2006ஆம் ஆண்டில், ஒருநாள் நான், என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்போது, மும்பையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதிலே பேசிய நபர், இம்மானுவேலுடன் பேச முடியுமா? என பணிவாகக் கேட்டார். நான் அவரிடம், நான் தான் பேசுகிறேன், தங்கள் பெயரென்ன? எனக் கேட்டேன். அவர் என்னிடம் “அஸ்வின்தானி” எனக் கூறினார். அவர் இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் கம்பெனியின் உரிமையாளர். இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரரில் ஒருவர், ரூ.20,000 கோடி மதிப்புள்ள கம்பெனிகளை நிர்வகிப்பவர். ரூ,13,000 கோடி தனிநபர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 56ஆவது பணக்காரராக இருப்பவர். பெயிண்ட் தயாரிப்பு பற்றி அமெரிக்காவில், உயர் கல்வி பயின்றவர். உலக அரங்கிலே பிரசித்தி பெற்றவர்.
நான் உடனே, “சார் என்ன விசயமாக அழைத்தீர்கள்?” என வினவினேன். அவர் என்னிடம் “என்னுடைய தகப்பனார் திரு.சூரியகாரத் அவர்கள் பெயிண்ட் பிரஷ் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை வைத்திருந்தார். மூலப்பொருட்கள் வாங்குவதில், அநேக பிரச்சனைகள் இருக்கவே நான் அதை மூடிவிட்டேன். ஆனாலும் அவர், மரிக்கும்முன், மீண்டுமாக அந்த தொழிற்சாலையை ஆரம்பிக்கும்படி என்னிடம் கூறினார். எனவே, நான் அமெரிக்கா சென்று, உங்கள் தலைமை அலுவலகத்தில் விசாரித்தேன். அவர்கள் உங்களை தொடர்புகொள்ளக் கூறினார்கள். நான் எப்பொழுது வந்து உங்களைப் பார்க்கட்டும் எனக் கேட்டார்.
நான் அவரிடம், சார் நீங்கள் மிகப்பெரிய மனிதர், எனவே நீங்கள் வரவேண்டாம். நானே வருகிறேன் எனக் கூறி, அடுத்த நாளே மும்பை சென்றடைந்தேன். மும்பை விமான நிலையத்தில் வரவேற்கும்படி, அவர் தன்னுடைய மகனையே அனுப்பியிருந்தார். அவர் பல ஆண்டுகளாக, அமெரிக்காவிலுள்ள G.E.நிறுவனத்தில், அதின் உலகப் புகழ்பெற்ற அதிபர் “ஜக் வெல்ச்” அவர்களிடம் நேரடியாக பணியாற்றி விட்டு, சில மாதங்கள் முன்பாகத் தான் இந்தியா திரும்பியிருந்தார். மேலும் ஒரு பெரிய “விமான சேவை” நிறுவனத்தின் உரிமையாளர் மகளை திருமணமும் செய்திருந்தார். அவர் தன்னுடைய காரில், என்னை ஏற்றிக்கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார்.அங்கே திரு.அஸ்வின் தானி அவர்கள், எனக்கு, தன்னுடைய மனைவி, மருமகள், மற்றுமொரு மகனின் குடும்பம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். அவரது மனைவி தன்னுடைய கையால் உணவு சமைத்து பரிமாறவும் செய்தார்கள். அவர்கள் குடும்பத்துடன் உணவு உட்கொள்ளும் வாய்ப்பும், அவர்களுடைய பண்பாட்டைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.
உணவிற்குப் பின்பாக, அவர் என்னிடம், “தனக்கு குஜராத்திலுள்ள அவருடைய சொந்த ஊரிலே” ஒரு பெரிய பெயிண்டிங் பிரஷ் கம்பெனி” ஆரம்பித்து, உலகமெங்கும் தன்னுடைய தகப்பனார் பெயரில் “பெயிண்ட் பிரஷ்களை” விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருப்பதாகவும், இதற்காகத்தான் அவர் தன்னுடைய “3ஆவது மகனை” அமெரிக்காவிலிருந்து, இந்தியா வரவழைத்ததாகவும், நான் அவருடைய மகனுடன் இணைந்து, இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும், மிகவும் பணிவாகக் கேட்டுக்கொண்டார்.
அவருக்கு மிகுந்த அதிகாரம் பலமும், பண பலமும் இருந்தாலும், அவர் தன்னுடைய ஒரு சிறிய விருப்பம் நிறைவேற, அவர் எவ்வளவு பணிவாக நடந்துகொண்டார் என்பதைக் கண்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதைத் தொடர்ந்து, அவருடைய மகனும், மருமகளும், மதுரையிலுள்ள என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். நன்றாகப் பழகினார்கள். அவர்களுடைய நட்பிலிருந்து, எனக்கு ஒரு காரியம் நன்றாகப் புரிந்தது.
“கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” (சங்.138:6).
கர்த்தரை நமக்கு சமீபத்தில் வைப்பதும், தூரத்தில் வைப்பதும், நம்முடைய மனத்தாழ்மையை பொறுத்தே அமைகிறது. கிறிஸ்துவின் மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்வோம்! மேன்மையடைவோம்!!