தன் பிழையை உணருகிறவன் யார்?

15 ஆண்டுகளுக்கு முன்பாக, எனது உறவினர் ஒருவர் திடீரென அலைபேசியில் என்னை அழைத்தார். அவர் என்னிடம், எங்கே இருக்கிறாய் எனக் கேட்டார்? நான் சென்னையில், தாம்பரம் அருகே ஒரு “பிரஷ் உற்பத்தியாளரைச் சந்திக்கும்படி மதுரையிலிருந்து இன்று காலை வந்தேன், மாலையில் மதுரைக்குத் திரும்புவேன்” எனக் கூறினேன்.அதற்குப் பிரதியுத்திரமாக, அந்த நபர், அவரும் அன்று காலைதான் சென்னைக்கு வந்ததாகவும், அவரும் தாம்பரம் அருகேயுள்ள, ஒரு வேதாகமக் கல்லூரியில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு அன்றையதினம் “முனைவர்” பட்டம் (D.Min) வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார். அவர் ஏற்கனவே ஊழியத்தில் இருப்பவர். மேலும் அவர் வேதாகமக் கல்வியும் கற்றவர். எனக்கு அந்த “பட்டமளிப்பு விழாவில்” கலந்துகொள்ள வாய்ப்பு இருந்தபடியினால் நானும் அங்கு சென்றேன்.

அந்த பட்டமளிப்பு விழா மிக விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. அநேக விசேஷித்த தேவ மனிதர்கள், அந்த வேதாகமக் கல்லூரியில் கற்று, B.TH,B.D,M.TH.D.Minஎன பல பட்டங்களைப் பெற்றதைக் காணமுடிந்தது. அன்று பட்டம் பெற்ற எனது உறவினரும், அவரது D.Min. படிப்பிற்குப் பின்பு தொடர்ந்து படித்தால் P.hd. கிடைக்கும் என, மீண்டும் “3 ஆண்டுகள்” படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

நான் அந்த நபரிடம், உங்கள் வேதாகமக் கல்லூரி தலைவரிடம் பேசியிருக்கிறாயா? எனக் கேட்டேன். அவரோ, என்னிடம் பிரதியுத்திரமாக, அவர் மிகவும் பெரிய அந்தஸ்தில் இருப்பவர், அமெரிக்காவில் வசிக்கிறார், பெரிய பல்கலைக் கழகம் ஒன்றினை நடத்துகிறார். அவர் வருடம் ஒரு முறை தான், பட்டமளிப்பு விழாவிற்காக மட்டும் இந்தியா வருவார் என பதிலளித்தார்.நான் ஆர்வ மிகுதியால், அந்த வேதாகமக் கல்லூரியின் தலைவரைக் கண்டு பேசினேன். நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிவதையும், ஊழிய அனுபவங்களையும் அவரிடம் கூறியபோது, அவர் என்னிடம், தன்னுடைய மின்னஞ்சல் (E-mail) முகவரியைக் கொடுத்து, விரிவான விண்ணப்பம் ஒன்றினை, அவருக்கு நேரடியாக அனுப்பக் கூறினார். நானும், அவர் கேட்டுக்கொண்டபடி, என்னைப் பற்றியும், என்னுடைய ஊழிய அனுபவங்கள் பற்றியும், அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து அவருடைய தாம்பரம் அலுவலகத்திலிருந்து, நான் நேரடியாகவே, வேதாகமத்தில் P.hd. படிக்க தேர்வாகி இருப்பதாகவும், உடனடியாக பணத்தைக் கட்டி, சேரும்படியாகவும் ஒரு கடிதம் வந்தது. நானும் அந்தப் படிப்பில் சேர்ந்தேன். புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. நான் அவற்றை படித்துப் பார்த்தேன். எனக்கு அதிலே அதிக நாட்டமில்லாமல் இருந்தது. 

அவர்கள் சில புத்தகங்கள் அனுப்புவார்கள். பின்பு அந்தப் பாடத் திட்டத்திலே ஒரு “தேர்வு” இருக்கும். அந்த தேர்வினை வீட்டிலிருந்தே எழுதலாம். நாம் “விடைத்தாளை” அவர்களுக்கு அனுப்பினால், அவர்கள் அதைத் திருத்தி மதிப்பீடு செய்வார்கள்.

அந்நாட்களில், நான் மாதத்தில் “20 நாட்கள்” வரை, அலுவலகப் பணியின் நிமித்தம் பயணம் செய்வது வழக்கம். எனவே நான் இந்தப் பாடபுத்தகங்களைப் பற்றியோ, தேர்வுகளைப் பற்றியோ சிந்திக்கவேயில்லை.

இதற்கிடையில் என்னுடைய மனைவி, விளையாட்டுப் போக்கில் இந்த தேர்வுகளை எழுதி, அனுப்பி வைத்திருக்கிறாள். அவர்களும் மதிப்பீடு செய்து வந்திருக்கிறார்கள். திடீரென ஒருநாள், அந்த வேதாகமக் கல்லூரியிலிருந்து, எனக்கு அழைப்பு வந்தது. நான் B+ எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், ஒரு “ஆய்வறிக்கையை” சமர்ப்பித்தால் “P.hd.டாக்டர் பட்டம்” தரப் போவதாகவும் கூறினர்.

நான் அவர்களிடம், நான் சேர்ந்தது உண்மைதான். ஆனால் தேர்வுகளை எனக்கு எழுத நேரமில்லாதக் காரணத்தினால், என்னுடைய மனைவி நேரப் போக்கிற்காக எழுதி அனுப்பியிருக்கிறாள். எனவே, எனக்கு அந்தப் பட்டம் வேண்டாம் எனக் கூறினேன்.

அவர்களோ என்னை விடாது, அழைத்துக்கொண்டே இருந்தனர். நானோ, திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். ஏனெனில், இந்தப் பட்டத்தை நான் வாங்கி, வெளிப்படையாகப் பயன்படுத்தாவிட்டாலும் அவர்களுடைய “இணையதளத்தில்” என்னுடையப் பெயரும் அவர்களுடைய பட்டியலில் இடம்பெறும். நானும், வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வோடு வாழ நேரிடும். யூதாஸைப் போல, வெள்ளிக் காசை திரும்பக் கொடுத்தாலும், வாங்கவோ, செய்தக் குற்றத்தைப் பரிகரிக்கவோ வாய்ப்புகள் கிடைக்காமற் போய்விடும். கர்த்தர் என்னை இந்தப் பெரியத் தீங்கிலிருந்து கிருபையாகக் காத்தார்.

இன்றைக்கும் அநேகர், தங்கள் பாவங்களை மறைக்காமல் ஆண்டவரிடம் அறிக்கையிட்டாலும், மனிதர்களிடம் ஒப்புரவாக முடியாமல் அங்கலாய்க்கிறார்கள். “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” (சங்.19:12,13)



Author

You May Also Like…

Share This