கடந்த மாதத்தில், வங்காள தேசத்தின், மிகப்பெரிய செல்வந்தரும், “1 லட்சம் பேர்” பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளருமாகிய ஒரு நபரைச் சந்தித்தேன். அவருடைய தந்தையார், அந்நாட்டின் ராணுவத் தலைவராக இருந்தவர். இவரும் அயல் நாடுகளில் மெத்தப் படித்தவர். துடிப்புள்ள இளைஞர். அவருடைய நிறுவனத்தில் “50க்கும் மேற்பட்ட” பலதரப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அவர் ஒரு புதிய தொழில் ஒன்றை, அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து ஆரம்பிக்க முயற்சித்து வருகிறார். நான் அந்த இரு நிறுவனங்களிடையே, புரிதல் ஒப்பந்தம் ஏற்படுத்த, என்னுடைய நிறுவனம் சார்பாகச் சென்றிருந்தேன்.
அந்த நிறுவனம் ரூ.30,000 கோடிக்கும் மேலாக வர்த்தகம் செய்கிறார்கள். அது அந்த நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. அந்த நிறுவனம் உலகின் 141 நாடுகளுக்கு பல்வேறு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். அங்கு பணிபுரியும் ஒவ்வொரு அதிகாரிகளும், அவர்கள் உரிமையாளரை மிகவும் உயர்வாக, மதிப்பதைக் காண முடிந்தது.நாங்கள் மதியம் 3:30 மணிக்கு அவருடைய அலுவலகம் சென்றடைந்தோம். அங்கிருந்த பணியாளர் அனைவரும் ஒன்றுபோல சீருடை அணிந்திருந்தனர். கீழ்நிலை ஊழியருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் வித்தியாசமே தெரியவில்லை. இதற்கிடையில், ஒருவர் வரவேற்பறைக்கு வந்து, எங்களை உள்ளே வருமாறு அழைத்தார். கதவுகளை எல்லாம் திறந்தும்விட்டார். நான் அந்த நபரை, உரிமையாளரின் உதவியாளர் என நினைத்தேன். ஆனால் அந்த நபர், உரிமையாளரின் இருக்கையில் அமரவே, அவரே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கண்டுகொண்டேன். மிகவும் எளிமையாக இருந்தார்.
அவருக்கு வயது 40 இருக்கும். மிகவும் அழகிய ஆண் மகனாக இருந்தார். அவருக்கு அறிவும், ஆற்றலும் உலகே வியக்கும் அளவிற்கு இருந்தது. உலக நாடுகளின் அனைத்து தரப்பட்ட வர்த்தகங்கள் பற்றியும் மிகவும் தெளிவாகப் பேசினார். இதற்கிடையில் மாலை 4:00 மணி ஆயிற்று. அவர் எங்களிடம் சற்று பொறுத்து இருக்க கூறி… அருகிலிருந்த கண்ணாடி அறைக்கு, ஒரு தரை விரிப்புடன் சென்றார். எங்களால் அவரைக் காண முடிந்தது. அவருக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை.அவர் தரையிலே விரிப்பை விரித்து, சாஷ்டாங்கமாக விழுந்து, தொழுகை நடத்தினார்.பின்பு எங்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார். மாலை 6:00 மணி ஆயிற்று. அவர் மீண்டுமாக, தரை விரிப்புடன், பக்கத்து அறைக்குச் சென்று, முன்பு செய்ததைப் போலவே மீண்டுமாகத் தொழுகை செய்தார்.
ஒரு பெரிய நாட்டின் முதன்மைப் பணக்காரன், தன்னுடைய இறை நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை, செல்வமோ, கல்வியோ, சமூக அந்தஸ்தோ, மற்றவர் பற்றிய எண்ணமோ, அவர், அவருடைய கடமைகளைச் செய்வதை நிறுத்த முடியவில்லை.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, ஒரு பெரிய சவாலாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. இதையே அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 1:16ல், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” எனப் பறை சாற்றுகிறார்.
சுவிசேஷம் என்பது ஏதோ சாதாரண இறை நம்பிக்கையல்ல, ஒரு தனிப்பட்ட மனிதனை “நரக ஆக்கினையிலிருந்து தப்புவிக்கும் மகா வல்லமை”. இப்படிப்பட்ட மகா பெரிய இரட்சிப்பின் வழியை மற்றவர்களுக்கு காட்டிட வாய்ப்பு இருக்கும்போது, நாம் ஏன் நழுவ விட வேண்டும். தீவிரமாய் செயல்படுவோம்.
இயேசு சீக்கிரம் வருகிறார்.