காணட்டும் மனுஷர் உங்கள் நற்கிரியைகளை

2013ஆம் ஆண்டிலே நாம் CSBS எனும் சிறுவர் ஊழியம் ஆரம்பித்து, இயேசுவைப் பற்றி, இதுவரை ஒருமுறைக் கூட கேள்விப்பட்டிராத, ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று சிறுவர், சிறுமிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்ற ஆவலில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பயிற்சி கொடுத்து, 2000 கிராமங்களுக்கு அவர்களை அனுப்ப பிரயாசப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது….


“1 லட்சம் புத்தகங்கள்” குறைந்தது 10,000 வர்ணம் தீட்டும் பென்சில் பெட்டிகள் ஒவ்வொருவருக்கும் தினமும் கையளவு சுண்டல் எனத் தேவைகளை பட்டியலிட்டு, தேவைகளுக்குத் தேவனை மாத்திரம் சார்ந்து, களத்தில் இறங்கியபோது, நமது ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் காட்டிய உற்சாகமும், உத்வேகமும் “சமாரியா ஸ்திரீக்கு” இருந்த ஆர்வத்தைப் போலிருந்தது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த இளம் ஊழியர்களும், வாலிபத் தங்கை, தம்பியர் அனைவரும், “3 மாதங்கள்” இடைவிடாது உழைத்து 97,000 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பினைக் காட்டி, சரித்திர நிகழ்வினை நடத்திக் காட்டினர்.


இந்த “சரித்திர வீரர்களுக்கு” ஊக்கத் தொகையாக, ரூ.500 கொடுக்கக்கூட இயலாத சூழ்நிலை நம் இயக்கத்திற்கு, மேலும் அவர்கள் ஆண்டவருக்காக செய்த அன்பின் பிரயாசத்தை, சிறிதளவு ஊக்கத் தொகையால், கொச்சைப் படுத்தவும் நான் விரும்பவில்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய மனைவி, என்னுடைய இளைய மகளை (வயது 9) “800 புறாவின் வர்ண ஓவியங்களை காகித அட்டையில் வரையவும்”மூத்த மகளை (வயது 14) “50 கண்ணாடி ஓவியங்கள் வரையவும்” உற்சாகப்படுத்தி, பயிற்சி கொடுத்து, செய்துமுடிக்க உதவி செய்தார்கள்.


இதற்கிடையில், கலர் பென்சில், புத்தகங்கள் போன்றத் தேவைகளை சமாளிக்க, விசுவாச நண்பர்களிடம், இந்த “CSBS திட்டங்கள்” பற்றிக் கூறி அவர்கள் கொடுக்கும் நன்கொடைகளைக் கொண்டு இவ்வித தேவைகளைச் சந்திக்க, பயன்படுத்த திட்டமிட்டோம். மேலும், நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கும், CSBS தன்னார்வ ஆசிரியர்களுக்காக, ஆயத்தப்படுத்தப்பட்ட “புறாவின் வர்ண ஓவியங்களையே” கொடுக்கவும் விரும்பினோம்.நமது அலுவலக ஊழியர்கள் அயராது உழைத்து “வர்ண ஓவியங்களை” பலருக்கு பரிசாக அளித்து, பணம் சேகரித்து வந்தனர். இதற்கிடையில், ஒரு சகோதரன் சில “ஓவியங்களை” எடுத்துக்கொண்டுபோய் தன்னுடைய சபையின் போதகருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அவரும் மிக்க மகிழ்ச்சியாய் பெற்றுக்கொண்டு “9 வயது சிறுமி” வரைந்த ஓவியமா இது என ஆச்சரியப்பட்டிருக்கிறார்.


