நமது இயக்கத்தில், மிஷனரி இயக்க ஆதரவாளர்களிடம் பணம் சேகரிக்கும் பணிக்கு ஒரு சகோதரன் புதிதாக சேர்ந்திருந்தார். அவர் ஒரு கடின உழைப்பாளி. உலகப்பிரகாரமான வேலைகளை பல்லாண்டு காலமாக செய்து வந்தாலும், ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆவலில், நமது இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். அவர் வேலைக்கு அஞ்சுபவர் அல்ல. ஆனால் அவருக்கு, தான் செய்யும் “இந்தப் பணியும்” கர்த்தருடைய ஊழியம்தானா? என்றக் கவலை அவருடைய முகத்தில் காணப்பட்டது.
நான் அவரைச் சந்தித்தபோது, அவருடைய ஐயப்பாட்டை போக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். நான் அந்த சகோதரனை அழைத்து… தம்பி, வீடு வீடாக பணம் சேகரிக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்களே! இதுவும் ஊழியம்தானா? பிரசங்கம் செய்வதும், சபையில் மேடையில் நின்று பாட்டுப் பாடுவதும் தானே ஊழியம் என நினைத்திருந்தேன் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு, என்னை உற்சாகப்படுத்திய ஒரு வேதப்பகுதியை விவரித்துக் காட்டுகிறேன். அது உங்களை உற்சாகப்படுத்தும் எனக் கூறி, இவ்வாறாக ஒரு வேதப் பகுதியை விவரித்துக் காட்டினேன்.
ரோமருக்கு அப்.பவுல் எழுதிய நிருபம் 10ஆம் அதிகாரம் 13 முதல் 15 வசனங்களில் “5 விதமான” ஊழியப் பகுதியைப் பார்க்கிறோம்.
1) அனுப்பாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?
2) பிரசங்கியாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?
3) கேள்விப்படாவிட்டால் எப்படி விசுவாசிப்பார்கள்?
4) விசுவாசியாவிட்டால் எப்படி தொழுதுகொள்வார்கள்?
5) தொழுதுகொள்ளாவிட்டால் எப்படி இரட்சிக்கப்படுவார்கள்?
இந்த தேசத்தில் “98 சதவீத” மக்கள் இன்னும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. 80 சதவீத மக்களுக்கு பிரசங்கிக்க, ஊழியரோ, திருச்சபை அமைப்போ இல்லவே இல்லை. ஏனென்றால் ஒரு ஊழியரை, பிரதிஷ்டை செய்து, ஊழியம் செய்யும்படி இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களுக்கும் அனுப்ப ஆட்கள் இல்லை. அனுப்ப விரும்பும் மிஷனரி இயக்கங்களுக்கு ஆதரவும் குறைவாகவே உள்ளது.
தேவன் நம்மை “அனுப்பும் வேலையில்” வைத்திருக்கிறார். நாம், நம்முடைய பணியை, உண்மையாய்ச் செய்யும்போது, அநேக ஊழியர்கள் அனுப்பப்பட முடியும், அவர்கள் பிரசங்கிக்கும்போது, அந்த கிராம மக்கள் இயேசுவைக் கேள்விப்பட முடியும். கேள்விப்பட்டவர்கள் இயேசுவை விசுவாசிக்க ஆரம்பிப்பார்கள். விசுவாசிப்பவர்கள் நாம் அவர்களுக்காக கட்டிக்கொண்டிருக்கும் எளிய “ரூபாய் 15,000/-” ஆலயத்தில் கூடி, ஆண்டவரைத் தொழுதுகொள்ள ஆரம்பிப்பார்கள். தொழுதுகொள்பவர்கள் இரட்சிக்கப்பட்டு, ஒரு நாளில், ஆண்டவரோடு மகிமையில் சீயோனில் காணப்படுவார்கள்.
ஒருவேளை பணத்தை சேகரிக்கும் நீயோ, பணத்தைக் கொடுக்கும் “ஒரு ஊழியப் பங்காளரோ” இந்த மகத்தான “சமுதாய மறுமலர்ச்சியை” அங்கே நேராகப் போய் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், “நாம் பரலோகம் செல்லும்போது, நாம் அறியாத ஜனங்கள் அநேகர் வந்து, நமக்கு வந்தனம் செய்து, “ஐயா உங்கள் முயற்சியால்தான் நாங்கள் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டோம், விசுவாசித்தோம், நீங்கள் கட்டிக் கொடுத்த எளிய ஆலயங்களில் தொழுதுகொண்டோம்… இன்று இரட்சிக்கப்பட்டு, தேவ சந்நிதியில், இயேசுவோடு யுகாயுகமாய், நித்திய மகிழ்ச்சியோடு வாழும் வாய்ப்பைக் கொடுத்துவிட்டீர்கள்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று சொல்லுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நமதாண்டவர், “நல்லது, உண்மையும், உத்தமமுள்ள ஊழியக்காரனே, என்னுடைய சந்தோஷத்தில் களிகூரு” எனக்கூறி நம்மை, தம்முடைய நித்திய வீட்டிலே ஏற்றுக்கொள்வார்.
இனிவரும், இப்படிப்பட்ட நித்திய மகிமையை எண்ணிப் பார்க்கும்போது, நாம் அடையும் சிறு பாடுகள், அவமானங்கள், அலட்சியங்கள், அவதூறுகள் எல்லாம் கண்டிப்பாக ஒன்றுமேயில்லை. மேலும் “ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், பிதா அவனைக் கனம்பண்ணுவார்” என நமதாண்டவர் கூறியிருக்கிறார். எனவே உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் பிதாவினால் உண்டாகும் கனமும், ஆசீர்வாதமும் நிறைவாய் கிடைக்கும். கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாக வெளிப்படும் எனக் கூறி அந்த சகோதரனை உற்சாகப்படுத்தினேன்.
அந்த சகோதரனும் உற்சாகமாய்க் கடந்துபோனார். இந்த செய்தி, நம் அனைவருக்குமே பிரயோஜனமாக இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். நாம் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும், ஆண்டவருக்கு அர்ப்பணித்து, இந்த மகத்தான பணியில் பங்குபெறுவோம். நமது தலைமுறையில், நமது தேசம் இயேசுவை அறியட்டும். அதிலே நம் பங்கு நிறைவாய் இருக்கட்டும்.
மாரநாதா இயேசு சீக்கிரம் வருகிறார்