இயேசு எனக்குச் சொந்தக்காரர் தான்

1981ஆம் ஆண்டு, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என்னுடையத் தகப்பனார். தான் ரயில்வேயில் செய்து வந்த பணியினை விட்டுவிட்டு, முழு நேர ஊழியராக, மதுரைக்கு வெளிப்புறத்திலிருந்து கூடல்நகர் என்ற பகுதியில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார்கள்.
அப்பகுதியில் என்னுடைய தகப்பனார் ஏற்கனவே ஆண்டவர் தனக்கு அளித்திருந்த தரிசனத்தின்படி, ஆலயம் கட்ட ஒரு இடம் வாங்கி வைத்திருந்தார்கள். கட்டிடம் கட்ட, பணம் தேவைப்படவே, மதுரைப் பட்டணத்திலிருந்து எங்கள் வீட்டை விற்றுவிட்டு, கூடல்நகருக்கு குடிபெயர வேண்டிய சூழ்நிலை வந்தது.
நான் சிறுவனாயிருந்தாலும், ஆலயக் கட்டுமானப் பணியில் மணல், செங்கல் போன்றவற்றை சுமத்தல், கொத்தனாருக்கு உதவியாக பணியாற்றுதல், மேலும் இரவு நேரத்தில் மணல், ஜல்லி, மரம் போன்றவற்றிற்கு காவல்காரனாய் இருத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தேன். இதற்கிடையில், தினந்தோறும் பள்ளிக்காக, மதுரைக்குச் செல்ல வேண்டும்.
கட்டிடப்பணி வளர்ந்துவரும் போது, தச்சு வேலை ஆரம்பமானது. கதவு, சன்னல்களை மர ஆசாரி ஒருவர் செய்துவந்தார். நான் அவருக்கு உதவி செய்வது வழக்கம். அந்நாட்களில், நான் புதிதாக இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்த சமயம். மற்றவர்களையும் இயேசுவின் பிள்ளைகளாக மாற்ற வேண்டுமென்ற ஆவலும், உத்வேகமும் புரண்டோடிய நேரம்….


இவ்வாறாக, அந்த ஆசாரி, சன்னல் செய்ய, மரத்தை இழைத்துக்கொண்டிருக்கும்போது, நான் அவரிடம், “இயேசுவே மெய்யான ஆண்டவர் என நீங்கள் அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தேன்.


அவரோ உடனடியாக “சரி, எனக்கும் இயேசு சுவாமிதான் ரொம்ப பிடிக்கும், ஏனென்றால் அவர் எங்களுக்குச் சொந்தக்காரர்தான்” எனக் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டுவிட்டேன். மேலும் நான் அவரிடம் “நீங்கள் எப்படி இயேசு சுவாமியை” சொந்தக்காரர் என்று கூறுகிறீர்கள். அவரோ ஒரு யூதர். நீங்களோ தமிழர் எனக் கேட்டேன். அதற்கு அவர் சற்றும் சளைக்காமல், யூதர் என்றோ தமிழர் என்றோ ஒன்றும் கிடையாது. அவர் ஒரு “மர ஆசாரி, நாங்களும் மர ஆசாரி” எனவே அவர் எங்களுக்கு நெருங்கிய உறவினர்தான் எனப் பெருமிதமாகக் கூறினார்.
அவரைப் பொருத்தவரை அவர் என்னைவிட இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே அவருக்கு நான் சொல்லும் “இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்” அனுபவத்தில் நாட்டமில்லை.
இதைப் போலத்தான் இன்று பலரும் இயேசுவின் பிள்ளையாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். கிறிஸ்தவப் பெயரை வைப்பதிலோ, கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதிலோ, அலங்கார விளக்குகள் அமைத்து ஆர்ப்பரிப்பதிலோ, ஆயிரமாயிரம் வண்ண விளக்குகளை எரியவிட்டு அழகு பார்ப்பதிலோ, புனித யாத்திரைகள் செல்வதிலோ, இயேசுவைப் பிரியப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இவர்கள் ஆண்டவரின் கட்டளையை முழுமையாய் அறியாதவர்கள். மேலும் ஆண்டவரை சந்தோஷப்படுத்த சற்றும் தெரியாதவர்கள் என்றே கூற முடியும்.


நமதாண்டவர், உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் அறிவியுங்கள் எனக் கட்டளையிட்டார். நம்முடைய செயல்பாடுகளும், நம்முடைய தாலந்துகளும், திறமைகளும், பணமும் இந்த பிரதானக் கட்டளையை நிறைவேற்ற எத்தனை சதவீதம் பயன்படுகிறது என்பதைப் பொருத்தே நாம் புத்தியுள்ள ஊழியக்காரனா? இல்லை புத்தியில்லாத ஊழியக்காரனா? என்பது புலனாகும்.புத்தியுள்ள ஊழியக்காரனாய், நம்முடைய எஜமான், நம்மை நோக்கி, “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்” (மத்.25:21) என்று மெச்சிக்கொள்ளும் பாக்கியம் பெறுவோம்.


ஆண்டவர் நமக்களித்த ஒவ்வொரு பணத்தையும், திறமைகளையும், தாலந்துகளையும் வீணாக்காமல், தேவராஜ்ய மகிமைக்காக, சுவிசேஷ பிரபல்யத்திற்காகச் செலவு செய்வோம். ஆண்டவர் நம்மில் மகிழட்டும்.



Author

You May Also Like…

Share This