இதைக் கண்ட, நமது சகோதரருக்கு ஒரு அருமையான யோசனை உதித்தது. அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, அண்ணன், ஒரு படத்தை உங்கள் மகள் வரைய எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். நான் அவரிடம், 20 – 30 நிமிடங்கள் ஆகும். அவள் தினந்தோறும் 6 – 8 மணி நேரங்கள் வரைந்தால் 20 படங்கள் வரை வரையக்கூடும் எனப் பதிலளித்தேன்.இதைக் கேட்ட அவர் மிகவும் உற்சாகமாக, அண்ணன், உங்கள் மகளை சற்று வேகமாக, அதிக நேரம் வரைந்து, எப்படியாவது இந்த வார இறுதிக்குள் “300 படங்கள் வரைந்து” எனக்கு அனுப்பச் சொல்லுங்கள் என மிக்க உருக்கமாகக் கேட்டார்.நானும் ஆர்வத்தின் மிகுதியால், அண்ணன் “300” படங்கள் விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும், CSBS வேதாகமப் பள்ளிகளில் பிள்ளைகள் ஆர்வமாய் வந்து பங்கேற்கின்றனர். அவர்களுக்கு புத்தகங்கள், கலர் பென்சில்கள் வாங்க அதிகமாக பணம் தேவைப்படுகிறது எனக் குழந்தையைப் போல அவரிடம் மன்றாடி நின்றேன்.


அவரோ என்னிடம், இந்தப் படங்களை நான் விற்பதற்காகக் கேட்கவில்லை, நான் போகும் சபையிலுள்ள அனைவருக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கும்படி விரும்புகிறேன். ஊழியத்திற்கு தேவையான பணத்தை கர்த்தர் பார்த்துக்கொள்வார். நீங்கள் எதற்கும் கலங்காமல் உங்கள் மகளை உற்சாகப்படுத்தி, துரிதமாக “300” ஓவியங்களை எனக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்கள் என்றார்.


நான் மேலும் அவரிடம் உங்கள் சபையிலுள்ள அனைவருக்கும் இந்த “வர்ண ஓவியங்களை” கொடுப்பதினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என வினவினேன். உடனே அவர் மிகவும் உள்ளம் நெகிழ்ந்து, “அண்ணன், எனக்கு ரொம்ப நாளா, எங்க சபையில் ஒரு பாட்டாவது பாடி, ஆண்டவரை மகிமைப்படுத்தனும்னு ஒரு ஆசை” பாஸ்டரிடம் எப்படி அனுமதி வாங்குவதுன்னு கொஞ்சமும் தெரியல. நான் உங்க மகள் வரைஞ்ச ஓவியத்த அவரிடம் காட்டியபோது, அவர் முகம் மலர்ந்ததை பார்த்தவுடன், ஆவியானவர் எனக்கு இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்த கொடுத்துட்டாரு.அண்ணே, தயவுசெய்து எப்படியாவது, உங்க மகளிடம் சொல்லி “300 ஓவியங்களை” அனுப்பச் சொல்லுங்க, நான் எப்படியாவது வாழ்நாளிலே எங்க சபையில் ஒரு பாட்டாவது பாடினேன்னு ஒரு மனநிறைவு பெறனும்னு, ரொம்பவும் உருக்கமாய் கெஞ்சினாரு.


என்ன செய்ய முடியும்? யாரிடம் போய் அழுவது? “உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் உரையுங்கள்” என ஆண்டவரே கட்டளை கொடுத்தாலும், அவனவனுக்கு எப்பாடு பட்டாகிலும், வாழ்நாளில், ஒரு பாட்டாவது பாடிக்காட்டனும், எல்லோரும் போற்றனும், குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக்கொண்டு, சொந்த ஊரிலே தன்னைச் சீமானாகக் காட்டிக்கொள்ள வேண்டும். மேலும் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டியாகிலும் தன்னுடைய பெயரை நிலைநாட்ட வேண்டுமென்ற காட்டு வெறி, மடை திறந்த காட்டாற்று வெள்ளம்போல பெருகி, பரவி வருவதைக் காண்கிறோம்.
இப்படிப்பட்ட கடைசி நாட்களில், உலகமெங்கும்போய் ஆண்டவருக்காக “குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிக்க” ஆட்கள் தேவை. நான் அல்ல அவரே எல்லாம் என்ற அர்ப்பணிப்போடு, மெழுகுவர்த்தியாக கரைந்திட ஆட்கள் தேவை. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமென்ற வாஞ்சையோடு, வாழ்வின் உச்சிதமான எல்லாவற்றையும், ஆண்டவரின் பாதத்தில் ஊற்றிட ஆட்கள் தேவை.


“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” மத்.5:16



Author

You May Also Like…

Share This