ஆயக்காரர் நீதியிலும் மேலான நீதி

2011ஆம் ஆண்டு தொழில் வர்த்தகம் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்பி, ACS என்ற படிப்பில் சேர்ந்தேன். தினமும் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையும், பின்பு மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரையும் வகுப்புகள் நடக்கும். இதற்கிடையில் அலுவலகமும் செல்ல வேண்டும்.


அநேக கல்லூரி மாணவர்கள் காலை 4.30 மணிக்கே தங்கள் வீடுகளிலிருந்து அந்த வகுப்புகளில் புறப்பட்டு காலை வகுப்புகளை முடித்து அங்கிருந்து நேராக கல்லூரிக்குச் சென்று பிறகு மீண்டும் மாலை வகுப்புகளிலும் கலந்துகொண்டு பின்பு வீட்டிற்கு இரவு 11.00 மணிக்கு மேலாகத் திரும்புவது வழக்கம். இதில் அநேக இளம் பெண்களும் வருவது உண்டு. அந்த வகுப்புகளில் விடுப்புகள் அதிகம் எடுக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் தேர்வுகள் நடத்தி, மாணவர்களை இறுதித் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துவார்கள். தேர்ச்சி விகிதம் 10% கூட இருப்பதில்லை.


எனக்கு வணிகவியல் பின்னணியம் இல்லாதபோதிலும் பெருமுயற்சி எடுத்து, அந்த இளம் மாணவர்களுடன் பயின்று வந்தேன். அந்தப் பயிலகத்தில் வருமான வரியைப் பற்றி வகுப்புகள் நடத்த ஒரு “CA” படித்த, மிக்க அறிவாளியான ஒருவர் வருவது வழக்கம். மிகவும் கண்டிப்பானவர். 1500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு குறிப்புகளையும், புத்தகத்தை திறக்காமலேயே துல்லியமாக நடத்துவதில் வல்லவர். வயது சுமார் 45 இருக்கும். CA முடித்து பல ஆண்டுகள் ஆனாலும், ஒரு பழைய இரு சக்கர வாகனத்தில்தான் வருவார். எனக்கு ஒரு பெரிய கேள்வி? நான் அவரிடம்… சார், நீங்க ஏதாவது கம்பெனியில வேலை பார்க்கிறீர்களா? எனக் கேட்டேன்.
உடனே அவர், சார் நான் சில கம்பெனிகளில் வேலைக்குப் போனேன். அவர் என்னை “பொய் கணக்கு” எழுதச் சொல்லுகிறார்கள். அதை என் “மனசாட்சி” ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிய மனிதர்களுக்கு நிறுவனங்களுக்கு ஆலோசகராக சென்றாலும், எப்படி வரி ஏய்ப்பு செய்யலாம் என என்னிடம் ஆலோசனைக் கேட்கிறார்கள். அவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செய்வதும், ஆலோசனை சொல்வதும் தொழில் தர்மம் அல்ல. மேலும் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். எனவே நான் இதைப்போன்ற “வகுப்புகளை” நடத்தி, அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றார். மேலும்….
நான் இங்கு காலை வகுப்புகள் நடத்தினால் ரூ.300/- கொடுப்பார்கள். இவ்வாறாக பல இடங்களில் வகுப்புகள் நடத்தி, கிடைக்கும் பணத்தை, ஒவ்வொரு நாளும் சரியாக கணக்கு எழுதி, “வருமான வரியையும்” கட்டி வருகிறேன் என்றார். கிடைப்பதே குறைவு அதிலும் நேர்மையாக வரியைக் கட்டினால், “சுபிட்சமாக வாழவே முடியாது” என்று சூழ்நிலை…. இதன் மத்தியில் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.


அவருக்கோ… வேதத்தில் “உண்மையைப் பற்றி” நமதாண்டவர் கூறிய பொன் மொழிகள் எதுவும் தெரியாது. ஆனாலும் உண்மையாக இருந்து துன்பப்படுகிறார். “உண்மையும் உத்தமமும் உள்ள ஊழியக்காரனே” எஜமானனின் சந்தோஷத்தில் பிரவேசிக்க முடியும்” என்பதுகூடத் துளியளவும் தெரியாது. ஏன்… எஜமானனே யார் என்றுகூடத் தெரியாது, ஆனால் உண்மையாக இருக்கிறார். ஆனால் அறிந்தவர் அநேகரோ… அதிக ஆக்கினையை அடையும்படி, இராயனுடையதை இராயனுக்குக் கொடுக்காமல், மனசாட்சியில் சூடுண்ட பொய்யராய் அலைகிறார்கள். அவர்கள் அடித்ததில் கொஞ்சம் ஆண்டவருக்குக் கொடுத்து விட்டால் போதும். “கொன்றால் பாவம் தின்றால் போச்சு” என்பதுபோல… நடந்து கொள்கிறார்கள்.


நம்முடைய மனசாட்சியே கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அற்ப ஆசைக்காக, அழிந்துபோகும் பொருளுக்காக, பந்தயப் பொருளை இழந்துபோகாமல் காத்துக்கொள்வோம். கர்த்தர் நம்மைப் பார்த்து, நல்லது! (…உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி…) (மத்.25:23) என்று சொல்லி நம்மை சேர்த்து பரவசமும் கொள்வார்.



Author

You May Also Like…

Share This