கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்

September 1, 2013

2002ஆம் ஆண்டு மே மாதம் என்னுடைய தகப்பனாரும் ஏலீம் மிஷனெரி இயக்கத்தின் ஸ்தாபகருமாகிய பாஸ்டர் D.தாமஸ் வாக்கர் அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்கள். அதைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தைத் தொடர்ந்து எப்படி நடத்தப்போகிறோம்? மாதாமாதம் “54 மிஷனெரிகளுக்கு” யார் சம்பளம் கொடுப்பார்கள் என்று வெகுவாய் கலங்கி நின்ற நேரம். ஒருபுறம் என்னுடைய தாயார் எனக்கு ஆதரவாக இருந்தாலும், நான் உலகப் பிரகாரமான வேலையும் செய்துகொண்டிருந்தபடியால் திகைத்துப் போயிருந்தேன். சில நேரம்… மாம்ச வைராக்கியத்தில் இந்த ஊழியத்தை ஆரம்பித்து விட்டோமா? என்ற சந்தேகமும் வர ஆரம்பித்தது.


இந்தச் சூழ்நிலையில் அண்ணன் A.M.ராஜசேகரன் அவர்கள் என்னை அதிகமாய் உற்சாகப்படுத்தி வந்தார்கள். மிஷனெரி ஊழியத்தை விரிவுப்படுத்த, பாஸ்டர் SJC. செல்வக்குமார் அவர்களைக் கொண்டு ஒரு சிறப்பான “மிஷனெரி தரிசனக் கூட்டத்தை” ஒழுங்கு செய்தார்கள். இந்தக் கூட்டங்களில் வட இந்திய மிஷனெரிகள் சிலரை அழைத்து, அவர்களின் அனுபவ சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும். இதன்மூலம் அநேகருக்கு “மிஷனெரி தரிசனம்” கிடைக்கும் என்று தீர்மானித்தோம்.


அந்நாட்களில், மிஷனெரி இயக்கத்தில், வேலைக்கு ஆட்கள் கிடையாது. எனவே நானும், ராஜசேகரன் அண்ணனும், மணி அண்ணனும் குழுவாக இணைந்து, துண்டு பிரதிகள் விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டுதல், விளம்பர தட்டிகள் கட்டுதல், சபைப் போதகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுதல், கூட்ட ஒழுங்குகளைக் கவனித்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் செய்து வந்தோம். எனக்கு “சாட்சி சொல்லும் மிஷனெரிகளை” ஒழுங்கு செய்யும் பொறுப்பு, கூடுதலாகக் கொடுக்கப்பட்டு இருந்தது. நானும் வெகுவாய்ப் பிரயாசப்பட்டு பல வட இந்திய திருச்சபைத் தலைவர்களைத் தொடர்புகொண்டு “மிஷனெரிகளை அனுப்பி” உதவி செய்யுமாறு கேட்டு வந்தேன்.


ஒரு போதகர் “3 மிஷனெரிகளை அனுப்புவதாக” உறுதி கூறினார். நானும் மிகவும் சந்தோஷப்பட்டு, அவருக்குப் பணம் அனுப்பி வைத்தேன். அவரும், மிஷனெரிகளை அனுப்புவதாகவும் பயணச் சீட்டுகள் வாங்கிவிட்டதாகவும் கூடக் கூறினார்.
பயண நாளும் வந்தது… நான் அந்தப் போதகரைத் தொடர்புகொண்டபோது, மிஷனெரிகள் ரயிலில் ஏறிவிட்டார்கள் என்று கூறினார். இரண்டு நாட்கள் கழித்து, மிஷனெரிகள் எவரும், மதுரைக்கு வந்து சேரவில்லை. எனவே நான் அந்தப் போதகரைத் தொடர்புகொண்டு, ஐயா! எவரும் வரவில்லையே? எந்த ரயிலில் ஏற்றி விட்டீர்கள் எனக் கேட்டேன். அவரோ கொஞ்சமும், கவலைப்படாமல் அவர்கள் மழை அதிகமாகப் பெய்ததால் திரும்பவும் போய்விட்டார்கள் என்று கூறினார். நான் மிகவும் அதிர்ந்து போய்விட்டேன். ஐயா, சுவரொட்டிகளில் எல்லாம் வட இந்திய மிஷனெரிகளின் அனுபவ சாட்சிகள் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதே, கூட்டத்துக்கு வரும் மக்கள் என்னிடம், மிஷனெரிகள் எங்கே? என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என்று கேட்டேன். அவரோ, அது உங்கள் பாடு என்று அலட்சியமாகக் கூறி, பின்பு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
அந்த நாள், பகல் முழுவதும் வேறு யாராவது வட இந்தியாவில் பணியாற்றி, தமிழகம் வந்துள்ள மிஷனெரிகள் கிடைப்பார்களா? எனத் தேடி அலைந்தேன். ஒருவர் இருந்தார், அவருக்கோ நம்மைப் போன்ற சிறிய இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை.
இரவும் வந்தது… விடிந்தால் “மிஷனெரி தரிசனக் கூட்டங்கள்” எப்படி மற்றவர்களைப் பார்ப்போம், என்ன பதில் சொல்வோம் என்ற கவலை என்னை வாட்டியது. ஊரை விட்டே ஓடிவிடலாமா? என்று கூட நினைக்கத் தூண்டியது.


