கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேசத்தின் இரட்சிப்புக்காகவும், தேவ ஜனங்களின் உயிர் மீட்சிக்காகவும், நாம் தேவ சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும். தேவப் பிள்ளைகள் அவருடைய ஆலயத்தில் வந்து அவருடைய இரக்கத்திற்காக உபவாசித்து ஜெபிக்க வேண்டும். பெரிய கொடிய இராக்காலம் வரும் முன் தேவனுடைய பிள்ளைகள் விழித்து எழும்பி, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
ஆசாரியர்களே, இரட்டுடுத்தி புலம்புங்கள். பலிபீடத்தின் பணிவிடைக்காரரே அலறுங்கள். தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தியவர்களாய் இராத்தங்குங்கள் என்கிறார் யோவேல். யோவேல் 1:14 வசனத்தில் “பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச் செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்கிறார் யோவேல். கர்த்தரின் வருகையின் நாள் மிகவும் சமீபம். நாம் ஆயத்தப்படவேண்டும், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்.
நாம் எதற்காக உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்றுபார்ப்போம்:
1. வியாதியிலிருந்து சுகம் பெற உபவாசித்து ஜெபிக்க வேண்டும்:
சங்கீதம் 35:13 “அவர்கள் வியாதியாயிருந்த போது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;” என்கிறார் தாவீது. மற்றவர்கள் வியாதியாக இருக்கும் போது சுகம் கிடைக்க உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.
2. தேவனுடைய பிள்ளைகள் பக்தி வைராக்கியமாக வாழ உபவாசித்து ஜெபிக்க வேண்டும்:
சங்கீதம் 69:9,10 “உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என் மேல் விழுந்தது. என் ஆத்துமா வாடும் படி உபவாசித்து அழுதேன்;” என்கிறார் தாவீது. தேவனுடைய சபை, தேவ ஜனங்களைப் பற்றி பக்தி வைராக்கியத்தினால் நம்மையே ஒடுக்கி உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.
3. ஜீவியம் மீண்டும் புதுப்பிக்கப் பட உபவாசித்து ஜெபிக்க வேண்டும்:
1சாமு.7:6 வசனத்தில், “…மிஸ்பாவிலே கூடி வந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம் பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தோம்…” என்று சொன்னார்கள். சாமுவேல் ஜனங்களுக்கா ககர்த்தரிடம் மன்றாடும் படிக்கு இஸ்ரவேலரை மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்று கூறிய போது, ஜனங்கள் மீண்டும் தேவனுடன் நல்மனம் பொருந்தி தேவ அன்பு, தயவு, இரக்கம் பெற வேண்டினர். நாமும் தேவ ஜனங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட தேவனிடம் தாழ்த்தி உபவாசிக்க வேண்டும்.
4. சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் குற்றத்தினிமித்தம் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்
எஸ்றா 10:6 வசனத்தில், “…அவன் (எஸ்றா) சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான்” பாவத்தின் சிறை, தொல்லைகள் என்ற சிறை, வியாதி என்ற சிறை, கடன் என்ற சிறைமாறும்படி தேவ ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் ஜெபிக்க வேண்டும்.
ஏசாயா 1:5 வசனத்தைப் பார்க்கும் போது, “தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமு முள்ளது; அது சீழ்பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது” என்கிறார். சிந்தனை நமது வாழ்க்கையில் எப்படி இருக்கிறது உலகப் பிரகாரமாக உயர் வது என்ற உலக சிந்தை; 1 ரூபாய் லாட்டரி சீட்டைப் பெற்றால் எப்படி 1 லட்சம் கிடைக்கும்? எதை வாங்கினால் சீக்கிரம் வாழ்க்கைத் தரம்உயரும் என்றதவறான சிந்தை. ஆவியானவர் காணும் இக்கால சபையின் நிலை இது. இதற்காக உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.
5. தேவனுடைய வல்லமையைப் பெற உபவாசித்து ஜெபிக்கவேண்டும்:
லூக்கா 4:2 வசனத்தில், “நாற்பது நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்;” நாமும் இயேசு வைப்போல தேவனுடைய வல்லமையைப் பெறவும், தேவ ஊழியத்தை நிறைவேற்றவும் தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்க வேண்டும்.
6. தேவவழிநடத்துதலைப்பெறஉபவாசித்துஜெபிக்கவேண்டும்:
அப்போஸ்தலர் 13:2 வசனத்தில், “அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபா வையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார்” உபவாசித்து ஜெபித்து தேவ வழி நடத்துதலைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவ நடத்துதலுக்காக தேவ சமூகத்தில் காத்திருந்தால் தேவநடத்துதலைத் திட்டவட்டமாக அறிய முடியும்.
அப்போஸ்தலர் 14:23 வசனத்தில் “…அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம் பண்ணினார்கள்…” கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். ஊழிய வளர்ச்சிக்காக உபவாசிக்க வேண்டும். சபையில் தேவ சித்தம் செய்யும் ஊழியர்கள் ஏற்பட ஜெபிக்க வேண்டும்.
7. பிசாசின் கிரியைகளை அழிக்க உபவாசித்து ஜெபிக்க வேண்டும்:
மத்தேயு 17:21 வசனத்தில், இயேசு கிறிஸ்து “இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்” பிசாசின் கிரியைகளும், கட்டுகளும் நம் குடும்பத்திலிருந்து அழிக்கப்பட உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.
இதை வாசிக்கும் அன்புநண்பரே! நாமும் தேவனுடைய இரக்கத்தைப் பெறவும், வியாதிநேரங்களிலும் தேவனுடைய ஜனங்கள், சபையார் உயிர்ப்பிக்கப்பட உபவாசித்து ஜெபிப்போம். சிறையிருப்பிலிருந்தும், கட்டுகள், கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உபவாசித்து ஜெபிப்போம். சபைகளில் உலக சிந்தை, ஆடம்பரமாக செத்த நிலைமை மாற ஜெபிப்போம். தேவ வல்லமையை பெற்று ஊழியங்களில் பிரகாசிக்க ஜெபிப்போம்! தேவ வழி நடத்துதலுக்காக, ஊழிய வளர்ச்சி, ஊழியங்களில் அநேக சபைகள் உருவாக்கப்பட, ஊழியர்கள் எழும்பும் படியாகவும், பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும் படியும் பரிசுத்த உபவாச நாளை நியமித்து ஆலயப் பிரகாரங்களில் மன்றாடுவோம்.
யோவேல் 2:12-16 வசனங்களில் கூறப்பட்ட படி உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும் முழு இருதயத்தோடும் நாம் தேவனிடம் திரும்ப வேண்டும். இருதயத்தை கிழித்து தேவனிடம் திரும்ப வேண்டும். அப்பொழுதுகர்த்தர்தீங்குக்குமனஸ்தாபப்படுவார்… மீண்டும் ஆசீர்வாதத்தைத்தருவார். எனவே பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்! ஆமென். அல்லேலூயா!




