இவனோ அழகானவன், வாத்தியம் வாசிப்பதில் வல்லவன். ஆனால் இவர் குடும்பத்தினரோ அவனை வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்திட அனுப்புகின்றனர். ஏழையாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக்கூடாது என்பார்கள். இவனோ எட்டாவது பிள்ளையாய்ப் பிறந்து குடும்பத்தாலே புறக்கணிக்கப்படுகிறான்.
ஏலா பள்ளத்தாக்கிலே, பெலிஸ்தியரோடு யுத்தம்பண்ணும் சகோதரருக்கு பாசமாக, அப்பங்களையும், பால் கட்டிகளையும் எடுத்துச் செல்கிறான்.
இவனைக் கண்ட மூத்த சகோதரன் எலியாப்போ, இவனை அகங்காரம் பிடித்தவன் என்றும், துணிகரம் கொண்டவன் எனவும், வசைப்பாடி, வனாந்திரத்திற்கு மீண்டும் விரட்டிட நினைக்கிறான். எகிப்தின் அரக்கன் கோலியாத், இஸ்ரவேலை நிந்தித்தபோது, இஸ்ரவேலின் யுத்த வீரர் அனைவரும், ஓடி ஒளிந்தாலும், இவனோ பிரச்சனைக்கு தீர்வு காணத் துடிக்கிறான்.
நாட்டின் அரசனே இவனைப் பார்த்து நீ இளைஞன். அந்த பெலிஸ்தியனை எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் இயலாது எனத் தடுத்தாலும், முயற்சியைத் தொடர்கிறான்.
மேலும் தாவீது சவுலிடம் தான் எவ்வாறு ஒரு சாதாரண ஆட்டினைக் காத்திட, ஒருமுறை சிங்கத்தையும், ஒருமுறை கரடியையும், உயிரைப் பணயம் வைத்துக் கொன்றதை விவரிக்கிறான். இஸ்ரவேலின் பெரும் வீரரெல்லாம், அந்த பெலிஸ்தியன், ஜீவனுள்ள தேவனை நிந்தித்ததை, நாற்பது நாட்களாய் சகித்தாலும், இவனோ பொறுக்கமாட்டாமல் வெகுண்டு எழுகிறான்.
தான் மேய்த்து வந்த ஆடுகளைக் காத்திட போராடியவன், ஜீவனுள்ள தேவன்மேல் வைராக்கியம் கொண்டவன், வெறும் கூழாங் கல்லினால், அந்த அரக்கனை வீழ்த்துகிறான். அவன் வீசிய அந்தக் கூழாங்கல்லோடு, அவன் தன்னுடைய கொஞ்சம் ஆடுகளைக் காத்திட செய்தப் பிரயாசங்களும், தன்னுடைய தேவன் மீது வைத்திருந்த வைராக்கியமும் சேர்ந்தே கிரியைச் செய்கிறது.
கொஞ்சத்தில் உண்மை இல்லாதவர், தேவன்பேரில் வைராக்கியம் பாராட்டாதவர், கோலியாத் வரும்போது, பயத்தில் வெறும் கல் தடுக்கியே, கீழே விழுந்துவிடுவார். கர்த்தரும் கைவிடுவார். கொடுக்கப்பட்ட கொஞ்ச ஊழியத்தை உண்மையாய்ச் செய்வோம். கர்த்தருக்காய் வைராக்கியம் காட்டுவோம். கோலியாத்தை மடங்கடிக்க கர்த்தர் இறங்கி வருவார்.