இதற்கிடையில்… “இரவு 12 மணிக்கு” திடீரென என்னுடைய தொலைபேசி ஒலித்தது. அதில் ஒரு ராஜஸ்தான் மிஷனெரி பேசினார். அவரும், அவருடன் 3 நல்ல ஊழியர்களும், சென்னைக்கு ஒரு திருச்சபைக்கு வந்ததாகவும், அங்கே நமது ஊழியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், நான் விரும்பினால், அவர் மதுரை வரை வந்து, என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நான் உடனே அவரை வரும்படியாக அழைத்தேன். ராஜஸ்தான் போதகரும், 3 மிஷனெரிகளும் காலை 10.00 மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்துவிட்டனர். மாலைக் கூட்டமும் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கூட்டங்களும், மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. J.K.திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. அநேகர் மிஷனெரி தரிசனம் பெற்றுக்கொண்டனர். பாஸ்டர் செல்வக்குமார் அவர்களின் பிரசங்கமும் பாடல்களும் அநேகரை ஆவியில் அனலாக்கிற்று.


ராஜஸ்தான் மிஷனெரிகளின் அனுபவ சாட்சிகள் அநேகரை மிஷனெரி ஊழியத்தின் தரிசனத்தைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தது. அநேகர் மிஷனெரி ஊழியத்தை ஆதரிக்க முன் வந்தனர். சுருக்கமாகச் சொல்லப்போனால்… இந்தக் கூட்டங்கள் இந்த எளிய, ஆரம்ப ஊழியத்தை “வேர் கொள்ளச் செய்தது”.
சில நாட்கள் கழிந்தது. நம்மிடம் முன்பதாக மிஷனெரிகளை அனுப்பித் தருவதாக வாக்களித்த போதகர் தொடர்புகொண்டார். அவர் என்னிடம் “மிஷனெரி தரிசனக் கூட்டங்கள்” மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பெரிய ஏமாற்றுப் பேர்வழி, நீங்கள் என்னிடம் மிஷனெரிகளை அனுப்பச் சொல்லிவிட்டு, மற்றொரு போதகரிடமும் “அனுப்பச் சொல்லியிருக்கிறீர்கள்” நல்ல வேளை… தேவன் என்னைத் தடுத்துப்போட்டார்… இனியாவது உண்மையாக இருக்கப் பிரயாசப் படுங்கள் என்று பலவித அறிவுரைகளைக் கூறினார். நானும் அவரிடம், ஐயா அப்படியல்ல, “என் தேவன் என்னுடைய நிந்தையை நினைத்து தம்முடைய தாசர்களை அனுப்பினார்” என்று கூறினேன். அவரோ நம்ப மறுத்துவிட்டார்.


ஆண்டவர் எளியவர்களின் கூப்பிடுதலைக் கேட்டாலும், பெரியவர்கள் நம்ப மறுக்கிறார்கள். (அழைத்தவர் உண்மையுள்ளவர்… கடைசி வரை நடத்திடுவார்)
நான் உன்னோடே இருந்து,… நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை… (ஆதி.28:15).



Author

You May Also Like…

Share This