உனக்கு வாஞ்சை வேண்டும்

Written by Pr Thomas Walker

June 1, 2013

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

தேவன் தாம் படைத்த தன்னுடைய பிள்ளைகள் தன்மேல் வாஞ்சை உள்ளவர்களாய் வாழ வேண்டு மென்று விரும்புகிறார். தேவன் பேரில் எல்லா மனிதர்களை விடவும் அதிக பாசமும் பற்றும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். எப்படிப் பட்ட வாஞ்சை யென்றால்? மான்கள் நீரோடைகளை வாஞ்சிப்பது போல தேவன் பேரில் வாஞ்சை வேண்டும். சங்.42:1 வசனத்தில், “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்கிறார் தாவீது ராஜா. மேலும் சங்.26:8 வசனத்தில் கர்த்தாவே உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும் உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன் என்கிறார். மேலும் ஏசா.26:8 வசனத்தில் “கர்த்தாவே, உம்முடைய நியாயத் தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது” என்று ஏசாயா தீர்க்க தரிசி கூறுகிறார்.

தேவன் பேரில் வாஞ்சையாயிருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று  பார்ப்போம்.

1. அதிகாலையில் தேடுவார்கள்:

சங்கீதம் 63:1 வசனத்தில், “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” என்கிறார் தாவீது. மேலும், ஏசாயா 26:9 வசனத்தில், “என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக் கொள்வார்கள்” என்கிறார். ஏசாயா தீர்க்கதரிசி, ஆவியில் மட்டுமல்ல, ஆத்தும வாஞ்சையுடன் மாம்சமும் வாஞ்சிக்கிறது என்கிறார்.

2. வேதத்தின் மேல் வாஞ்சையாயிருப்பார்கள்:

சங்.119:20 வசனத்தில், “உமது நியாயங்கள் மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது” உமது நியாயங்கள் (வேதத்தின்) மேல் வாஞ்சையாயிருக்கிறேன் என்கிறார். மேலும் சங்.119:40,137 வசனங்களில், “இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.” மேலும் சங்.119:131 வசனத்தில், “உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்றுதிறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.” வேதத்தை வாசிக்கும் போது மட்டுமே எழுப்புதல் உண்டாகும். தேவனின் ஆசீர்வாதம் உண்டாகும். மேலும் 1பேதுரு 2:3 வசனத்தில், “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகியகளங்க மில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.” தேவன் மேல் வாஞ்சையாயிருப்பவர்கள், சிறு குழந்தைகளைப் போல வேத வசனத்தின் மேல் வாஞ்சையாயிருப்பார்கள்.

3. தேவ ஆலயத்தின் மேல் வாஞ்சையாயிருப்பார்கள்:

1நாளா.29:3 வசனத்தில், “இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின் மேல் நான் வைத்திருக்கிறவாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.” தாவீது தேவனுடைய ஆலயத்துக்காக கொடுத்தார், தேவனுடைய ஆலயத்தின்மேல் வாஞ்சையாயிருந்தார். சங்.26:8 வசனத்தில், “கர்த்தாவே, உமது ஆலயமாகியவாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்”

4. தேவனைகாண வேண்டுமென்கிற வாஞ்சையாயிருப்பார்கள்:

யோபு 19:25,26,27வசனத்தில், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்… இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது” யோபுவைப்போல தேவனைக் காண்பேன் என்ற வாஞ்சை இருக்க வேண்டும்.

5. பரமவாச ஸ்தலத்தை தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சை உள்ளவர்கள்:

2கொரி.5:2 வசனத்தில், “இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக் கொள்ளமிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்” என்கிறார்பவுல். இந்த கூடாரத்தை விட்டு மகிமையான கூடாரத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் வாஞ்சை வேண்டும்.

6. ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பார்கள்:

பிலி.1:8 வசனத்தில், “இயேசு கிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார் மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி” என்கிறார் பவுல். மேலும் 1தெச.2:8 வசனத்தில், “நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” என்கிறார் பவுல். ஆத்துமாக்களின் மேல் உள்ள வாஞ்சை நம்மை முழுவதும் தேவனுக்கு அர்ப்பணிக்க ச்செய்கிறது. ஆத்தும ஆதாயப்பணிக்காக நம்மை முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும்.

7. என் சரீரத்தின் மூலம் தேவன் மகிமைப்படுவார் என்ற வாஞ்சையுள்ளவர்களாயிருப்பார்கள்:

பிலி.1:20 வசனத்தில், “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும்தக்கதாய், அப்படி முடியும்” என்கிறார் பவுல். நம் ஒவ்வொருவருடைய சரீரத்தின் மூலமாக தேவன் மகிமைப்பட வேண்டும் என்ற வாஞ்சை வேண்டும். கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட நாம், ஆவியினாலும், சரீரத்தினாலும் தேவனை மகிமைப் படுத்த வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு வேண்டும்.

இதை வாசிக்கும் அன்புநேயரே!

 தேவன் பேரில் வாஞ்சையாய் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஆராய்ந்து பார்த்தோம். தேவன் மேல் வாஞ்சையாயிருந்தால் அதிகாலையில் தேடுவார்கள். தேவனுடைய வேதத்தின் மேல் வாஞ்சையாயிருப்பார்கள். தேவனுடைய ஆலயத்தின் மேல் வாஞ்சையாயிருப்பார்கள். தேவனுக்காக கொடுப்பார்கள். தேவனைக் காண வேண்டும் என்ற வாஞ்சையுடன் இருப்பார்கள். பரமவாசஸ் தலத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கையினால் உண்டான வாஞ்சையுடன் இருப்பார்கள். ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையாயிருப்பார்கள். மேலும் தன் சரீரத்தின் மூலமாக தேவன் மகிமைப்படுவார் என்ற வாஞ்சையுள்ளவர்களாயிருப்பார்கள். தேவன் நம்மை பவுலைப் போலவும், தாவீதைப் போலவும், யோபு பக்தனைப் போலவும் அவரைப் பற்றிய வாஞ்சையால் நிரப்பி, நம்மை அநேக ஆயிரங்களை தேவன் பக்கம் திருப்ப பயன்படுத்துவாராக! அல்லேலூயா!!






Author

You May Also Like…

Share This