சில நாட்கள் முன்பாக, நான் புதுதில்லி விமான நிலையத்தில், சென்னை விமானத்திற்காக காத்திருந்தேன். அன்று விமானம் தாமதமாகப் புறப்பட்டது. எனவே விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
இந்த இடர்பாடுகள் மத்தியில், ஒரு மனிதர், மிக அமைதியாக, தன்னுடைய கைப்பேசியில், ஓசியா தீர்க்கதரிசனப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அது ஒரு கத்தோலிக்க வேதாகமம்.
எனக்கு சந்தோசமாக இருந்தது. எனவே நான் அவர் அருகில் சென்று, அமர்ந்துகொண்டு, பேச ஆரம்பித்தேன். அவர் என்னிடம்… நான் பல்லாவரம் பகுதியில் வசிப்பதாகவும், அங்குள்ள கத்தோலிக்க திருச்சபையின் தீவிர உறுப்பினர் எனவும் சொல்லி பெருமிதம் கொண்டார்.அவர் ஒரு “மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்” அடிக்கடி “புது தில்லி” சென்று வருபவர். ஆலயம் செல்வதிலும், வேத வாசிப்பிலும் வைராக்கியம் கொண்டவர்.
நான் அவரிடம்…. கிறிஸ்தவத்தின் மேன்மையே, நாம் ஆண்டவரிடம் பாவத்தை அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவத்தை மன்னித்து, புது வாழ்வு தரும் அனுபவமே, என்று கூறினேன். மேலும்… “பாவ மன்னிப்பு” என்பது கிறிஸ்துவினால் மட்டுமே கிடைக்கிறது. ஏனென்றால் “கிறிஸ்து இயேசு மட்டுமே” மனிதனுடைய பாவ விமோசனத்திற்காக, தன்னுடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாகக் கொடுத்து, பிசாசை ஜெயித்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்று கூறினேன்.
அதற்கு அவர் என்னிடம், சார் நாம் அப்படிக் கூறுவது தவறு, எப்படி நமக்கு கிறிஸ்து இருக்கிறாரோ, அதைப்போல, ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சொர்க்கத்திற்குச் செல்லவும், பாவ மன்னிப்பு அடையவும் வித்தியாசமான வழிகள் இருக்கின்றன என்றார்.
நான் அவருக்குப் பிரதியுத்திரமாக, இயேசு “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று கூறியதைச் சுட்டிக் காட்டினேன்.
அவரோ, இது கிறிஸ்தவர்களுக்காக இயேசு சொன்னது. மற்ற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு வழிகள் இருக்கும். “இயேசுவே மானிடர் அனைவருக்கும் ஒரே வழி” எனக் கூறுவது தவறு என்று வாதிட்டார்.
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எப்படி வேதத்தில் வாஞ்சையாயிருந்து, ஆலயத்திற்கு செல்வதில் தீவிரமாய் இருப்பவரே, இப்படித் தடுமாறினால், மற்றவர் எப்படி இருப்பாரோ என அங்கலாய்த்தேன்.
இதற்கிடையில் சென்னை வந்தடையவே, விமான நிலையத்திலிருந்து, என்னுடைய வீடு செல்ல ஒரு வாகனத்தில் பயணித்தேன். அந்த வாகன ஓட்டியும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். நான் அவரிடம், புது தில்லி விமான நிலையத்தில், நான் சந்தித்த மனிதனைப் பற்றியும், அவர் “இயேசு அல்லாமல் இரட்சிப்பு அடைய வேறு வழி இருப்பதாக” நம்புவதைப் பற்றியும் கூறி, இவருடைய கருத்தைக் கேட்டேன்.
இவரோ, உடனடியாக, தானும் அந்தக் கருத்தை ஆமோதிப்பதாகக் கூறினார். சத்துரு “எம்மதமும் சம்மதம்” என்றக் கொள்கையை, கிறிஸ்தவத்திற்குள்ளேயே புகுத்திவிட்டான். கிறிஸ்தவத்தின் மேன்மையை குலைக்கப் பார்க்கிறான்.
“இயேசுவே ஒரே வழி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம். ஊருக்கெல்லாம் சாற்றுவோம். தேசம் தேவனை அறியும்.