழ வேண்டும். அப்படி வாழாவிட்டால் நியாயத்தீர்ப்புக்கு தப்ப முடியாது. துக்கமும், கடும் வேதனையும் அனுபவிக்க வேண்டும். தேவன் நம்மேல் அன்புள்ளவர், கரிசனையுள்ளவர். உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் உங்கள் அன்பின் பிரயாசங்களை மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் அல்லவே! அவர் நீதியுள்ள தேவன். எனவே தேவனை மறக்காமல் வாழுங்கள். அவரவர் செய்கைகளுக்குத் தக்க பலனை தேவன் நிறைவாய் உங்களுக்குத் தருவாராக! ஆமென்!




