சில வாரங்களுக்கு முன்பாக, நான் என்னுடைய அலுவலகத்திலே, மாலை நேரத்தில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். இரவு நேரமாகிவிட்டது. ஆனால் எனக்குத் தெரியவில்லை. அனைவரும் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டனர். மதுரையைச் சேர்ந்த ஒரு இளைஞன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் வந்து, சார், நீங்க ஏதோ சமூக சேவை செய்வதாகக் கேள்விப்பட்டேன். மதுரையில் எங்கள் குடும்பமும், “இளைஞர் நகரம்” அமைப்பின் மூலம், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். அந்த அமைப்பிற்கு முன்புபோல, அயல்நாட்டு உதவிகள் எதுவுமில்லை. எனவே நாங்கள், உதவிசெய்யக் கூடியவர்களிடம், நன்கொடைகள் பெற்று, சமுதாய முன்னேற்றத்திற்கு உழைக்கிறோம் என்றுக் கூறினான். அவன் மிகவும் திறமையான, அழகான, பண்பான மென்பொருள் பொறியாளர்.
நான் அவனுக்கு இயேசுவின் அன்பினைக் காட்ட, இதுவே தக்க தருணம் எனக் கருதினேன். நான் அவனிடம், தம்பி, உலகம் அனைத்தையும் ஒரே ஆண்டவர் உருவாக்கினார். மனிதனையும் அவரே உருவாக்கினார். மனிதன் ஒருதரம் பிறந்து, பின்பு நித்திய நியாயத்தீர்ப்பு அடைய, கடவுள் சித்தம் கொண்டுள்ளார். எனவே பல்வேறு பிறவிகள், வாய்ப்புகள் நமக்கு கிடையாது.இறைவன் எந்த மதத்தையும் ஸ்தாபிக்க இந்த உலகத்திற்கு வரவில்லை. ஆனால், அவர் மனிதனின் பாவங்களைப் போக்க, தன்னுயிரையேக் கொடுத்து, தன்னடைய இரத்தத்தினால், தன்னை விசுவாசிக்கும் அனைவரும் பாவ மன்னிப்பு பெற்றிடவும், நியாயத்தீர்ப்பின் நாளிலே, இரக்கம் பெற்று, சொர்க்க ராஜ்யம் அடையும் பாக்கியத்தை எல்லா மனிதரும் இலவசமாக அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் ஈடில்லா நித்தியப் பெருவாழ்வு பெற்று வாழ்ந்திடவும், இயேசு என்ற பெயரில் மனிதனாக அவதரித்தார்.
நமக்காக சிலுவையில் பலியான இயேசுவே வழி, சத்தியம், ஜீவன், சொர்க்கத்திற்கு செல்லும் ஒரே வழி என்பதை விவரித்துக் கூறினேன்.
மேலும் நான் அந்த சகோதரனிடம், இயேசுகிறிஸ்து மத்தேயு 25:32-34 வசனங்களில் கடைசி நியாயத்தீர்ப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் நீங்கள் செய்யும் அனைத்து “நற்கிரியைகளும் அடங்கும்”. எனவே நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், பரலோக ராஜ்யத்திற்கு சமீபமானவர்கள்….
ஆனால் நீங்கள் இன்னமும் உள்ளே பிரவேசிக்க “விண்ணப்ப படிவம்” அனுப்பவில்லை, அவ்வளவுதான் என்றுக் கூறினேன்.
B.A. படிப்பு படித்தவர் அனைவருக்கும் M.A. படிப்பு படிக்க தகுதி உண்டு. ஆனால் அவர்கள் அதை அடைந்திட “விண்ணப்ப படிவம்” ஒன்றினை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
“இயேசுவே வாசல்” அவர்மூலம் மட்டுமே பரலோக வழியைக் காணமுடியும், சென்றடைய முடியும். எனவே நாம் நம்முடைய பாவங்களை மன்னிக்க அவரிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறினேன்.
மேலும் நான், அவரிடம், அநேகர் இயேசுவிடம் தங்கள் பாவங்களை மன்னிக்கும்படி “விண்ணப்ப படிவம்” கொடுத்தும், இயேசு கூறிய நற்கிரியைகளைச் செய்யாவிட்டால் “B.A. படிக்காமலேயே M.A. படிப்பிற்கு விண்ணப்ப படிவம்” அனுப்புவது போல இருக்கும்.
There will be application, but no Qualification
உங்களைப் பொறுத்தவரை தகுதி (Qualification) இருக்கிறது. இன்னமும் இயேசுவிடம் “விண்ணப்பம்” செய்யவில்லை. உலகில் அநேகர் “விண்ணப்பம்” (application) இயேசுவிடம் செய்தவர்கள், அவர் கூறிய தகுதிகள் (Qualification) இல்லாதபடி, தங்கள் சுய நலத்திற்காகவே வாழ்ந்து வருகிறார்கள்.
கடைசி நியாயத்தீர்ப்பின்போது….
“…இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” (யாக்.2:13) என்று விவரித்துக் கூறினேன். அவனும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான்.