சில மாதங்களுக்கு முன்பாக, என்னுடைய அலுவலக வாடிக்கையாளர்களில் ஒருவர், கொழும்பிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய மகனும், மருமகளும், மருமகளின் தாயாரும் சென்னை வருவதாகவும், அவர்களை ஞாயிறு காலை ஆராதனைக்கு, அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நானும் அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டேன். அவர் ஒரு சிங்களவர்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. புதுமணத் தம்பதிகளும், பெண்ணின் தாயாரும் சென்னைக்கு வந்து “ஒரு வீட்டில்” தங்கியிருந்தனர். அந்த தாயார், என்னை தொலைபேசியில் அழைத்து, தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் விலாசத்தைக் கூறினார்கள். விலாசத்தைக் கேட்டவுடன் எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் “அவர்கள் விலாசம் கூறிய இடங்களில், மிகப்பெரிய கோடீஸ்வரர் மட்டுமே” வசிக்க முடியும். இவர்களோ சாதாரணமாக கம்பெனிகளில் வேலை செய்பவர்கள். குறிப்பாக, இந்த தாயார் கொழும்பிலுள்ள, ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில், அலுவலகப் பணி செய்து வருபவர்.
நான் அந்த வீட்டிற்குச் சென்றேன். காவற்காரர்கள் யாரைப் பார்க்கவேண்டும்? எனக் கேட்டார்கள். நான் அவர்களிடம் இந்த வீட்டிற்கு, யாராவது, கொழும்பிலிருந்து வந்திருக்கிறார்களா? எனக் கேட்டேன். உடனே, ஆமாம். எங்கள் முதலாளியைப் பார்க்க ஒரு இளம் தம்பதியினரும், பெண்ணின் தாயாரும் கொழும்பிலிருந்து வந்திருக்கிறார்கள். கடந்த நான்கு நாட்களாக இருக்கிறார்கள். மேலும் “5 நாட்கள்” இருப்பார்கள் எனக் கூறினார்.உடனே, நான் அவரிடம், நான் அவர்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன் எனக் கூறி, உள்ளே செல்ல அனுமதிக்குமாறுக் கேட்டேன். அவரும் தொலைப்பேசியில் “ஊர்ஜிதம்” செய்துகொண்டு, உள்ளே செல்ல அனுமதிக் கொடுத்தார்.
நான் உள்ளே சென்று, கொழும்பிலிருந்து வந்திருந்த விருந்தினரைக் கண்டேன். மேலும் அவர்களிடம் பேசியதிலிருந்து அவர்கள் வருடம் தோறும், இவர்கள் வீட்டிற்கு வருவதாகவும், இந்த வீட்டார், அவர்கள் வீட்டிற்குப் போய் தங்குவதும் வழக்கம் என்று கூறவே, எனக்கிருந்த “ஆச்சரியம்” உச்சத்தை அடைந்துவிட்டது.
நான் அந்த தாயாரிடம், இந்த வீட்டின் உரிமையாளரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டேன். அதற்கு பதிலாக இவர் திரு.முருகப்பன், இவருடைய தகப்பனார், என்னுடையத் தகப்பனாரைப்போல, “போட்டிங் கிளப் தலைவராக” இருந்தார். எனவே, அவர்கள் இருவரும் நண்பர்கள். அந்த நட்பு இன்றுவரை “எங்கள் தலைமுறையிலும்” தொடர்கிறது என்றுக் கூறினார்கள்.
நான் அவர்களிடம், இவர் ஒரு 12,000 கோடி மதிப்புள்ள கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது தெரியுமா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது என பதிலளித்தனர். மேலும், அவர்கள் கூறிய சம்பவம் எனக்கு மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தது, அவர்கள் கூறினார்கள்… நேற்று இரவு எனக்கு சற்று சுகவீனமாக இருந்தது. திரு.முருகப்பன் அவர்கள், தானாகவே காரை ஓட்டிச்கொண்டு, என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். தினமும் அவருடைய மனைவிதான் எங்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார். இவர்களுக்கு ஒரு பெரிய “கம்பெனி (தொழிற்சாலை)” இருப்பதே, எங்களுக்குத் தெரியாது எனவும் கூறினார்கள்.
மூன்று தலைமுறையாக, தமிழகத்தின் முன்னனி நிறுவனமாய், அதின் உரிமையாளராய், அமெரிக்க தேசத்தில் உயர் கல்வி கற்று, தங்கள் நிறுவனத்தை பல்நாட்டு நிறுவனமாய், உயர்த்தக்கூடிய திறமையும், செல்வமும், கல்வியும் உடைய சீமானுக்கு இருந்த, மனித நேயமும், பாசமும், தாழ்மையும் என்னைத் தலைகுனியச் செய்துவிட்டது.
இந்த சம்பவம் நம்தாண்டவர், தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத்.5:3) என்றுக் கூறிய வார்த்தைகளை நினைப்பூட்டியது.தேவப் பிள்ளைகளாகிய நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு, தாழ்மையையும் கூட்டிக் கொள்வோம். ஐசுவரியத்தையும், மகிமையையும், ஜீவனையும் நிறைவாய் பெற்றுக்கொள்வோம்.
“தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” நீதி.22:4